சில எண்ண ஓட்டங்கள்:
45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (3)
தலைவர் தந்தை பெரியாருக் குப்பின், அன்னையார் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி நடத் தினார் - 5 ஆண்டு காலம் - உடல் நலிவுற்ற நிலையிலும்கூட. கடும் சோதனை காலமான 'மிசா' நெருக் கடியில் இயக்கத்தைக் காத்து, திறம்பட நடத்தி எதிரிகளும், கழக துரோக சிந்தனையாளர்களுமே வியக்கத்தக்க வகையில் தலை மையின் ஆளுமைத் திறனை உலகறியச் செய்தார்.
என்னைப் பொறுத்த வரையில், அவர்கள் சொன்னதைக் கேட்டு, அப்படியே செயல்படும் ஒரு சாதாரண ஊழியன் அவ்வளவு தான்! 'நம்மைவிட மூத்த முதியவருள் பலர் வயதாலும், அறிவாலும், அனுபவத்தாலும் மூத்த வர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மதிக்கத்தக்க வகையில் எனது பணி அமைதல் வேண்டும்' என்று எண்ணி செயல்படுபவன்.
'தன்னை முன்னிலைப்படுத்தாமல், 'மறைந்தும் மறையாத' நம் தலைவர் தந்தை பெரியாரையும், அன்னையாரையும் முன்னிலை - முதன் நிலையில் வைத்து இயங்குவதுதான் நமது அன்றாடப் பணியாக அமைய வேண்டும்' என்று தெளிவான முடிவோடு பணிகளை, தயக்கத்துடன் பணிகளைத் தொடங்கினேன்.
"தந்தை பெரியார் தந்த புத்திக்கே இடம்
சொந்த புத்திக்கல்ல."
அதன் காரணம் - வெளிப்படையாக பல முறை பதிலளிக்கும் வகையில் விளக்கியுள்ளேன். சொந்த புத்திக்கு சபலமும், சலனமும், சுய நலனும்கூட இருக்கலாம்.
ஆனால் பெரியார் தந்த புத்திக்கு அவை கிடையாது என்கிறபோது அதுவே நமக்குப் பெரும் பாதுகாப்பு.
மேலும் அய்யா எந்த சந்தர்ப்பத்தில் எப்படி இப்படிப்பட்ட நேரங்களில் முடிவு எடுப்பார் என்று சற்று யோசித்து, நிகழ்ந்தவைகளை நினைவு ஏடுகளில் புரட்டினால் எளிதில் விடை கிடைக்கும் - தீர்வு தானே கதவைத் திறந்து வந்து நிற்கும்! இந்தப் பாதுகாப்பு அரணுக்கு மேல் - வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு மேல் என்ன வேண்டும், ஒரு சாதாரணத் தொண்டனுக்கு?
"சுயநலம் - ஆசாபாசம் - உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் பழக்கம், வன்மம் - இல்லையெனில் உலகமே நம் பணியைப் பழித்தாலும், இழித்தாலும் நாம் சிறிதும் கலக்கமோ, சஞ்சலமோ இன்றி சரியான பாதையான ஈரோட் டுப் பாதையை விட்டு அகலாமல் நடைபோட்டு கடமையாற்றலாம்" என்ற தெளிவும், தீர்க்கமும், மாறிய அச்சூழ்நிலை சுயமரியாதைப் பாடங்களை எனக்குள் போதித்தன!
"பெருமை யாருக்குப் போனால் என்ன? கொள்கை ரீதியான பயன் - விளைச்சல்தானே நாம் பெற விரும்புவது. அது கிடைத்தால் நமக்கு வேறு எதுவும் - விளம்பரமும் தேவையில்லையே" என்பதிலும் அய்யாவைப் பார்த்து நாம் கற்றுக் கொண்ட அரிய பாடங்கள் அல்லவா?
இந்த சிந்தனை அசைப்போடப்பட்ட நிலை யில் திருச்சிக்கு, முதல் முறையாகச் சென்றேன். அங்கே, எனது ஆரூயிர்த் தோழர் - வராது வந்து எமக்குக் கிடைத்த கொள்கை உறவால் நெருக்க நண்பர் புலவர் கோ. இமயவரம்பன் என்னை பெரியார் மாளிகையில் வரவேற்றார் - உணர்ச்சி மயமானோம் நாங்கள் இருவரும். அண்ணா மலைப் பல்கலைக் கழக நட்பும், எனது திரு மணத் தின்போது அய்யாவிடம் வந்தவர் திருமணமே செய்து கொள்ளாமல் அய்யாவின் தொண்டறத்தின் ஒரு பகுதியானார் - அம்மாவைப்போல.
அய்யாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான செல்ல செயலாளரானார்! அவர் என்னுடனேயே இருக்கிறேன் என நா தழுதழுக்கக் கூறினார்; "உங்களை நான் எப்படி விட்டுப் பிரிவேன் புலவர்? நீங்களே கேட்டாலும் அனுப்பவே மாட்டேன் - திருச்சி உங்கள் பொறுப்பு - சுற்றுப் பயணம் உங்கள் பொறுப்பிலேயே" என்றேன்.
பூரிப்பும் மகிழ்ச்சியும் இருவருக்கும்! திருச்சி யில் பல செய்தியாள நண்பர்கள் ஏற்கெனவே பழக்கமானவர்கள் - அவர்களில் சில பார்ப்பன நண்பர்களும் உண்டு. எல்லோரும் பண்போடு பழகுவோம்.
அதில் அய்யா - அம்மா மதித்த ஒரு செய்தி யாளர் எக்ஸ்பிரஸ் கோபாலன். அவர் இடை யாற்றுமங்கலம் லால்குடியைச் சேர்ந்த மூத்த முதிர்ந்த பத்திரிக்கையாளர்.
அய்யா, அண்ணா, காமராஜர், ஈ.வெ.கி. சம்பத், எம்.கல்யாணசுந்தரம் போன்ற பல கட்சித் தலைவர்களிடம் நெருக்கமாகப் பழகிய 'இந்தியன் எக்ஸ்பிரசின்' அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் அவர்!
பல அரிய தகவல்களை அய்யாவிடம் அவ்வப் போது பரிமாறிடத் தவறாதவர்.
எனக்கு மிக நெருங்கிய செய்தியாளர் நண்பர் களில் ஒருவர். பேராசிரியர் மணிசுந்தரத்திற்கும் மிக வேண்டிய நண்பர்.
அவர் என்னை மாளிகைக்கு வந்து வாழ்த்தி பாராட்டி விட்டு, "உங்களுக்கு இயக்கத்தை நடத்திச் செல்வதில் எந்த சிரமமோ, கஷ்டமோ இருக்காது - எளிதாக இருக்கும் - தைரியமாகச் செயல்படுங்கள்" என்று கூறி விட்டு அதை விளக்க ஒரு நல்ல கருத்தைச் சொன்னார் - அது என்ன?
மிகவும் பயனுறு கருத்து - அடுத்து பார்ப்போமே!
(வளரும்)
No comments:
Post a Comment