Global Periyar & International Thinkers - A comparative study
திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் அறிவாயுதம் - புதியது
முனைவர் பேராசிரியர்
ந.க. மங்களமுருகேசன்
தந்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் வெளியிட்ட ‘உலகத் தலைவர் பெரியார்-_ பன்னாட்டுச் சிந்தனையாளர்கள் ஓர் ஒப்பீடு_ ஆய்வுக்கோவைதான் அந்தப் புதிய அறிவாயுதம்.
தந்தை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவன வேந்தரும், திராவிடர் கழகத் தலை வரும், தமிழர் தலைவரும் இன்று வாழும் முதுபெரும் திராவிட இயக்க மூத்த ஒரே தலைவருமான ஆசிரியர் அவர்கள் தம் தொகுப்புரையில் அளித்த சிந்தனை முத்துக்கள்தாம் முதலில் நம்மை அப்படைப்பின்பால் ஈர்க்கின்றன.
‘உலகத் தலைவர் தந்தை பெரியார் பன்னாட்டுச் சிந்தனையாளர்கள் ஓர் ஒப்பீடு - ஆய்வுக்கோவை இனிவரும் காலங்களில் மானுட மேம்பாட்டுக்கான கருத்து வளத்திற்கு நிச்சயம் நல்லதோர் அறிவாயுத மாகவும் பயன் கூட்டும் என்பது உறுதி’’ எனத் தமிழ்ச் சொல்லழகிலும்,
“We are sure that this will serve as an effective intellectual tool in the time to come helping the progressive march of humanhood. என ஆங்கில மொழிச் சொல்லடுக்கிலும் வழங்கி யிருக்கிறார்.
தமிழர் தலைவரின் தொகுப்புரை, ஒரு சிந்தனை யாளரின் தேர்ந்தெடுத்த சொற்கோவை - உண்மையில் ஒரு சிறந்த படைப்பைப் பற்றிய கருத்துக் கோவையாக இருக்கும் என எண்ணி ஆய்வுக்கோவையைப் புரட்டினால் நம் எண்ணம், சிந்தனை, கருத்து எல்லாம் மெத்தச் சரியென்றே உணர்கிறோம்.
மேலும் அவர்தம் கூற்றில் நாம் கண்டது -
“தந்தை பெரியார்தம் கொள்கை விளக்கங்கள் பன்னாட்டுச் சிந்தனையாளர்களுடன் ஒப்பீடு செய் வதன்மூலம் தந்தை பெரியார்தம் கொள்கைகள் பட்டை தீட்டப்பெற்ற வைரம் போல் ஒளி வீசி மானுட மேம்பாட்டிற்கு ஆக்கம் சேர்த்திடும் என்பதும், வருங்காலச் சந்ததியினருக்கு வைப்பு நிதி போன்ற கருத்துக் கருவூலமாக அறிவுரைக்கொத்தாகப் பயன்படுவதும் உறுதி.’’
தமிழர் தலைவரின் இந்தக் கருத்துரை ‘வருங்காலச் சந்ததியினருக்கு’ என்பதில் ‘உலகம் எங்கும் வாழ் சந்ததியினருக்கு’ என்று சேர்த்துப் படித்தால் சிறப்பு.
இந்தப் படைப்பு போன்று தமிழ்நாடு, இந்தியா கடந்து கடல் கடந்த மண்ணிலும் வாழ்வோரிடையே சென்று சேருமளவிற்குப் பல படைப்புகள் காணுதல் வேண்டும். அந்தந்த நாட்டுச் சிந்தனையாளர்கள் மட்டுமின்றி, நம் நாட்டில் வாழ்ந்த மாபெரும் சிந்த னையாளர் எங்கோ ஒரு கோடியில் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறாரே; அவரைப் பற்றித் தெரிய வேண் டும் எனும் ஆர்வப்பெருக்கினை ஊட்டும். தமிழ் மொழியில் இருந்தாலும் அறிந்தோர் வழி மொழி பெயர்த்து அறிவர்.
இப்படைப்பின் ஆக்கம் உலகத் தலைவர் தந்தை பெரியாரைப் பன்னாட்டுச் சிந்தனையாளர் களுடன் ஒப்பிட்டு ஆய்வு நோக்கிலான கருத்தரங்கத்தினைத் தஞ்சை- வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறு வனம் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யம் எனும் துறை ஏற்பாடு செய்தது. எனில், தமிழர் தலைவரின் முயற்சி என்றே பொருள்.
தந்தை பெரியாரை உலகமயமாக் கும் முதல் முயற்சியைத் தமிழர் தலை வர் தொடங்கி அதில் பெருவெற்றி பெற்றார். அதன் இரண்டாவது முயற்சி தான் இக்கருத்தரங்கு, அதன் தொடர்ச்சிதான் அறிவாயுதமான இந்தப் படைப்பு.
உலகெங்கும் வாழும் தமிழர் களுக்குத் திராவிட உணர்வாளர் களுக்குத் தமிழர் தலைவர் இப்புதிய அறிவாயுதம்தனைப் படைத்து உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அளித்திருக்கிறார்.
‘குடிஅரசு’ தொகுப்பு, பெரியார் களஞ்சியம் ஆகிய நூற் தொகுதிகளைப் படிக்கையில் 1930-1940களில் உலக அறிஞர்கள் சிலரைப் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால், இந்தத் தொகுப்பு ஒரு புதிய வெளிச்சம்! அதிலிருந்து மேலும் சிறப்பு - தொடர் புடையவர்கள். கல்லூரி களில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள். தமிழ் மண்ணின் அரசியல் அறி ஞர்கள், நன்கு அறிந்து தேர்ந்தவர்கள் இந்த ஒப் பீட்டைச் செய்திருக் கிறார்கள். கருத்துப் பிழை, எண்ணச் சிதைவு, மிகைக் கூற்று என ஏதுமில்லாமல் வடித்து அளிக்கப்பெற்ற தொகுப்பு.
கண்ணையும் கருத்தையும் கவரும் வகையிலான, அழகிய தெளிவான எழுத்துத் தொகுப்பிலான படைப்பு என்பதே இந்த ஆய்வுக் கோவையின் தொட்டுக்காட்ட வேண்டிய முதற்சிறப்பு!
இரண்டு பதிப்புகள் கண்ட இக்கோவை, கிரவுன் அளவில், 12 புள்ளியில், 520 பக்கங்கள். இவ்வளவு பெரிய அளவிலான பக்கங்கள் கொண்ட படைப்பிற்கு குறைந்த அளவு நன்கொடையே ரூ.700 தான். தந்தை பெரியார் எனும் தன்னிகரில்லாச் சிந்தனையாளர், புரட்சியாளர், பகுத்தறிவாளர் உலகின் இந்தியாவின், தமிழ் மண்ணின் உயரிய சிந்தனையாளர்கள், ஆட்சியியலார், அறிஞர் பெருமக்கள், கவிமாமணிகள் கருத்தோட்ட விற்பன்னர்கள் என்று 53 பேருடன் ஒப்பிட்டுப் பேசும் உயரிய உடைப்பு!
இப்படி 53 பேருடன் ஒப்பிட்டு உயரிய இது போன்ற படைப்பைத் தனி மனிதர்கள் முயன்று படைக்க வேண்டும் என்றால் குறைந்தது தரவுகளைத் தேடித் திரட்டவே பத்து ஆண்டுகள் பிடிக்குமெனில், புத்தகமாக்கம் செய்வதும் எளிது அன்று.
இதனை உணர்ந்து தக்கார் யார் எனப் பணித்து, கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கச் செய்து, வடிகட்டி வழங்கியுள்ள படைப்பு! தந்தை பெரியாரும் திருக்குறளும், தந்தை பெரியாரும் சித்தர்களும், வள்ளல் பெருமானும் என்று வாழ்ந்த பன்னெடுங் காலம் தொடங்கி சாகு மகராசா, ஜோதிபாபூலே என்று மட்டுமல்லாது, அண்மையில் தமிழ் நாட்டுக்கு வந்தாரே - சேகுவேராவின் திருமகள் - அந்த சேகுவேராவை தேடித்தேடிக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று உலக வரைபடத்து மண்ணில் வாழ்ந்து, புரட்சித் தீயைப் பற்ற வைத்தவர்கள், புழுப்போல் நெளிந்த மக்களைப் புரட்சிப் புயலாய் மாற்றியவர்கள், அடிமை வாழ்வே - அடிமை விலங்கே முறிக்கப்படாதா என்று முணுமுணுத்த மக்களை முன்நிற்கச் செய்து அடிமை விலங்கொடித்தவர்கள் என்று பலரோடும் விட்டுவிடாமல் ஒப்பீட்டுக் கட்டுரைகளாய்க் கிடைப் பது - இது ஓர் அரிய பொற்களஞ்சியம் என்று காட்டும்.
தந்தை பெரியார் சாக்ரடீசு போன்ற தாடிக்காரர் மட்டுமல்லர்; தத்துவச் சிந்தனையாளர் - மானுடம் நேசித்தவர் - மனிதனை நினை; மானமும் பகுத் தறிவுமே வேண்டுமென்று மாயும் வரையும் போராடியவர்.
அப்பப்பா! 95 வயதுவரை மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டு மானிட வளர்ச்சிக்கு, மகளிர் மேம்பாட்டுக்கு உழைத்த ஒப்பில்லாத் தலைவர்! அறம் உரைத்த அரசர்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. அரசியலில் அறம் போதித்தவர். அகிம்சை என்றால் அண்ணல் காந்தி என்று விளம்பரம் உண்டு. அதே வன்முறையற்ற அரசியலை நடத்திய பெரியார் போல் எவருண்டு!
நெஞ்சில் துணிவு, நேர்மை, கொண்ட கொள் கையில் உறுதி எனும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணல்காந்தி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான், பெண்மை வாழ்கவென்று போற்றிய திரு.வி.க., தியாகத் தழும்பை ஏந்தியே வாழ்ந்து மறைந்த வ.உ.சி., பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்க்கலைவாணர் ஆகியோருடன் ஒப்பிட்டுக் காட்டுவதோடு அவர்களுடைய தொடர்பில் புதிய செய்திகள் காண்கிறோம். புதுமலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
காரல் மார்க்சின் சிறப்பை உணராது, பதவி சுகத்தின் பயனாய்க் கொலுவிருக்கும் அற்ப மானிடர் மத்தியில் காரல் மார்க்சோடு - தந்தை பெரியார் ஒப்பீடு ஒரு புதிய அறிவாயுதம்.
95 ஆண்டு கால வாழ்வில் எத்தனை எத்தனை தலைவர் பெருமக்கள், தமிழ் மண்ணின் அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு, தந்தை பெரியாருடன் கைகோத்த வரதராசுலு. சிந்தனையாளர் சிங்காரவேலர் என்ப தோடு ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த புத்த பிரானின் வாழ்வோடு ஒத்துப்போகிறார். பல அறிஞர் பெருமக்களைப் பார்க்காமல் படிக்காமல் பகுத்தறிவு, புரட்சி, குடிஅரசு என விதை ஊன்றியவர் தந்தை பெரியார் என்பதும் ஒப்பீட்டில் வெளிப்படுகிறது.
ஆங்கிலக் கட்டுரைகளில் ரசல், நீட்சே, மார்ட்டின் லூதர், சன்யாத்சென் பெயின், ஷெல்லி, அரிசுடாட்டில் பிளேட்டோ எனவும் சிறப்பான ஒப்பீடுகள். கன்பூசியசு, வால்டேர், ரூசோ, ஆபிரகாம் லிங்கன், கமால்பாட்சா, சார்லசு டார்வின், சாக்ரடீசு, மாசேதுங், பசவர், இங்கர் சால், சேகுவேரா என்று உலகமெங்கும் பேசப்படு வோருடன் ஒப்பிட்டு இருப்பதைப் படிப்போருக்குப் புதிய சிந்தனை வெளிச்சம் கூட்டும்.
தந்தை பெரியாரும், ராஜகோபாலாச்சாரியும் அன்பான எதிரிகள் என்பார்கள். மண்டைச்சுரப்பை உலகுதொழும் என்ற புரட்சிக்கவிஞர், தந்தை பெரியார் பேரன்பால்’ பச்சைத் தமிழர் என்று உரைத்த பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார் போன்று “தகுதி - திறமை’’ புரட்டு என்றுரைத்த ஆந்திர மாநிலத்துக் கோரா, எளிமை வாழ்க்கை வாழ்ந்த ஜீவா - தந்தை பெரியாருடன் கைகோத்தவர் பட்டியல் பெரிது என்றும் தொட்டுக் காட்டியுள்ளோம்.
இந்தப் படைப்பைப் பற்றி ஒரே சொல்லில் கூற வேண்டும் என்றால் உயரியது. இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் மிக, மிக உயரியது. இன்னும் மூன்று நான்கு வார்த்தைகளில் கூறவேண்டும் எனில் ‘கருத்துக் கருவூலம், சிந்தனைச் செல்வம், புரட்சி மலர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படைப்பை இந்திய மண்ணில் வாழ்வோரும், அயல் மண்ணில் வாழ்வோரும் வாங்கி, தாம் படித்து மகிழ்வுணர்ச்சி பெறுவதோடல்லாமல், அந்த அந்த மண்ணின் மைந்தர் களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
பல்கலைக்கழக வெளியீடு எனும் போதே அதற்கு எவ்வளவு சிறப்பு, முதன்மை, கருந்தாழம் உண்டு என்பது புரியும்.
இப்புத்தகம் பெரியார் புத்தக நிலையம், பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007 முகவரியில் கிடைக்கிறது. பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-620017 எனும் முகவரியிலும் கிடைக் கிறது. நன்கொடை ரூ.700/- சென்னை தொலைபேசி 044 -26618163, திருச்சி 0431-4206987.
No comments:
Post a Comment