இந்தியத் துணைக் கண்டத்தின் நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அதனுடைய மதச் சார்பின்மைக் கொள்கை என்றால் மிகையாகாது. நாட்டின் அரசியல் சட்டம் என்ற மணிமுடியின் ஒளிவீசும் வைரக் கல்லாக இருப்பது இந்த மதச்சார்பின்மைத் தத்துவமே.
நாட்டு மக்களிடையே மனித நேயத்தைப் பேணிக் காக்கும் அரணாக விளங்குவதும் இத்தத்துவமே. மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு ஊனம் ஏற்படாத வகையிலும், அதனை உதாசீனம் செய்யாத வகையிலும் கட்டிக் காப்பதும், கண்காணிப்பதும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக உள்ளது. மேலும் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் மேல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டவர்கள் என்ற வகையில் அவர்கள் செயல்பட வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
இந்நிலையில், அரசு பொறுப்பில் உள்ளவர்கள் மதச்சார்பின்மைத் தத்துவத்துக்கு முரணாக, மதிப்புத் தராத வகையில் செயல்படும் வேளையில், நாட்டின் மக்கள், வியப்படைவதோடு, நாட்டின் ஒற்றுமைக் கருதி வேதனை அடையவே செய்வார்கள்.
அதன் வெளிப்பாடான ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு பார்ப்போம். பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று இந்து மதத்தினர் மகாசிவராத்ரி நாள் என்று கொண்டாடினர். கோயம்புத்தூர், வெள்ளியங்கிரி மலைப்பகுதியை யொட்டி, பல ஏக்கர் வனப்பகுதி சார்ந்த இடத்தில், ஜக்கி வாசுதேவ் என்பவர் பெரிய சிவன் பொம்மையை வைத்து ஈஷா என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
சிவராத்திரி நாளன்று ஈஷா ஆஸ்ரமத்தில் மாலை 6 மணி துவங்கி, மறுநாள் காலை 6 மணிவரை, பூசை, ஆட்டம், பாட்டம், முழக்கம், ருத்ராட்ச தீட்சை என்ற பல்வகை நிகழ்ச்சிகளை, ஆதியோகி அவர்கள் சில ஆண்டு களாக நடத்தி வருகிறார். இந்த ஈஷா அமைப்பைப் பற்றிய பல நீதிமன்ற வழக்குச் செய்திகளும், நிருவாகத்தில் பல புலப்படாத புதிர்களும் உள்ளதாக செய்திகள் ஊடகங்கள் வாயிலாக கசிவதும் உண்டு. கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இரண்டு மகள்களை ஈஷா அமைப்பு மூளைச் சலவை செய்து தடம் மாறிப் போன வேதனையை வெளி உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளதை பலர் கூறி வருகின்றனர்.
இத்தகைய பின்புலத்தைக் கொண்ட அமைப்பு சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க நம் நாட்டின் மதிக்கத்தக்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் அம்மையார் அவர்களை அழைத்தது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது. மதச் சார்பின்மை, பொறுப்பின் தன்மைக்கேற்ப, வழிகாட்டியாக, முன் மாதிரியாக இருக்க வேண்டும். அனைத்து மதத்தினரும், குடியரசுத் தலைவர் மதச்சார்பின்மையைக் காப்பவராக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது நியாயத்தின் பாற்பட்டதாகாதா?
நாடு விடுதலை பெற்று, அதன் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்கள் மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடிப்பதில் எப்படி கவனமாக இருந்தார் என்பதைப் பதிவு செய்வது பயனளிக்கும்.
அன்றைய குடியரசத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், குஜராத்தில் புதுப்பிக்கப்பட்ட சோமநாதத் கோயிலின் துவக்க விழாவில் பங்கேற்க இருந்தார். பிரதமர் நேரு, மதச் சார்பின்மை நாட்டின் குடியரசுத் தலைவர், மதச் சார்புடைய நிகழ்ச்சியில் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு குறிப்பை அனுப்பினார்.
இதே போன்று கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி விழாவில் கலந்துகொள்ளச் செல்வது, மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது என்று சுட்டிக்காட்டினார் நேரு.
இவை, இன்றைய ஆட்சியாளர் களுக்கு வழிகாட்டியாக இருந்து மதச் சார்பின்மைத் தன்மையை நாட்டின் நலன் கருதி அதனை நீர்த்துப் போகாமல் இருக்கச் செயல்பட தூண்டுகோலாக அமையட்டும்.
No comments:
Post a Comment