ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியாகினர்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரட்டிலம் மாவட்டம், இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், 'ஹோலி பண்டிகை' கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்கச் சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13), தங்கையும் (10) சென்றனர். முதலில் அந்த இளம்பெண் குளத்தில் இறங்கிக் குளித்துள்ளார்.
அப்போது அவர் ஆழமான இடத்திற்குச் சென்றுவிட்டார். இதனால் அவர் நீரில் தத்தளித்தார். இதனைக் கண்ட அந்தப் பெண்ணின் தம்பி மற்றும் தங்கை இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீச்சல் தெரியாததால் அவர்களும் உயிருக்குப் போராடினர். அந்தப் பெண்ணின் கணவரும், அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் குளத்தில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தனர். இறந்த இணையருக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஹோலி என்ற வண்ணம் பூசிக் கொண்டாடும் விழாவின் போது 'பாங்' எனப்படும்
கஞ்சா போன்ற இலையை இடித்து எடுக்கும் சாற்றை பாலில் கலந்து சிறுவர்- பெரியவர், ஆண்கள் - பெண்கள் என்றில்லாமல் அனைவருமே குடித்துப் போதையில் புரள்வார்கள். பெண்களுக்கு இந்தப் போதை தெளிய முழு நாள்கூட ஆகும். இந்தப் போதையோடு ஆற்றில், குளத்தில் இறங்கினால் குளிர்ந்த நீர் உடலில் பட்டால் மேலும் போதை ஏறும். இதனால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுவார்கள். ஹோலி கொண்டாட்டத்தின்போது சாக்கடை, குளம், ஏரியில் விழுந்து சாகும் செய்தி ஒவ்வொரு ஆண்டும் ஹோலிக்கு அடுத்த நாள் சங்கிலித் தொடராக வந்துகொண்டே இருக்கும்.
மதமும், கடவுளும் - பண்டிகைகளும் கற்பனைகள் என்றாலும், மக்களின் மூளையில் படிந்து கிடக்கும் முட்டாள்தனமான பக்தி, புத்தியை மட்டுமல்ல; மனித உயிரையும் பலி வாங்குகிறதே - இதைப்பற்றி யாருக்குக் கவலை?
பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவோர்மீது பாய்ந்து குதறும் குள்ள மனிதர்கள் சிந்திப்பார்களா?
- மயிலாடன்
No comments:
Post a Comment