கி.தளபதிராஜ்
கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி
மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!
தஞ்சையில் 5.8.1943 மாலை நடைபெற்ற நகர்மன்ற தேர்தல் வெற்றியை ஒட்டிய ஒரு தேநீர் விருந்தில் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேப பாடல் இது. பின்னர் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல தம்பி படத்திலும் இடம் பெற்றது.
இந்தப் பாடலின் ஊடே கலைவாணர் அவர்கள் “எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் எங்கள் தேசத்திலே தீண்டாமையை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்டும் இன்னும் தீண்டாமை அறவே ஒழிந்த பாடில்லை. இப்பேற்பட்ட அருமையான காரியத்தை, கஷ்டமான காரியத்தை மனிதர்களால் செய்ய முடியாத காரியத்தை மரக்கட்டையாகிய நீ வந்த அன்றைக்கே செய்து விட்டாய்! சகல ஜாதியாரையும் ஒரே பெஞ்சில் உட்கார வைத்தது உன்னுடைய சாதனை அல்லவா!” என்று கதாகாலட்சேபம் செய்வார்.
இரயில் வண்டி இப்படி மக்களை பாகுபாடு இல்லாமல் ஏற்றிச் சென்றது என்றாலும் ரயில் நிலைய உணவு விடுதிகளில் ஒரு பக்கம் பார்ப்பனர்கள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரயில் நிலைய உணவு விடுதிகளில் ‘பார்ப்பனர்’ ‘பார்ப்பனரல்லாதார்’ என தனித்தனியாக போர்டு வைத்து வெவ்வேறு இடத்தில் உணவு பரிமாறப்பட்டது. அதைக் கண்டு வெகுண்டெழுந்தார் பெரியார்.
இந்திய ரயில்வே அப்போது தென்னிந்தியாவில் எஸ்.அய்.ஆர், எம்.எஸ்.எம் போன்ற தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. ரயில்வே சிற்றுண்டி சாலைகள் பெரும்பாலும் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டுவந்த நிலையில் உணவருந்த, பார்ப்பனர்களுக்குத் தனி இடமும் பார்ப்பனர் அல்லாதார்க்குத் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்ததைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இந்த வேற்றுமையை ஒழிக்காவிட்டால் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.
இது குறித்து ‘இந்திய கவர்மெண்ட் கவனிப்பார்களா?’ என்று விடுதலையில் தலையங்கம் தீட்டினார்.
ஹிந்து மகா சபை தலைவர்கள் உண்மையிலேயே ஹிந்துக்கள் என்பவர்கள் எல்லோருக்கும் தலைவர்களாக இருப்பார்களானால், இந்த நாட்டின் ‘பார்ப்பான்’ ‘சூத்திரன்’ ‘பறையன்’ என்கின்ற பேதத்தையும், கொடுமையையும் கவனித்திருக்க மாட்டார்களா? இந்த நாட்டில் இந்த கூட்டங்களுக்கு தனித்தனி ஸ்தாபனமும் பேதமும் ஏன் என்று கேட்டிருக்க மாட்டார்களா? ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும், கோவில்களிலும் சூத்திரனையும் பறையனையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை கவனித்திருக்க மாட்டார்களா?
தென்னாட்டில் பார்ப்பனர் அல்லாதவருக்கு ‘சூத்திரன்’ என்று இடப்பட்டிருக்கும் பெயர்களை எடுக்க இதுவரை எவ்வளவோ கிளர்ச்சி நடந்தும் யாரும் கவலை செலுத்தியதாக காணப்படவில்லை. சோற்றுக்கடைகளிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும் பிராமணாள் சூத்திரன் என்றும் பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்றும் பிரிவு படுத்தி காட்டப்பட்டிருக்கும் பலகையையும், எழுதி இருக்கும் எழுத்துக்களையும் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று சுமார் 17 ஆண்டு காலமாக முயற்சித்தும் நூற்றுக்கணக்கான மாநாடுகளில் தீர்மானங்கள் செய்தும் இதுவரை எந்த இந்து மகாசபை தலைவர்களோ, ‘ஓர் தாய் வயிற்றில் பிறந்தோம்!’ என்று ஓலமிட்டுக் கொண்டு தெருவில் திரியும் எந்தத் தேசியத் தலைவரோ, தேசபக்தரோ சிறிதும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் இந்தியர்களுக்குள் அபிப்பிராய பேதம் இல்லை என்றும் பிரிட்டீஷார்தான் பேதப்படுத்தி வருகிறார்கள் என்றும் சொல்வது எப்படி நாணயமும் அறிவுடைமையும் ஆகும் என்று கேட்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை ஓட்டல்களிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும் இருந்து வரும் பேதத்திற்கு சர்க்கார் (பிரிட்டீஷார்) தான் காரணம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் சர்க்காரால் நடத்தப்படும் ஓட்டல்களில் ஏன் இம்மாதிரி பிராமணன் - பிராமணரல்லாதார் என்று இடம் பிரித்து எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. அதாவது ரயில்வேக்கள் எல்லாம் சர்க்காரால் நடத்தப்படுவதாகும். ரயில்வே சம்பந்தமான ஓட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், ரயில்வேக் காரர்களால் நடத்தப்படுகின்றன என்று தான் அர்த்தமாகும். உண்மையும் அதுதான். அப்படி இருக்க, அவர்கள் இதை அனுமதித்துக் கொண்டு வருவதன் காரணம் இந்திய மக்களை, ஹிந்து மக்கள் என்பவர்களையே பிரித்து வைப்பதற்கு இவர்கள் காரணமாய் இருக்கிறார்கள் என்று சொல்ல இடம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கிறோம்.
ஆதலால் இந்திய ஒன்றிய அரசாங்கத்தார் இதைக் கவனித்து உடனே தங்கள் ஆதிக்கத்தில் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் உள்ள இந்த பேதங்களை எடுத்து விடச் செய்வார்களா? இல்லாவிட்டால் இதை மானமுள்ள மக்கள் இனியும் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா?
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயிலுக்குள் தீண்டாதார் உள்பட சகல வகுப்பாரும் செல்லுகிறார்கள். இப்படி இருக்க பிரிட்டிஷ் இந்தியாவில் மாத்திரம் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் ஓர் இடத்தில் இருந்து ஆகாரம் சிற்றுண்டி சாப்பிட பிரிட்டிஷார் உரிமை கொடுக்கவில்லை என்றால் பிரிட்டிஷாரும் மக்களை பிரித்து வைத்து ஆளப் பார்க்கிறார்கள் என்பவர்களுக்கு இடம் கொடுத்தவர்களாக ஆகவில்லையா என்று கேட்கிறோம். என்று அந்த தலையங்கத்தில் எழுதியிருந்தார்.
மேற்படி நிர்வாகம் தனியாரால் நடத்தப்பட்டு வந்தாலும் அது ரயில்வே வாரியத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்பதால் பிரிட்டீஷாருக்கே நேரடியாக வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.
பெரியாரின் எச்சரிக்கைக்குப் பின் பார்ப்பனர்கள் உணவு அருந்த தனியிடம் ஒதுக்கப்பட்டு இருந்ததை எம்.எஸ்.எம் ரயில்வே நிர்வாகம் நீக்கியது. 1941 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ‘பிராமணாள் சாப்பிடும் இடம்‘ என்ற போர்டு நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.
எம்.எஸ்.எம். நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொண்ட நிலையிலும் மற்றொரு நிறுவனமான எஸ்.அய்.ஆர். தொடர்ந்து பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாகவே இடத்தை ஒதுக்கி உணவு விடுதியை நடத்தி வந்தது.
ஒரே இடத்தில் உணவருந்த அனுமதித்தால் வைதீக யாத்ரீகர்கள், யாத்திரைகளை நிறுத்திவிடுவார்கள் என்றும், இதனால் வருமானம் பாதிக்கப்படும் என்றும் மேற்படி நிறுவனத்திற்கு ஆதரவாக தென்னிந்திய அதிகாரிகளால் காரணம் சொல்லப்பட்டது. அதை அறிந்த பெரியார் எஸ்.அய்.ஆர். நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தார்.
பெரியாரின் போராட்டத்திற்குப் பின் மார்ச் 20 ஆம் தேதி எஸ்.அய்.ஆர். நிர்வாகமும் உணவு விடுதியில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகையை நீக்கியது. பெரியார் மேற்படி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்து விடுதலையில் அறிக்கை வெளியிட்டார்.
ரயில்வே உணவு விடுதிகளில் ஜாதி பேதம் ஒழிந்ததையொட்டி வெற்றிவிழா கொண்டாடச் சொல்லி தோழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது விடுதலை நாளிதழ்.
வெற்றி! வெற்றி!! தமிழர் கிளர்ச்சிக்கு வெற்றி!!!
எஸ்அய்ஆர் ஓட்டலிலும் ஒழிந்தது ஜாதி பேதம். தென்னிந்திய ரயில்வே ஓட்டல்களில் இதுவரை பிடிவாதமாக இருந்து வந்த ஜாதி பேத முறையான பார்ப்பனனுக்கு தனி இடம் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்ற கொடுமை இன்றோடு ஒழிந்து விட்டது என்ற செய்தி நமது செய்தியாளரின் தந்தி மூலம் நமக்கு கிடைத்தது. தமிழரின் உள்ளம் பூரித்தது. பார்ப்பன அகம்பாவம் பாழாயிற்று. வெற்றி! வெற்றி!! ஆரியத் திமிர் அடங்கிற்று! பெரியார் பெருவற்றி அடைந்தார்! தமிழர் ‘சம உரிமைப் போரில்’ மற்றோர் வெற்றி பெற்றனர்! வெற்றி விழா கொண்டாடுக!
என்று எழுதி தோழர்களை உற்சாகப் படுத்தியது.
விடுதலை செய்தி கண்டு 1941 மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் மார்ச் 23ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தாலுகா நீதிக்கட்சி மாநாட்டிலேயே இந்த வெற்றி பிரதிபலித்தது. ஈரோட்டிலிருந்து கரூர் வந்திறங்கிய பெரியார், அண்ணா உள்பட்ட தலைவர்களுக்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொண்டர் படை அணி வகுப்பு மரியாதை செய்தது. தொண்டர்கள் கொடி உயர்த்தி குதிரையில் முன் வரிசையில் செல்ல மேள வாத்தியங்கள் முழங்க, தோழர்கள் வான்முட்ட வெற்றி முழக்கமிட, தலைவர்களை மோட்டார் வாகனத்தில் அமர வைத்து மாநாட்டுப் பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கிறது.
இது நடந்தது 1941இல். இந்த வரலாற்றுப் பின்னணிதான் ‘தந்தை பெரியாரின் குடிஅரசே எனது குருநாதர்’ என்று சொன்ன கலைவாணரை கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்த தூண்டியிருக்கக் கூடும்!
பெரியார் எழுதிய தலையங்கத்தில், இந்திய தேசியத் தலைவர்களை கடுமையாக தாக்கி எழுதியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. காங்கிரசில் தலைவர்களாக இருந்த பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில் அடித்த கொட்டமோ சொல்லி மாளாது.
கல்கத்தாவில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து புறப்பட்ட தென்னிந்திய பார்ப்பனப் பிரதிநிதிகள், தங்களுக்கான உணவை பார்ப்பன சமையல் காரர்களைக் கொண்டுதான் சமைக்க வேண்டும் என்றும் அதையும் குறிப்பிட்ட மங்கள நேரத்தில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அந்தக் கப்பல் நிறுவனத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அதோடு கப்பலில் பயணம் செய்த பார்ப்பனர் அல்லாதவரின் பார்வைப்பட்டு அவர்களுக்கும் அவர்கள் உட்கொள்ளும் உணவிற்கும் தோஷம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி இருந்த அறைகளிலேயே உணவு பரிமாறப்பட வேண்டும் என்றும் அடம் பிடித்திருக்கிறார்கள். அதிலும் ரகுநாதராவ் என்ற பார்ப்பனர் தீட்டுப் பட்டுவிடும் எனக் கருதி அய்ந்து நாள் கப்பல் பயணத்தின் போதும் சமைக்கப்பட்ட உணவில் ஒரு கவளத்தை கூட உண்ணாமல் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த வேர்க்கடலை, உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு ஒப்பேத்தியிருக்கிறார். இன்னொரு வைணவப் பார்ப்பனர் தனது வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவைக் கொண்டு வந்து தனது பார்ப்பன நண்பர்களின் பார்வை கூட படாதவாறு சாப்பிட்டு நாட்களை நகர்த்தியிருக்கிறார்.
1889ஆம் ஆண்டில் பம்பாயில் அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு கூடியபோதும் காங்கிரஸ் பிரதிநிதிகளாக வரும் தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதுதான் பெரிய சிக்கலாக இருந்திருக்கிறது. அவர்கள் வைணவ பார்ப்பன சமையல்காரர்கள் சமைப்பதை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ள மறுத்ததுடன் ஒவ்வொருவரும் தனித்தனி சமையல் அறைகளை கேட்பதுடன் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய காப்பியை தனித்தனியாக தயாரித்து குடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். 1917 ஆம் ஆண்டிலும் இதே நிலைதான் நீடித்திருக்கிறது.
திரு.வி.க கூட தனது வாழ்க்கை குறிப்பில் தேசியவாத நண்பர்களான பண்டித அசலாம்பிகை அம்மையார், வெங்கந்தூர் கணபதி சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி போன்றோர் தீட்டாகி விடும் என்பதால் தனக்கு எதிரே ஒருபோதும் உணவு அருந்தியது இல்லை என்று கூறியிருக்கிறார் . தேசியத் தலைவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதல்லவா? இந்த கொடுங்களத்தில் தான் சளைக்காமல் போராடி வெற்றி கண்டிருக்கிறார் பெரியார்.
ரயில்வே உணவு விடுதிகளில் ஜாதி பேதம் ஒழிந்த நாள் - மார்ச் 20! நினைவைப் போற்றுவோம்!
No comments:
Post a Comment