விருதுநகர், மார்ச் 5- குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யும் அரிசியின் அளவு தெரிய வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இத னால் குடும்ப அட்டைதாரர்கள் இருமுறை ரேகைப் பதிவு செய்ய நியாய விலைக்கடையில் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் 34 ஆயிரத்து 791 நியாய விலைக் கடைகளில் 2 கோடியே 23 லட் சத்து 62 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஏஏஒய் வகை அட்டைகளுக்கு 35 கிலோ அரிசியை ஒன்றிய அரசு வழங்ககிறது, மேலும், பி.எச்.எச் வகை அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 12 கிலோவும், இரு நபர்களுக்கு 16 கிலோ, 3 நபர்களுக்கு 18 கிலோ வும், 4 நபர்களுக்கு 20 கிலோவும், அதற்கு மேல் இருந்தால் 25 கிலோ வரையும் வழங்கப்படுகி றது. என்.பி.எச்.எச் அட்டைகளுக்கு 20 கிலோவும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நியாய விலைக் கடைகளில் ஏஏஒய் மற்றும் பி.எச்.எச். அட்டைகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கும் அரிசி கணக்கினை தனியாக பிரித்து ரசீதுகள் வழங்க வேண்டுமென ஒன்றிய அரசு, மாநில அரசுகளிடம் கேட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி பி.எச்.எச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பொழுது, அரிசியினை மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கீட்டில் முதல் இரசீதாகவும், அரிசி மற்றும் இதர பொருட்களை 2 ஆவது ரசீதாகவும் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் இயந்திரத்தில் இரண்டு ரசீது பதிவு செய்யுமாறு அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பி.எச்.எச் மற்றும் ஏ.ஏ.ஒய் அட்டைதாரர் கள் நியாய விலைக் கடைக்கு சென்றால் அரிசிக்கு ஒருமுறையும், பிற பொருட்களுக்கு மற்றொரு முறையென இருமுறை இயந்திரத்தில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டுமென நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, பல முதியோர்களுக்கு முதல் முறையே ரேகை விழாத நிலையில் 2 ஆவது முறை ரேகை பதிவு செய்ய நியாய விலைக் கடைகளுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை சரிவரக் கிடைக்காத இடங்களில் குடும்ப அட்டை தாரர்கள், கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் ஊழியர்கள் மீதும் தாக்குதலும் நடக்கிறது.
எனவே, பொது விநியோகத் திட்டத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட ஒரே ஒருமுறை மட்டும் குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகை வைக்கும் ஒரே ரசீது முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பொது மக்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment