அய்தராபாத், மார்ச். 1- குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தனி ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிசு ஆதார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அக்குழந்தைக்கு தனி அடையாளம் பிறந்தவுடனேயே கிடைத்து விடுகிறது. இதனால், அக்குழந்தைக்கு தொடர்ந்து அனைத்து சலுகைகளும் கிடைக்க அந்த ஆதார் அட்டை உதவிகரமாக உள்ளது. பிறப்பு சான்றிதழும் தெலங்கா னாவில் அதன் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள குறியீட்டு எண்ணை கொண்டே வழங்கப்படுகிறது.
மேலும், அதற்கு தேவையான மருத்துவ உதவிகள், அங்கன்வாடி மய்ய உதவிகள், பள்ளி சேர்க்கை என அனைத்துமே அக்குழந்தைக்கு சுலபமாக ஒரு அடையாளத்தை கொடுத்து விடுகிறது. ஆரம்ப சுகாதார மய்யம், ஏரியா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறந்ததும் அதன் நிர்வாகம் ஆதார் பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவ மனைக்கு சென்று, குழந்தையின் புகைப்படத்தை எடுத்து, அதன் முழு விவரங்களை பதிவு செய்து, 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஆதார் அட்டை கிடைக்கும் படி வழி செய்கின்றனர் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள தந்தை அல்லது தாயின் செல்போன் எண்ணுக்கு ஆதார் அட்டையின் லிங்க்கை அனுப்பி விடுகின்றனர். அவர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு இணையதள மய்யத்திற்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment