பாலினச் சமத்துவத்தில் முதன்மை பெறும் தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

பாலினச் சமத்துவத்தில் முதன்மை பெறும் தமிழ்நாடு

சேலம் தரணிதரன் & டெரெஸ் சஜீவ் 

பன்னாட்டு மகளிர் நாளான மார்ச் 8 அன்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விட்ட போதிலும், அவர்களை அடிமை யைப்போல் நடத்தும் ஆண்களின் மனப்பான்மை மாற வில்லை” என்று பேசியிருக்கிறார். பாலினச் சமத்துவத்தை அடைவதில் இந்தியா மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறிக்கும் 2022  ஆண்டறிக்கையானது, நான்கு கோணங் களில் பாலினச் சமத்துவத்தை அணுகுகிறது. அவை - பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல்நலம் மற்றும் அரசியல் பங்கேற்பு. இந்த அறிக்கையில் 146 நாடுகள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன. 146 நாடு களில் இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது. பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பிலோ இன்னும் மோசம்; 143ஆவது இடத்தில் உள்ளது. ஈரான், பாகிஸ்தான், ஆஃப் கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளன. பெண்கள் உடல்நலம் பேணுவதிலோ இந்தியா வுக்குக் கடைசி இடம்.

இந்தியாவில் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுகிறது. வேலைவாய்ப்பில் பாலினச் சமத்துவ மின்மையை ஆய்வு செய்யும் தேசிய அள விலான மெக்கன்சே ஆய்வு (2015), பாலினச் சமத்துவத்தைப் பேணும் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் சிறந்தவையாகத் தமிழ்நாட்டையும், கேரளாவையும் முன்னிறுத்துகிறது. 32% பெண்கள் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல் கின்றனர். இது அகில இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம். உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை விகிதம் 49%-ஆக இருக்கிறது. இந்திய அளவில் இது 25% மட்டுமே.

இந்தியாவில் உற்பத்தித் துறையில் ஈடுபடும் 100 பெண்களில் 43 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (Annual Survey of Industries, 2019-2020). இதில் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.

பெண்கள் உடல்நலத்தைப் பொறுத்த வரையில், மகப்பேறு தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது, பேறுகாலத்திற்கு முன்பான பராமரிப்பு, மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெறுதல் ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது (தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு - 5; 2019-20). பேறுகாலத்தின்போது தாய்/சேய் இறப்பு விகிதம் தேசிய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்ச்சியான கொள்கைத் தலை யீடுகளே.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகார மளித்தல் என்பது திராவிட இயக்கத்தின் தொடக்க கால வரலாற்றிலேயே பின்னிப் பிணைந்தது. சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றை முன்னிறுத்தி ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்றது திராவிட இயக்கம். பெண்கள் அதிகாரம் பெறாமல் இந்தியா விடுதலை அடை யாது என்பதைத் தந்தை பெரியார் உறுதியாக நம்பினார். இந்தச் சித்தாந்தமானது திராவிட முன்னேற்றக் கழக அரசின் கொள்கையிலேயே விதைக்கப்பட்டுள்ளது.

1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, கைம்பெண் மறுமணங் களை ஆதரித்தது. புரோகிதர் இல்லாத சுய மரியாதைத் திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தது. 1969-இல் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அவரது முன்னெடுப்புகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடரப் பட்டன. 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கைம் பெண் மறுமணத் திட்டம் கைம் பெண் களுக்கு இழப்பீடு வழங்கியதோடு, அவர்களது மறு மணத்தையும் ஆதரித்தது. இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம், 1989 பூர்வீகச் சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு உரிமையை வழங்கியது. அன்றைய நாளில், இதைச் செயல்படுத்திய முதல் மற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம், 1989, எட்டாவது வகுப்பு முடித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாக ரூ.5000 வழங் கியது. இது பெண்களின் கல்வி நிலை உயர்வதற்கு முக்கியப் பங்காற்றியது. பெண் பட்டதாரி களுக்கான ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு கல்வி உதவித் திட்டம் பெண்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரித்தது.  கருவுற்ற தாய்மார் களுக்கு நிதி உதவி வழங்கிய டாக்டர் முத்து லட்சுமி அம்மையார் மகப்பேறு உதவித் திட்டம், பெண்கள் உடல்நலம் சார்ந்த முன்னேற்றத்தினை நல்கியது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியபோது அது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் நடத்திய ஆய்வில், கிராமங்களில் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது பெண்கள் அதிகாரமடைதலோடு தொடர்புடையது என்று தெரிய வந்துள்ளது (OUP’s Quarterly Journal of Economics 2009). குடும்ப வன்முறையை எதிர்ப்பது அதிகரித்துள்ள அதே வேளையில், ஆண் குழந்தையை விரும்பும் போக்கு குறைந் துள்ளது. பெண்களின் சுய அதிகாரம் குடும்பங் களில் வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் இதுபோன்ற திட்டங்களால் விளையும் மறைமுக நன்மைகள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இதே தொலைநோக்கோடு செயல்பட்டு வரு கிறார். தற்போதைய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகார மளிப்பதற்கான கொள்கை, 2021  பாலினம் சார்ந்த விதிமுறைகளை மீளாய்வும், மறுகட்டமைப்பும் செய்கிறது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி களிலும், சட்டமன்றத் தேர்தல் களிலும் பெண் களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கோருவதன்மூலம், பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றவும் இக் கொள்கை திட்டமிடுகிறது.  அதுமட்டுமல்லாமல், தற்போது அரசுப் பணிகளில் இருக்கும் பெண் களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 

12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே அதிகமாகும். பெண்களின் அரசியல் பங்கேற்பை எளிமைப்படுத்தும் வகை யில், அவர்களுக்கான சான்றிதழ் வகுப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 

50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பெண்களின் போக்குவரத்துச் சுதந்திரத்தை உணர்ந்து அதை அங்கீகரிக்கும் வகையில், இல வசப் பேருந்துப் பயணத் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. இத்திட்டமானது பெண்கள் மாதத்திற்கு ரூ.900 முதல் ரூ.1200 வரை சேமிப்பதற்கு வழி கோலுகிறது. இச்சேமிப்பு குழந்தைகளின் ஊட்டச் சத்துள்ள உணவிற்கும், கல்விக்கும் செலவிடப் படுவதாக தமிழ்நாடு திட்டக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் அரசுக் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் தற்போதைய அரசின் திட்டமானது, பெண்களின் உயர்கல்விச் சேர்க் கையை இன்னும் அதிகரிக்கும். மேலும் இது பெண்கள் திருமணமாகும் வயதையும் அதி கரிக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரும் முன் னெடுப்புகள் நாட்டின் மற்ற பகுதிகளைக் காட் டிலும் தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

மொழிபெயர்ப்பு : வெற்றிச்செல்வன்

நன்றி : 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'

No comments:

Post a Comment