சென்னை, மார்ச் 5- தாட்கோ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட மேலாளர்கள், செயற் பொறியாளர்களுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் துறையின் சார்பில் நடந்து வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து அவர்களின் கல்வி அறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையினை உயர்த்திட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக இந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடன் உதவி, இளைஞர்களுக்கான சுயதொழில், மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத்திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டங்கள் மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும். மேலும், தாட்கோ கட்டுமானப் பிரிவுத் துறையால் கட்டப்பட்டு வரும் பள்ளிகள், விடுதிகள், நவீன சமுதாயக் கூடங்கள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், ஒன்றிய அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் செயற்பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment