கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய தேர்வு முறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய தேர்வு முறை

சென்னை மார்ச் 19 தற்போதைய தொழில்நுட்பக் காலத்துக்கேற்ப பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலை, அறிவியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தையும் மாற்றியமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வடிவமைத்துள்ளது. இந்தபுதிய பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டு (2023-2024) முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப 127 இளநிலை, முதுநிலை படிப்புக்கான மாதிரி பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது; தொழில்துறை கருத்துகள், யுஜிசி வழிகாட்டுதல்கள், மற்றும்‘நான் முதல்வன்’ திட்டம் ஆகியவற்றின்படி பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் கூடுதல் திறன்களுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளன. புதியபாடத்திட்டம் அமலான பின்னர் அனைத்து பல்கலைகளிலும் 75 சதவீத பாடங்கள் ஒரே உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். எஞ்சிய 25 சதவீத பாடங்களை உள்ளூர்தொழில் தேவைகளின் அடிப் படையில் அந்தந்த கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்ட நடைமுறையைப் பின்பற்றுவதால் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு கல்வி நிறுவனத்துக்கு மாணவர்கள் மாறுவதற்கு உதவியாக இருக்கும். இளநிலை படிப்புக்கான பாடத் திட்டத்தில் ஏற்கெனவே முதல் 2 பருவங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் உள்ளன. தற்போது புதிய பாடத் திட்டத்தில் 3, 4-ஆவது பருவங்களிலும் மொழிப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மேலும், கலை, அறிவியல்படிப்புகளுக்கான தேர்வு மதிப்பெண் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வுள்ளது. அதன்படி கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி 75 சதவீத மதிப் பெண் ணுக்கு எழுத்துத் தேர்வும், 25 சதவீத மதிப்பெண்ணுக்கு அகமதிப்பீடு தேர்வும் நடத்தப்படும்.

இந்த புதிய மதிப்பெண் நடைமுறைக்கு பல்கலை. துணை வேந்தர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய மதிப்பெண் முறை அனைத்துத் தரப்பு மாணவர்களின் மதிப்பீட்டில் சமநிலையைப் பேண வழி செய்யும். இவ் வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment