பா.ஜ.க.வின் தமிழ்நாடுத் தலைவர் அண்ணாமலை யாருக்கு கருஞ்சட்டை வணக்கம்!
கருநாடக மாநிலத்தில் அய்.பி.எஸ். ஆக பணி புரிந்ததை விட்டுவிட்டு, (யார் தூண்டுதலோ அல்லது உங்களின் மனதின் குரலைக் கேட்டோ) பா.ஜ.க.வில் இணைந்து, லாட்டரி பம்பர் பரிசுபோல திடீரென ஒரே ‘அய்ட் ஜம்ப்பாக' நேரடி தலைவராக நீங்கள் பதவியேற்றீர்கள்! (பல நேரங்களில் எந்தக் கட்சியிலும் சேர்ந்தவுடன் தலைமைப் பதவி கிடைக்காது).
தமிழ்நாட்டுப் பா.ஜ.க.வில்தான் சேர்ந்தவுடன் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி ரெடியாக எவருக்கும் தயாராக இருக்கும்!
அதனால்தானே பல கிரிமினல் குற்றவாளிகள் ‘வேடந்தாங்கலாக', பாதுகாப்பு சரணாலயமாக கமலா லயத்தை நோக்கி வருகிறார்கள் - இப்போதெல்லாம் ‘சீசன்' முடிந்து பறவைகள் வேடந்தாங்கலிலிருந்து பறந்துவிடுவதைப்போல் பறந்தும் விடுகின்றனர்!
பறக்கும்போது நாங்கள் இங்கு தங்கியிருக்க முடியாமல் வேறு சரணாலயம் தேடிச் செல்லக் காரணமே ‘‘இதோ அங்கே இருக்கின்ற ஸ்ரீமான் ‘420 மலை'தான்'' என்று உங்களுக்கு ஒரு பெரும் பட்டத்தையும் அல்லவா வழங்கிவிட்டுச் செல்கின்றனர்!
'கட்சித்தலைவரா?
காவல்துறை அதிகாரியா?'
நீங்கள் கட்சித் தலைவர் பதவியை காவல்துறை அதிகாரியாக நினைத்து நடத்துகிறீர்கள் என்ற ‘‘புகார் களையும் அடுக்கிவிட்டுச்'' செல்லுகிறார்களே!
தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஏற்படுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.)யில் இப்போது எந்தக் கட்சி உள்ளே, எந்தக் கட்சி வெளியே என்பதே புரியாத புதிர்! அது நாளும் ‘தேய் பிறையாகி' வருகிறது. அடிக்கடி நட்டாக் கள்தான் ‘‘விஜயம்'' செய்து தாமரை மலர் கட்டடங்கள் கட்டித் தருகின்றனர்!
தண்ணீர் தடாகத்தில்தான் தாமரை வளரவோ, மலரவோ முடியும்; கட்டடங்கள் கட்டினால் அதனால் தாமரை வளர்ந்துவிடும் என்பது நம்பக் கூடியதா?
சொல்லுவதற்கு மட்டுமே சுவையானது!
‘‘தமிழ்நாட்டில் ஆட்சியை நிறுவிட தனித்தே நிற்கத் திட்டமிடுவேன்'' என்று கூறும் அண்ணாமலையாரே, உங்கள் திட்டம் சொல்வதற்கு வேண்டுமானால் சுவை யாக இருக்கும். ஆனால், அது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தெரியாத ‘அறிவு சூன்யங்கள்!' ஆண்டிகள் கட்டிய மடமாகத்தான் இருந்திருக்கும். முன்பு முயற்சி செய்தபோதெல்லாம் கிடைத்த பழைய பாடத்தை ஏனோ மறந்து புதிய பல்லவி, அனுபல்லவி, பாடிக் கொண்டிருந்தால், அது ஆரம்பத்தில் ‘அடணா' முடிவில் ‘முகாரி' என்ற நிலையில்தானே உள்ளது. அது உங்களது அரசியல் சங்கேதக் கச்சேரியை முடித்துவிடும் இதை உணர்ந்தீர்களா?
'பிராந்திய' கட்சிகளின் ஓசித் தோள்கள்!
எவ்வப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ‘திராவிடக் கட்சிகளின்', உங்கள் மொழியில் கூறவேண்டுமானால், ‘‘பிராந்திய கட்சிகளின்'' வலிமைமிக்க தோள்கள்மீது அமர்ந்து ஓசி சவாரி செய்து எமது உயரத்தைப் பாரீர்! பாரீர்!! ‘‘பராக், பராக்'' என்று கூறி, பஜனை நடத்திய காலம்தவிர, தனித்து நின்று பா.ஜ.க. இதற்குமுன் சில (விஷப்) பரீட்சைகள் நடத்தி, பாடம் கற்றுக் கொண்ட தால்தானே உன் மடி என் கையில்; பிடியும் என் கையில் - எனவேதான் எங்கள் கால்களில் உங்கள் தலை வைத்துள்ள காட்சியை சில ‘‘வளர்ந்த (பிராந்திய)'' திராவிடக் கட்சியை மிரட்டி - ‘ஜீ பூம்பா' காட்டி, ஓசியில் சில சீட்டுகளைக் கூட முன்பு பிடித்துவிட்டீர்கள்!
தமிழ்நாட்டில் தனித்தே பா.ஜ.க. நிற்கவேண்டும், கூட்டணிக் கட்சி தயவு வேண்டாம் என்ற தங்களது வீரப் பிரதாபப் பேச்சு, கட்சி வளர்ச்சிக் கண்ணோட்டத் தூண்டுதல் பேச்சுதானே! ‘நீங்கள் எதைச் சொன்னாலும் தவறாது பெரிய எழுத்துகளால் பிரசுரிக்கக் காத்திருக்கும் அச்சு ஊடகங்களும், உமதருள் தயாபரனே, எந்நாளும் தாங்கள் அல்லவே ‘‘எங்களுக்கான எஜமானர்களின் எஜமானர்'' என்று எட்டுத் திசையும் இல்லாத புகழைத் தேடிக் கற்பித்து பா.ஜ.க.வும் கனவில் முடிசூட்டி, மானசீகத்தில் மகிழ்ச்சிக் கூத்தாடும் மகாத்மியங்களான உங்கள் தொலைக்காட்சி ஊடகங்களும் தமது எஜமானர் குரலை எதிரொலிக்கும் எல்லா நேரத்திலும் ‘எவர் ரெடி'யாக உள்ள நிலையிலும்கூட உங்களின் பரிதாப நிலை என்ன?
தமிழ்நாட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட அவர்களது உணர்வுடன் கலந்து, அந்த உரிமைகளைப் பெற்றுத்தர என்றைக்காவது தமிழ்நாட்டில் போராடியிருக்கிறீர்களா?
மக்கள் பிரச்சினைக்காகப் போராடியதுண்டா?
தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பா.ஜ.க. மாவட்டத் தலைவரைக் கைது செய்ததை எதிர்த்துப் போராட்டம்; எங்காவது குடும்பச் சண்டையில் கொலை நிகழ்ந்தால், அந்தப் பிணத்தை இரவல் வாங்கி வைத்துக்கொண்டு, ‘‘இணையற்ற வீரர்களாகவே - இதற்கெனவே போராடு வோம்'' என்று கூறித்தான் போராடியுள்ளீர்களே தவிர, உங்களை அய்.பி.எஸ். ஆக்கிய சமூகநீதிக்கு எதிராக பல சட்டங்களும், திட்டங்களும் நாளும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் நடத்தப்படுவதை எதிர்க்கக் களம்கூட காணவேண்டாம்; சுட்டிக்காட்டியதாவது உண்டா? அதன்மூலம் பெருமையை வைத்துக்கூட ‘குளிர்காய' முனையவில்லையே!
விதைத்தால்தானே அறுவடை செய்ய முடியும்; உதைத்த காலுக்கு முத்தமிடும் அரசியல் அடிமைகளின் எண்ணிக்கையைப் பெருக்குவது எப்படி என்பதே அனுதினச் சிந்தனையாக இருந்தால், ‘மிஸ்டு கால்' கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்து விடுமா? ஒருபோதும் நடக்காது! நடக்கவே, நடக்காது!!
செத்தொழிந்த, மக்களால் பேசப்படாத சமஸ்கிருத மொழி அளவுக்காவது செம்மொழியான தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று ஒரு ‘‘பவ்வியமான'' அறிக்கைக்கூட விடும் துணிவோ, முயற்சியோ, அக் கறையோ தாங்கள் எடுத்ததுண்டா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீட்டிற்காக என்றாவது குரல் கொடுத்ததுண்டா?
ஒன்றிய அமைச்சர்களை வரவழைத்தால்
தாமரை மலருமா?
‘‘இராமன் பாலம் என்பதற்கு ‘இராம்சேது' ஆதார மில்லை'' என்று ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் பட்டாங்கமாய் போட்டு உடைத்ததற்குப் பிறகாவது, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைத் தொடங்குங்கள்; அதன்மூலம் தமிழ்நாடும், இந்தியாவும் செழுமையாகும் என்று எங்காவது இதுநாள் வரை செப்பியதுண்டா?
பிரதமரையும், ஒன்றிய அமைச்சர்களையும் அடிக் கடி தமிழ்நாட்டுக்கு வரவழைத்துப் படம் காட்டினால், பா.ஜ.க. திடீர் சமையல் சாம்பார்போல ஓங்கி, வளர்ந்த இந்த உத்தமர்கள் புகழ்பாடுமா?
கடிதம் நீண்டு விட்டது; நாளையும் எழுதுவோம் அண்ணாமலையாரே, இனி உங்கள் ஆளுமையே என்பதுகூட கேள்விக்குறியாக நிற்கிறதே!
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால், தலைமைப் பதவியை ராஜினாமா செய்வேன் என்றீர்களே, இதி லாவது உறுதியாக இருப்பீர்களா?
சொன்ன சொல் காத்த சூராதி சூரர் என்ற பட்டமாவது மிஞ்சுமே - எங்கே பார்ப்போம் - எஞ்சியது நாளை!
இப்படிக்கு
காவியின் நிரந்தரக் கொள்கை எதிரியான
கருஞ்சட்டை
No comments:
Post a Comment