“அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்“ என்ற சட்டத்தின் அடிப்படையில் முறையாக ஆகம விதிகளையும் அர்ச்சனை மந்திரங்களையும் கற்றறிந்த ஜெயபாலன், பிரபு என்கிற இருவர் திருவரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் அர்ச்சகர் களாக 2021-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அந்த ஆலயத்தின் இரு பார்ப்பன அர்ச்சகர்கள் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்ததன்பேரில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.
"குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் “காமிக ஆகம“ விதிப்படி நடைபெறும் கோயிலாகும். இந்தக் கோயிலில் ஆதி சைவர்கள் சிவாச்சாரியார்கள் குருக்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். இந்த ஆகம விதியைப் பின்பற்றும் கோயில்களில் பிராமணர்களில் ஒரு பிரிவினரே கருவறைக் குள் நுழைய முடியாது. எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்த வர்கள் மட்டும் தகுதியிழப்பு செய்யப்பட்டிருந்தால் அதை அரசியலமைப்புச் சட்ட விரோதம் எனச் சொல்லலாம். இங்கு அப்படியில்லை. அர்ச்சகர்களாக நியமிக்கப்ட்டு உள்ள 2 பேரும் ஆதி சைவர்கள் - சிவாச்சாரியார்கள் குருக்கள் இல்லை. இதனால் அவர்களை “காமிக ஆகம" கோயில்களில் அர்ச்சகர் களாக நியமிக்க முடியாது. அவர்களின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது." ( மார்ச் 4 2023 இந்து தமிழ்திசை நாளிதழிலிருந்து )
இப்படிப்பட்ட கடுமையான விதிகளைக் கொண்ட “காமிக ஆகமம்" என்றால் என்ன? அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று தேடிய போது மயிலை அழகப்ப முதலியார் என்பவரால் சென்னை சிவஞானபோத யந்த்ரசாலையிலிருந்து அச்சிடப்பட்ட பழைமையான தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கிடைத்தது. நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள் ளவாறு இந்த ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களில் எவரெல்லாம் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும் என்பது பற்றி அதில் கூறப்பட்டுள்ள சில வரிகளைக் காண்போம்.
“தந்த்ராவதார படலம் ---- ஆதி சைவ பிராம்ணர்களால் ஆசாரிய பரம்பரையாக இவைகளை ( பிரதிஷ்டை முதலான க்ரியைகள் கர்ஷண முதல் அர்ச்சனை வரையிலும்) ஓதலும் ஓதுவித்தலும் செய்யத்தக்கது. அந்தக் கார்யம் இதர மனிதர்களால் செய்யத்தக்கதன்று. தீட்ஷையில்லாத ப்ராம்ணர்கள் முதலிய 3 வர்ணத்தாரும், சூத்ர ஜாதிகளும், சவர்ணாதி யான தாழ் ஜாதியினரும், சிற்பிகளும் சித்ர வேலைக் காரன் முதலானவர்களும் சைவ சாஸ்த்ரங்களைப் படிப்பார்களாகில் அந்தப் பாவத்தால் அரசனுக்கும் ராஜ்யத்திற்கும் சீக்கிரமாக நாசம் உண்டாகும். ஆகையால் அரசன் தடுக்க வேண்டும்.”
இது போன்ற கருத்துக்கள் பலவிடங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் நீதிபதி மாற்றவே முடியாத அந்த 'காமிக' ஆகமத்தின் விதிகளை மீறக்கூடாது என்ற எண்ணத்தில் தீர்ப்பளித்துள்ளார்.
சரி. இந்த ஆகம விதிகளில் மேலும் உள்ளே சென்றபோது கிடைத்த சிலவரிகளைக்காண்போம்.
“ஸ்னாந விதிப்படலம் ----- மூக்கை சிந்துதல் காறியுமிழ்தல் மெதுவாய் ஏப்பமிடல்களை நீக்க வேண்டும். த்ரணம், ஓட்டுப்பாளம், மண்ணாங்கட்டி இவைகளால் குதத்திலிருந்து மலத்தை நீக்க வேண்டும். (அர்ச்சகர்களுக்கு சொல்லப்பட்டது). அர்ச்சகர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எவராவது நீதி மன்றத்தை நாடினால் அதன்படி நீதி மன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
"கள்ளை பாநம் செய்து குருபத்தினியை புணர்ந்து பொன்னைத் திருடினாலும் பிரம்மகத்தி செய்வதாலும் பஸ்மத்தினால் (திருநீறு) புசப்பட்டவனாய் பன்ம மயமானப் படுக்கையில் சயனித்தவாய் ருத்ராத்யயனம் பண்ணுகிறவன் ஸமஸ்த பாவங்களால் விடப்படுகிறான். 'காமிக' ஆகமம்தான் கூறிவிட்டதே என்று சட்டப்படிக் குற்றம் செய்த ஒருவன் தன் முன்னே திருநீறு அணிந்து தான் ருத்ராத்யயனம் செய்பவன் என்று சொன்னால் பாவங்களிலிருந்து விடுபட்டவன் ஆகிறான் என்று கருதி அவனை நீதி மன்றங்கள் விடுவிக்குமா? 'காமிக' ஆகமம் சொல்லியிருக்கும் இன்னுமொரு விதியைப் பார்ப்போம்
அரச்சனா விதிப்படலம் ----- மூன்று காலங் களிலும் பலி,ஓமம், தூபம் அய்ம்பது வேசிகளோடு கூடின முப்பத்தினாலு வாத்யம் இவைகள் கூறப் பட்டுள்ளன. வாத்யம் இருபத்து நான்கிற்குக் குறை வில்லா மலிருத்தல் வேண்டும். யௌவன ரூபசம்பத் துடைய வேசிகள் முப்பத்து நான்கு அல்ல இருபத்து நான்கு அதமம் பத்தாவது இருத்தல் வேண்டும். ” 'காமிக' ஆகமம் இப்படி சொல்லியிருக்கிறது. எனவே இந்த ஆகமக்கோயில்களில் மேற்சொல்லப்பட்டுள்ள விதிப்படி வேசிகளை நியமிக்க வேண்டும் என்று எவராவது நீதி மன்றத்தை நாடினால் அதனை வழுவாது அதன்படி நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிப்பார்களா?
தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்ட பின்னர் அது எப்படி நடைமுறைப்படுத்தப்பட முடி யாதோ அவ்வாறே உச்சநீதி மன்றத் தீர்ப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பு வழங்கி விட்ட பின்னர் இங்கே ஆகமம் எங்கே வந்தது?
அனைவருக்கும் அனைத்தும் என்று சமூக நீதிக்காகவும். மனித நேயத்திற்காகவும் உலகம் முன்னோக்கிப் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் இந்த மாதிரியான பிற்போக்கான ஆகம விதிகள் இறைவனுக்கே ஏற்புடையதா என்கின்ற கேள்விகள் இறை நம்பிக்கையாளர்கள் நெஞ்சங்களில் எழ வேண்டும். இறை நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்டது. ஆனால் சமூக நிலை என்கின்றபோது அதன் நிலைப்பாடு பகுத்தறிவோடு இருக்க வேண்டும் நீதிமன்றங்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண் டும் என்பதுதான் அனைவரின் எண்ணங்களுமாகும்.
- ஞான. வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்.
No comments:
Post a Comment