நேரில் சென்றுவந்த கருஞ்சட்டையினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

நேரில் சென்றுவந்த கருஞ்சட்டையினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி

12.3.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திலிருந்து கேரள மாநிலம் வைக்கம் செல்ல புறப்பட் டோம். அதன்படி சென்னை மத்திய (சென்ட்ரல்)இரயில் நிலையத்தில் இரவு 8.55 மணியளவில் (இரயில்) தொடரியில் புறப்பட்டோம். மறுநாள் காலை 9.30 மணியளவில் எர்ணா குளம் சந்திப்பு தொடரி நிலையம் வந்தடைந்தோம்.

காலை உணவு அருந்திய பின் தங்கும் விடுதி தேடி அலைந்து பிறகு தாம்பரம் பகுதியில் உணவு விடுதியில் பணி செய்த தோழர் குமார் என்ற நண்பரை சந்தித்து எந்த தங்கும் விடுதியில் தங்க வசதி இருக்கும் என்று கேட்ட போது, அவர் திருவனந்தபுரம் வடக்கு எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ராயல் தங்கும் விடுதி தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறினார். அதன்படி காலை 10.30 மணியளவில் தங்கும் விடுதியில் எங்களை பதிவு செய்து பிறகு காலை கடன்களை முடித்து வைக்கம் செல்ல 11.30 மணியளவில் ஆட்டோவில் எர்ணாகுளம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வைக்கம் செல்லும் பேருந்தில் பயணமானோம். வைக்கத்தை 12.30 மணியளவில் வந்தடைந்தோம்.

பகல் 1 மணியளவில் வைக்கம் பெரியார் நினைவு இல்லம் சென்றடைந்தோம். பெரியார் நினைவு இல்ல பாதுகாப்பாளர் மற்றும் பராமரிப்பாளர் தோழர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் எங்களை வரவேற்று மிகவும் பண்பாக பெரியார் அவர்களை பற்றிய பல தகவல்களை எங்களுக்கு வழங்கி வருகை பதி வேட்டை எங்களிடம் வழங்கி பல தலைவர்கள் வந்து சென் றதை காண்பித்து எங்களுக்கும் வருகை பதிவேடு வழங் கினார். நாங்களும் வருகை குறிப்பு எழுதினோம். தொடர்ந்து எங்களுக்கு பல அரிய தகவல்களை வழங்கி உற்சாகமூட்டி புகைப்படம் எடுத்துக் கொடுத்து 2 மணியளவில் எங்களின் பசியை போக்கும் வகையில் எங்களுக்காக சிறிது தூரம் நடந்து சென்று உணவு விடுதியில் விசாரித்து பிறகு எங்களின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவரும் எங்களுடன் உணவருந் தினார்.

பிறகு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஓய்வு எடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்.

சரியாக 4.30 மணியளவில் உன்னிகிருஷ்ணன் அவர் களுக்கு மாற்றாக தோழர் ஜோஸ் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து “தோழர் ஜோஸ் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார். இவரை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்“ என்று கூறி மாலை 5 மணியளவில் விடைபெற்றார்.

தோழர் ஜோஸ் அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அவருடன் மாலை தேநீர் அருந்தினோம்.

சரியாக பெரியார் நினைவு இல்லத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றோம். வைக்கம் மகாதேவர் ஆலயம் என்னும் சோமநாதர் கோயிளைச் சுற்றியுள்ள நான்கு தெருக் களிலும் குறிப்பாக மேற்கு தெருவில் கோயில் வாசலுக்கு முன்னாலும் நடக்கக் கூடாது ஆடு, மாடு, நாய், கழுதை, பன்றி, புழு, பூச்சி ஆகியவை செல்லலாம் ஆனால் மனிதன் மட்டும் செல்ல கூடாது அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களாக கருதப்பட்ட தீயர், ஈழவர்கள், புலையர்கள் என்று ஒதுக்கி வைத்த ஈழவ மக்கள் என்னும் (நாடார்)சமுதாய மக்கள் செல்லவே கூடாது என்று பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானம் தடை விதித்து சட்டம் இயற்றியது.

தொடத்தகாதவர்,

தீண்டத் தகாதவர்,

பார்வையில் பட்டாலும் குற்றமுள்ளோர்,

கூடியிருந்துடன் உண்ணத் தகாதவர் என்று அச்சட்டம் வகைப்படுத்தியுள்ளது தான்

இப்போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

தோழர் மாதவன் என்ற வழக்குரைஞர் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார்.

வழக்கு விசாரணை நீதிமன்றம், ராஜாவுடைய கொட் டாரத்தில் (அரண்மனையில், ஓர் இடம்) நடந்தது.

ராஜாவின் பிறந்தநாள் விழாவிற்குக் கொட்டாரத்தின் எல்லா பக்கத்திலும் பந்தல் போடப்பட்டதில், நீதிமன்றம் நடக்கும் இடமும் பந்தலுக்குள் அடங்கிவிட்டது. முறைஜெபம் ஆரம்பமாயிற்று. இந்த வழக்குரைஞர் ஈழவ(நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக் கூடாது என்று தடுத்தார்கள்.

இந்த வழக்குரைஞர் மாதவன் சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் அறப்போர் வேண்டுமென்று முடிவு செய்தனர். வழக்குரைஞர் டி.கே.மாத வன், கேரள காங்கிரசுக் கமிட்டித் தலைவர் கே.பி.கேசவ மேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து இவ்வாறு முடிவு செய்தனர்.

எந்த ஊரில் அறப்போர் ஆரம்பிக்கலாம் என்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

இதையடுத்து 1924 பிப்ரவரி 16இல், கொல்லம் சுயராஜ்ய ஆசிரமத்தில் கூடிய கேரள காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி, அறக் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது வைக்கம் அதற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

1924 மார்ச் 30இல் கிளர்ச்சி தொடங்கிற்று.

வைக்கம் மகாதேவர் கோயிலில்  இருந்து 100 கஜம் தொலைவில் ஒரு பலகை தொங்கிற்று.

அதில் தீண்டாத ஜாதியினர் இதற்கப்பால் பிரவேசிக்கக் கூடாது என இருந்தது.

அதை கடந்து செல்வது அறப்போராளிகள் வகுத்துக் கொண்ட கிளர்ச்சி முறையாகும்.

அறப்போர் பாசறை கோயிலில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் இருந்தது. (100கஜம்=300அடி=91.4 மீட்டர். 1 மைல் =1.6 கிலோமீட்டர்)

திருவாங்கூர் சமஸ்தானத்தின் தடையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடந்து தொடர்ந்து மாதவன்,கேசவ மேனன்,ஏ.கே.ஜார்ஜ் ஜோசப் முதலிய 19 தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை புகுந்தனர்.

பெரியார் தீண்டாமையைப் பற்றிப் பேசுவதில் கெட்டிக் காரர்,போராட்டத்திலும் கெட்டிக்காரர் என்று பெயர்எடுத்தவர்.

பெரியார் 13.4.1924இல் வைக்கம் வந்து சேர்ந்து போராட ஆரம்பித்தார் சுமார் 10 நாள்கள் அரசு ஏதும் செய்யவில்லை தொடர் போராட்டத்தின் காரணமாக பெரியார் அவர்கள் சிறைப் படுத்தப்பட்டார்.

சிறையில் பெரியார் அவர்களுக்கு கால்களில் விலங்குச் சங்கிலி,தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங் காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி,கழுத்தில் கைதி எண் குறிப்பிட்ட மரப்பட்டை இவற்றோடு கொலைகாரர்களோடும்,கொள்ளைக்காரர்களோடும் சிறையில் அடைக்கப் பட்டு சொல்ல முடியாத வலி,வேதனைகளை அனுபவித்தார்.

தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் 11 தோழர்கள் கொண்ட ஒரு போராட்டக் குழு அமைந்தது. மிகப் பெரிய உரிமை போராட்டம் தொடங்கியது. 306 நாள்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக நவம்பர் 23.1925இல் மகாதேவர் கோயில் தெருக்களில் அனைத்து ஜாதியினரும் நடக்கும் படி திறந்து விடப்பட வேண்டும் என்ற வெற்றி அறிவிப்புடன் தடை நீக்கியது திருவாங்கூர் சமஸ்தானம்.

போராட்டம் வெற்றி பெறும் வரை கைது நடவடிக்கை களையும்  செயல்படுத்தி தடுக்க முயற்சி செய்தது திருவாங்கூர் சமஸ்தானம். பேச்சுவார்த்தைக்கு பின் திருவாங்கூர் சமஸ் தானம் தடையை நீக்கி அனைத்து மக்களும் கோயில் உள்ள தெருக்களில் நடந்து செல்லலாம் என்று அனுமதி வழங்கியது. அதன் பிறகே போராட்ட குழுவினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து செயல்படுத்தி வெற்றி கண்டனர்.

அந்த தெருக்களில் - குறிப்பாக மேற்கு தெரு கோயில் வாசலில் நூறாண்டுக்கு பின் நமது தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் விடுதலை நகர் பி.சி ஜெயராமன்,மாடம்பாக்கம் அ.கருப்பையா, தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி,சோழிங்கநல்லூர் மாவட்ட தோழர் மணிகண்டன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகிய நான் உட்பட 6 தோழர்களை கொண்ட குழுவினர் 13.3.2023 அன்று “பெரியார் வாழ்க,பெரியார் வாழ்க” என பொதுமக்கள் மத்தியில் விண்ணதிர முழக்கமிட்டு கோயில் தெருக்களில் கம்பீரமாக நடந்து சென்றது எங்களுக்கு வாழ்வின் மிகப் பெரிய பெருமையாக இருந்தது. எங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.

அந்த இடத்தில் சி.பி.அய். தோழர் பாபு அவர்கள் பழைய மற்றும் போராட்ட வரலாறுகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டு தந்தை பெரியார் அவர்கள் போராட்டக் களத்திற்கு இந்த கச்சேரி காவலா சாலையின் கடைசியில் வேம்பநாட் ஏரி வழியாக(வைக்கம் ஜெட்டி)வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட வரலாற்று இடத்தினை பார்த்து மகிழ்ந்து சொல் லுங்கள் என்று வழியனுப்பினார். அந்த இடத்தினை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். வேம்பநாட் ஏரியில் இருந்து அடுத்த கரையான பள்ளிபுரம் பஞ்சாயத்து தவணகட்டு சந்திப்புப் பகுதிக்கு அந்த பகுதியில் வாழும் மக்கள் தினமும் அலுவல், வியாபாரம், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட இந்த இந்த கரையில் இருந்து அடுத்த கரைக்கு போக்குவரத்தாக மக்கள் பயன்பாட்டுக்கு ஒரு முறை படகில் செல்ல கட்டணமாக 6 ரூபாய் வசூலிக்கிறது அரசு. நாங்களும் அடுத்த கரைக்கு சென்று திரும்பினோம். தொடர்ந்து மீண்டும் பெரியார் நினைவு இல்லத்திற்கு வந்து தோழர் ஜோஸ் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு சில புகைப்படங்கள் எடுத்தோம். பெரியார் இல்லத்திற்கு எதிரில் எம்.ஜி.ஆர். - ஜானகி அவர்களின் இல்லம் இருந்தது. அந்த இல்லத்தில் யாரும் இல்லாததால் நாங்கள் வெளியே இருந்து அந்த இல்லத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு நாங்கள் தங்கும் அறைக்கு திரும்பினோம்.

