சென்னை, மார்ச் 19 நிதியாண்டு முடிவதால் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு வார்டுக்கு தினமும் 100 பில்கள் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் பல ஆயிரம் கட்டிடங்கள், வீடுகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக சொத்து வரிதான் இருக்கிறது.
பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருவதற்கு, பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அதேநேரம், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் இருந்தால் திட்ட பணிகளை வேகமாக முடிக்க முடியும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வரி பாக்கியை முறையாகச் செலுத்தாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கைகளிலும் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. பெருந் தொகையைக் கட்டாமல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. சென்னை யில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்ளும், 2ம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க வேண்டும் என்று வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர் மீது சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment