பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - ஆடைப் பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தக்கோரி 

சென்னை, மார்ச் 19  தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தினை சிப்காட் நிறுவனத் தின் மூலம் செயல்படுத்திட வேண்டுமெனத் தெரிவித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் 18.3.2023 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத் தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இப்பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் முகமையாகச் செயல்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இப்பூங்கா அமையவுள்ள இடத்தில் ஏற்கெனவே 1,052 ஏக்கர் நிலத்தினை தன்வசம் வைத்துள்ளதாகவும், அதனால் அந்நிறுவனம் இந்தத் திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்திடத் தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது என்றும், தற்போது மாநிலத்தில், 2,890 நிறுவனங்கள் 3,94,785 பணியாளர்களுடன், 38,522 ஏக்கரில் 28 தொழிற் பேட்டைகளை அந்நிறுவனம் நிறுவியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்கிட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றி யைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், பி.எம். மித்ரா பூங்காவினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால், இந்தத் திட்டத்தின் நோக் கங்களை வெற்றிகரமாக அடைந்திட இயலும் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக நம்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கெனவே பல்வேறு தொழிற் பூங்காக்களை மேம்படுத்தி, செயல்படுத்துவதில் உறுதியான சாதனை நிகழ்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத் தின்மூலம், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினைச் செயல்படுத்திட வேண்டுமென்று தமிழ்நாடு முதல மைச்சர்  மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியையும், ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment