டில்லி கிறிஸ்தவ புத்தக அரங்குமீது மதவெறியர்கள் தாக்குதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

டில்லி கிறிஸ்தவ புத்தக அரங்குமீது மதவெறியர்கள் தாக்குதல்!

புதுடில்லி, மார்ச் 5 - டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த புத்தக அரங்கை, மதவெறியர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய நிகழ்வு நடந்துள்ளது. 

டில்லி புத்தகக் கண்காட் சியில் ‘தி கிறிஸ்டியன்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற சுவிசேஷ கிறிஸ்தவ சங்கத்தினரும் அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் கிறிஸ்தவ மத வெளியீடுவர் கண்காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பைபிளின் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த அரங்கிற்கு வந்த ஒரு கும்பல், புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதாக குற்றம் சாட்டியதாகவும், அரங்கில் இருந்த சுவரொட்டிகளைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.  அத்துடன், கடையைச் சுற்றி அமர்ந்து கொண்ட வன்முறையாளர்கள், “பைபிள் பந்த் கரோ” (பைபிளை இலவசமாக வழங்கக் கூடாது) என்றும்; “தும் லாக் 25000 ரூபாய் தேகார் லோகோ காதர்ம பரிவர்தன் கர்வதீன் ஹோ (நீங்கள் மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற 25000 ரூபாய் கொடுக்கிறீர்கள்)” என்றும் கூறி சுமார் 25 நிமிடம் வரை தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும், அரங்கிலிருந்து வெளியேற மறுத்து, ஹனுமான் சாலிசாவை வாசித்து, கலவர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காவித்துண்டு அணிந்து வந்த அவர்கள், ‘ஜெய் சிறீராம்,’ ‘ஹர் ஹர் மகா தேவ்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூச்சலும் போட்டுள்ளனர். மார்ச் 1 அன்று பிற்பகல் 2.15 மணியளவில் இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் நிலையில்,  இணையதளங்களில் வெளியான காட்சிப் பதிவுகள் மூலமே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிறிஸ்தவ அமைப்பினர் மட்டுமன்றி ஹிந்து, முஸ்லிம், சீக்கிய அமைப்புக்கள் சார்பில் இந்தகண்காட்சி யில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மதம் சார்ந்த புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், கிறிஸ்தவ அமைப்பினரின் அரங்கு மீது மட்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ள யுனைடெட் கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் மைக்கேல் வில்லியம், “நாட் டில் இப்போது புத்தகத்தை விநியோகிப்பது கூட மத மாற்றமாக கருதப்படுகிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பிரிக்கப்பட்ட வீடு நிலைக்காது; வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவே பெருமை வாய்ந்தது என்றும் அதனை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி நடப்பது வருத்தம் அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment