சமத்துவத்தை, அரசமைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும் - வழக்குரைஞர் அ.அருள்மொழி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

சமத்துவத்தை, அரசமைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும் - வழக்குரைஞர் அ.அருள்மொழி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 9-  பார் கவுன்சிலில் பெண் வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (8.3.2023) கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் ‘பன்னாட்டு பெண்கள் தின கண்காட்சி’யை நடத்தியது. 

இந்தக் கண்காட்சியை திறந்து  வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவர்  என்.ஜி.ஆர்.பிரசாத் பேசுகையில், 1958 ஆம் ஆண்டு தன்னுடன் ஒரே ஒரு  பெண் வழக்குரைஞர்தான் படித்தார். வியக்கும் வகையில் மிக திறமையாக வாதாடக்கூடிய அவர், பெண்ணாக இருந்ததால் நீதிபதியாக முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டார்.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் குறிப்பிடுகையில், “உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 246 நீதியரசர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். தற்போது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முன்சீப்க ளில் 60 விழுக்காடு பெண்களாக உள்ளனர். ஆண்டு தோறும் நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் வழக்குரைஞர்களில் 15 விழுக்காடு பெண்களாக உள்ளனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்தாண்டு 9ஆயிரம் பேர் பதிவு செய்தனர். அதில்  பெருமளவு பெண்களாக உள்ளனர். ஆனால், 25 பார் கவுன்சில் உறுப் பினர்களில் ஒரேஒரு பெண் வழக்குரைஞர் மட்டுமே உள்ளார். இதில் மாற்றம்  கொண்டுவர ஆலோசித்து வருகிறோம். இதற்கான முன்னெடுப்புகளை அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சார்பு நீதிபதி பணியிடங்களில் 40 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு காரணமாக அதிக நீதிபதிகள் கிடைக்கிறார்கள். அதேசமயம் சமத்துவத்தை, அரச மைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும்” என்று கூறிய வழக்குரைஞர் அ.அருள்மொழி “ஹத்ராஸ் வழக்கில் ஏராளமான காட்சிப் பதிவு சாட்சியங்கள் இருந்தும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட் டுள்ளனர். உ.பி., குஜராத்  போன்று தமிழ்நாடு மாறாமல் பாதுகாக்க வேண்டிய கடமை வழக்குரைஞர்களுக்கு உள்ளது. பெண்கள் மீதான வன்முறை வயது வித்தியாச மின்றி நடக்கிறது. மனித மாண்புகள் செல்லரித்து வரு வதை சரி செய்ய வேண்டும்” என்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா பேசுகையில், இந்தாண்டு  மகளிர் தினத்திற்கான கருப்பொருளாக ‘இணையத்தில் ஆண், பெண் சமத்து வத்தை நிலைநாட்டுவோம்’ என அய்.நா. நிர்ணயித்துள்ளது. இணையத் திலும், அறிவியல் தொழில் நுட்பத் திலும் பெண்களை தவறாக சித்தரிப் பதற்கு எதிராகக் குரல்  எழுப்ப அறைகூவல் விடுத்தார். 

மேலும் அவர் பேசுகையில், வரதட்சணை சரியென்றும், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் சொல்லக்கூடிய நீதிபதிகளும் உள்ளனர். எனவே, சட்டத்தை, பாலின  சமத்துவத்தை நிலைநாட்ட வழக்குரைஞர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்விற்கு சென்னை மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வழக்குரைஞர்கள் என்.ஆர்.இளங்கோ எம்.பி., த.பார் வேந்தன் (சமத்துவ  வழக்குரை ஞர்கள் சங்கம்), சி.விஜய குமார் (ஜனநாயகம் மற்றும் சமூக  நலன்களுக்கான வழக்குரைஞர் மய்யம்), சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ், சென்னை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பா.ஹேமாவதி, எம்.சமந்தா உள்ளிட்டோர் பேசினர்.

No comments:

Post a Comment