கேள்வி 1: பகுத்தறிவுப் பாசறை மாணவராக 70 ஆண்டு காலம் கடக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் குறித்து உங்கள் கருத்து?
- இரா.சரவணா, அசோக் நகர்
பதில் 1: 14 வயதில் அவர் தி.மு.க. இளைஞரணியைத் துவக்கி ஆர்வத்துடன் திராவிடக் கருத்தியலில் ஈடு பட்டார் என்றால், அதற்கு முன்பே, குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி - இவைகளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீட்டில் அமர்த்தியே பாடம் சொல்லிக் கொடுத்துப் பக்குவப்படுத்தியுள்ளார். (ஆதாரம்: மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' - நூல்) எனவே, 70ஆவது முதுமை அடையவில்லை. முழு முதிர்ச்சியைப் பெற்று, நாட்டையும், தி.மு.க. என்ற பேரியக்கத்தையும் திறம்பட ஆளுமை செய்து வருகிறார். பகுத்தறிவுப் பாசறை அடுத்தத் தலைமுறை - அமைச்சர் உதயநிதிக்கும் பயன்பட்டு, அவரும் அதனை அறிவியக்க ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி காணுகிறார்!
---
கேள்வி 2: வாரிசு இல்லாத முதியவர்கள் - பிழைப்பை முன்னிட்டு பிள்ளைகள் ஓரிடத்திலும். பெற்றோர் ஓரிடத்திலும் வாழும் நிலையில் இருப்போர், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என பல முதியோர் இன்றைக்குத் தனிமையில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனரே - இதுகுறித்துத் தங்களின் கருத்து?
- ம.காளிதாசன், காஞ்சிபுரம்
பதில் 2: இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை. திருச்சியில் கைவல்யம் முதியோர் இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே, இதற்காகவே துவங்கி நடத்தி வருகிறோம்!
ஆதரவற்ற குழந்தைகளை விட, ஆதரவற்ற அல்லது பராமரிக்கப்பட வாய்ப்பின்றி கை விடப் படும் முதியோர்களுக்கு இல்லங்களை அரசு இன் னும் நிறைய துவக்க வேண்டும். அங்கு ஏற்படும் மனித உறவு வாய்ப்பு அவர்களைக் காப்பாற்றி நல வாழ்வு வாழச் செய்யும்.
சட்டங்கள் தோற்கும் நேரங்களில் சமூகம் வெற்றி வாகை சூடி, மனித நேயக் கொடியைத் தலை தாழா மல் பறக்கச் செய்யும் என்பது உறுதி!
---
கேள்வி 3: அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் உள்ளூர் மொழி தெரியாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்களே - இதுகுறித்துத் தங்கள் கருத்து என்ன?
- வே.செல்வபெருமாள், சோத்துப்பாக்கம்
பதில் 3: வன்மையான கண்டனங்கள் வெளியாவ தோடு, அந்த வங்கிக் கிளைகளை "தமிழ்நாட்டவர் புறக்கணிப்போம்" என்ற ஆர்ப்பாட்டம் ஊர்தோறும் திராவிடர் கழகத்தினர் துவங்கி மற்றவர் ஆதரவோடு நடத்திட தயங்கக் கூடாது! 'குடிசெய்வார்க்கில்லை பருவம்' - மறவாதீர்!
---
கேள்வி 4: தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனி சாமிக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வந்தும் அவர் தரப்புக்குப் பயனில்லையே?
- த.பிரபாகரன், செங்கை
பதில் 4: 'எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை'. எல்லாம் பா.ஜ.க.வின் சித்து விளையாட்டு! பொம்மலாட்ட வியூகம்!!
ஒன்றே ஒன்று - இரட்டை இலையால் புதுபலம் கிடையாது என்ற உண்மை அம்பலமாகிவிட்டது. ஒன்றாயிருந்தபோதுதானே ஆட்சியை இழந்தனர் - தேர்தல்களில் தோற்றனர். அதை அவரும், அவர் களுக்குக் கொம்பு சீவும் பேர்வழிகள், கட்சிகள், காவிகள் ஏனோ வசதியாக மறந்து விடுகிறார்கள்?
