மும்பை, மார்ச் 2- தேர்தல் ஆணையம் ஒரு மோசடி அமைப்பு என்றும், மக்களை முட்டாளாக்கும் அமைப்பு எனவும் சிவசேனா கட்சி (உத்தவ் பால்தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், கட்சிச் சின்னத்தையும் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசினார். மேலும், துணிச்சல் இருந்தால் சிவசேனா கட்சியையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தி தேர்தலில் நின்று காட்டுங்கள் எனவும் உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார்.
மகாராட்டிராவில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். பின்னர் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராட்டிரா முதலமைச்சராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் சண்டையிட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேர்தல் ஆணையம், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனா கட்சியும், அதன் சின்னமும் சொந்தம் என அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள உத்தவ் தாக்கரே அந்த அமைப்பை கடுமை யாக விமர்சித்து வருகிறார். தேர்தல் ஆணையம் பா.ஜ.கவின் ஏஜெண்ட் என்றும், ஒன்றிய அரசின் அடிமை போல அது நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் நேற்று (1.3.2023) நடைபெற்ற மராத்தி மொழி நாள் நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாகவும், நடுநிலையாகவும் நடப்பது தான் தேர்தல் ஆணையம். ஆனால், இந்தியாவில் இருப்பது தேர்தல் ஆணையம் அல்ல. அது ஒரு மோசடி அமைப்பு. பாஜகவுக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே அது செய்யும். மக்களை முட்டாளாக்கும் அமைப்பு அது. உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் எப்படி தீர்ப்பு கொடுக்க முடியும்?
ஒரு அமித் ஷா அல்ல. இன்னும் ஓராயிரம் அமித் ஷா வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சிவசேனா சின்னத்தை அவர்கள் திருடியுள்ளனர். அந்த திருடர்களிடம் இருந்த அதனை நாம் விரைவில் மீட்போம். சிவசேனா என்பது வெறும் பெயரோ, சின்னமோ அல்ல. வில் அம்பு மட்டுமே சிவசேனா அல்ல. சிவசேனா என்பது நீங்கள்தான் (தொண்டர்கள்). உங்களை எப்படி அவர்களால் திருட முடியும்? அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் திருடி வைத் துள்ள சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் எடுத்துக்கொண்டு தேர்தல் களத்திற்கு அவர் வரட்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
No comments:
Post a Comment