மறுநாள் காலை 11 மணியளவில் ஆலப்புழாவுக்கு கிளம்பி னோம் பகல் 1 மணியளவில் ஆலப்புழா பேருந்து நிலையம் வந்தடைந்து பேருந்து நிலையத்தில் நாங்கள் கொண்டு வந்த பொருட்களை அரசு பொருட்கள் பாதுகாக்கும் பெட்டகத்தில் ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய் வீதம் 6 பேருக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு சிறிது ஓய்வுக்குப் பின் படகு பயணம் செல்வோம் என்று திட்டமிட்டு பாலு - படகு ஓட்டுநர் தோழர் பி.ஜி.ரத்தீஷ் அவர்களிடம் விசாரித்து 4 மணி நேரத்திற்கு ஒருவருக்கு 500 வீதம் கட்டணம் பேசி படகு பயணத்திற்கு புறப்பட்டோம். படகு பயணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் அருமையாகவும் இருந்தது. இடையில் மதிய உணவுக்காக போகும் வழியில் குப்பா புரம் பகுதியில் றிணீபீபீஹ் திவீமீறீபீ (பட்டி பில்ட்) என்னும் உணவகத்தில் உணவருந்தினோம். அனைத்து உணவுகளும் விலை அதிகம். ஆனால் ஒரு உணவும் தரமாக இல்லை. ஆகவே நீங்கள் ஆலப்புழா படகு பயணம் செல்வதாக இருந்தால் வெளியே உணவு தயார் செய்து கொண்டு செல்வது அல்லது வாங்கி செல்வது சிறப்பு. உணவுக்குப் பின் மீண்டும் 2.30 மணி நேரம் படகு பயணம், சரியாக 5 மணியளவில் மீண்டும் பேருந்து நிலையம் வந்து எங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு இந்தியன் காப்பி விடுதியில் காப்பி அருந்தி விட்டு சிறிது தூரம் நடந்து செல்லும் வழியில் கம்பம் பகுதியை சேர்ந்த தோழர் பச்சையப்பன் மற்றும் சில தமிழ்நாட்டு உறவுகளை சந்தித்து உரையாடினோம். அவர்கள் “நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம், எந்த சிரமமும்  இங்கே இல்லை, இம்மாநில மக்கள் எங்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை, பழகுவதற்கு உறவுடன் இனிமையாக பழகுகிறார்கள், எங்களை அரவணைக்கிறார்கள், எங்களிடம் எந்த ஏற்றத் தாழ்வும் பார்ப்பதில்லை” என்று கூறினார்கள். அந்த தோழர்களிடம் நாங்கள் வியாபாரம் செய்து விடை பெற்றோம். பிறகு ஆலப்புழா கடற்கரைக்குச் செல்ல பச்சை நிற பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு 10 ரூபாய் பயண கட்டணம். ஆலப்புழா இரயில் நிலையம் இறங்கி 5 நிமிடத்தில் கடற்கரைக்கு நடந்து சென்றோம். தொடர்ந்து கடற்கரை ஓரமாக நடந்து கடற்கரை அழகை ரசித்து கொண்டே 5 நிமிடத்தில் ஆலப்பி கடற்கரை விடுதியில் தங்கும் அறை எடுத்து குளித்து விட்டு கடற்கரை அழகை நாங்கள் தங்கிய விடுதியில் இருந்து ரசித்தோம். இரவு 8 மணியளவில் ஆலப்புழாவில் தமிழ்நாட்டு உணவை ஆரியாஸ் உணவகத்தில் இரவு உணவு முடிந்த பின் மிக அருமையான தூக்கம். மறுநாள் காலை 9 மணியளவில் ஆரியாஸ் உணவு விடுதியில் காலை உணவு. பிறகு ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கடைகளில் தேவையானவற்றை வியாபாரம் செய்து கொண்டு பகல் 12 மணியளவில் தங்கும் அறைக்கு திரும்பினோம். ஒரு மணியளவில் மீண்டும் ஆரியாஸ் பகல் உணவு. தமிழ்நாட்டு சாப்பாடு உண்டோம். உண்ட மயக்கத்தில் ஒரு மணி நேரம் ஒரு குட்டி தூக்கம். பிறகு மாலை 3 மணியளவில் சென்னைக்குத் திரும்ப ஆலப்புழா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆலப்புழா அதி விரைவு இரயில் 3.40 மணியளவில் புறப்பட தயாராக இருந்தது. நாங்கள் எர்ணாகுளம் வடக்கு இரயில் நிலையம் செல்ல ஒருவருக்கு 50 ரூபாய் பயண கட்டணம் செலுத்தி 5.30 மணியளவில் எர்ணாகுளம் வடக்கு இரயில் நிலையம் வந்தடைந்தோம். எங்களுக்கு இரவு 9.40 மணியளவில் திருவனந்தபுரம் அதி விரைவு  இரயிலில் முன்பதிவு செய்திருப்பதால் 4 மணி நேரம் நாங்கள் இரயில் நிலையம் அருகில் உள்ள தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டு, இரவு 8 மணியளவில் இரயில் நிலையம் அருகில் உள்ள அய்ஸ்வரியா உணவகத்தில் உணவருந்தி மகிழ்ந்தோம். பிறகு 9.40 இரயில் 5 நிமிட இடைவெளியில் புறப்பட்டது.

மறுநாள் 16.3.2023 அன்று காலை 10 மணியளவில் சென்னை மத்திய (சென்ட்ரல்) இரயில் நிலையம் வந்தடைந் தோம். சென்னை பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்தை இரயில் வந்தடைந்து மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு வந்து தங்கள் தங்கள் இல்லங்களுக்கு சென்றோம்.

இந்த பயணம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

- சு.மோகன்ராஜ், 

தாம்பரம் நகர செயலாளர், 

திராவிடர் கழகம். 

No comments:

Post a Comment