உச்சநீதிமன்றத்தின் கடிவாளம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

உச்சநீதிமன்றத்தின் கடிவாளம்!

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த  நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒரு தடையைப் போட்டுள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில்தான் தேர்தல் ஆணை யாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.  தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர் களையும், இதன்படிதான் இனிமேல் தேர்வு செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ஒன்றிய அரசின் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளில் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநிலங்களின் தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே!

ஆனால், இது போன்ற நியமனங்களை ஒன்றிய அரசே தீர்மானிக்கும் நிலைதான் இருந்து வருகிறது.

 தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருப்பவர் அருண் கோயல்.  தான் வகித்து வந்த ஒன்றிய அரசின் பதவிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு,  நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கடுமையாக சாடியுள்ளனர்.  ஆனால், ஒன்றிய அரசின் தரப்பில்,  வாதாடிய தலைமை வழக்குரைஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது  என்று கூறி, இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.

இந்த வழக்கின் காரசாரமான விசாரணை களைத் தொடர்ந்து, தற்போது உச்சநீதிமன்றம் மிகச் சரியான  தீர்ப்பு வழங்கிக் கடிவாளம் போட்டுள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி தகுதிக்கு - எந்தவொரு கட்சியும் தகுதி பெறவில்லை என்றால், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரைக் குழுவில் இணைத்து, தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒன்றியஅரசு முறையாக  சட்டம் இயற்றும் வரை இந்தக் குழு செயல்படும் என்று அறிவித்துள்ளது.

தன்னதிகாரம் படைத்த அமைப்புகளை எல்லாம் தன் அதிகாரக் கட்டை விரலுக்கும் கீழ்க் கொண்டு வந்து எதேச்சதிகாரத்தின் உச்சியில் மோடி அரசு ஆட்டம் போட்டது. இப்பொழுது உச்சநீதிமன்றம் வலுவான மூக்கணாங் கயிறைப் போட்டு விட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதியை இடித்தவர்களிடத்திலேயே, ராமன் கோயில் கட்டும் உரிமையை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - ஓய்வு பெற்ற ஈரம் காய்வதற்கு முன்பே மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட வில்லையா?

உச்சநீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்புக்குப் பிறகாவது நல்ல புத்தி வருமா ஒன்றிய அரசுக்கு?


No comments:

Post a Comment