---
கேள்வி 5: "பா.ஜ.க. ஆட்சியை விமர்சித்ததால் தமிழிசை சவுந்தரராஜனால் புகார் செய்யப்பட்டு நடவடிக்கைக்கு ஆளான கல்லூரி மாணவி சோபியா விற்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இந்தப் போக்கு மனித உரிமை மீறலாகும்" என்று மனித உரிமை ஆணையம் கூறி உள்ளதே?
- கல.சங்கத்தமிழன், உத்திரமேரூர்
பதில் 5: வரவேற்கத்தக்கதாகும்! பாடம் கற்கட்டும்!
---
கேள்வி 6: திராவிட சித்தாந்தங்களை தரக்குறைவாகப் பேசிய நாம் தமிழர் கட்சியினருக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்கள் கொடுத்துள்ள தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
- சொ.அன்பு, எருக்கமாநகர்
பதில் 6: பா.ஜ.க.வின் பி.டீம்களில் முதன்மையானது அது; இளைஞர்களுக்கு மயக்க பிஸ்கட்டு - ஆனால், புரிதல் ஏற்பட்டு வருகிறது! கொஞ்ச நாளில் மூடப்படும் கடை அது!
---
கேள்வி 7: மூன்று மாநிலங்கள் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகளிலிருந்து இடதுசாரி அணியினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்று கூற முடியுமா?
- ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர்
பதில் 7: பொது எதிரியை மட்டுமே குறி வைத்து களம் அமைத்தல் அவசியம், அவசரம் என்ற பாடம்!
---
கேள்வி 8: எவ்விதமான சோதனைகளும் தங்கள் மனத்தைத் தாக்கினாலும் எப்படி சர்வசாதாரணமாக எதிர்கொள்கிறீர்கள்?
- கே.பாண்டுரங்கன், அரும்பாக்கம்
பதில் 8: பெரியார் என்ற அறிவாயுதம் - பேராயுதத்தை பாதுகாப்புக் கவசமாகவும், பாடமாகவும் கொண்ட மாணவனாக என்றும் இருப்பதால் அப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்கொண்டு வெல்லுதல் எளிது!
---
கேள்வி 9: ஈரோடு கிழக்கில் அமோக வெற்றி பெற்ற பெரியாரின் பேரன் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் படத்திற்கு பாலைக்கொட்டிக் கொண்டாடியவர்கள் குறித்து?
- அ.மனோகரன், மடிப்பாக்கம்
பதில் 9: தவறான கண்ணோட்டத்திற்குரியது - பகுத்தறிவுக்கு விரோதமானது. குழந்தைகளுக்குப் பயன்பட வேண்டிய பாலை இப்படியா பாழாக்குவது? மகா வெட்கம்!
---
கேள்வி 10: நாள்தோறும் வாசிக்கும் பழக்கமுள்ள தாங்கள் நாவல்களும் வாசிப்பதுண்டா? எனில் யாருடைய எழுத்துகள் தங்களைக் கவரும்?
- ம.கவிதா, திருப்பத்தூர்
பதில் 10: உண்டு. முன்பு - மாணவப் பருவத்தில். வி.எஸ்.காண்டேகர், மு.வ. நாவல்களைப் படிப்பேன். ஆங்கிலத்தில் பிரபல அமெரிக்க நாவலாசிரியர் இர்விங் வேலேஸ் (Irving Wallace) எழுதிய அத்தனைப் புதினங்களையும் விரும்பிப் படிப்பேன். மார்க்சிம் கார்க்கி எழுதிய 'தாய்' (Mother) போன்ற புதினங்கள். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) போன்றோர் எழுதிய நாவல் - வ.ரா.வின் புதினங்கள் என்னை ஈர்ப்பவை. நேரத்தைத் தேடுகிறேன்.
No comments:
Post a Comment