‘‘சாவர்க்கர்: காலா பானி அவுர் உஸ்கே பாத்’’ (சாவர்க்கர்: அந்தமான் சிறைவாசமும் அதற்குப் பின்னும்) என்ற தலைப்பில் அசோக்குமார் பாண்டே ஹிந்தியில் எழுதியுள்ள நூலை, புதுடில்லி ராஜ்கமல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 253 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை டில்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டே திறனாய்வு செய்த கட்டுரை சோஷியல் சைன்டிஸ்ட்(Social Scientist) இதழில் (நவம்பர் - டிசம்பர் 2022) வெளிவந்துள்ளது. அதன் மொழியாக்கம் இது.
«««
முதல் உலகயுத்தத்திற்குப்பின் பல ஆண்டு காலம் வானொலி, திரைப்படம் மற்றும் அச்சு ஊடகங்களை ஃபாசிஸ, ஜெர்மானிய ஏகாதிபத்திய ஆட்சி சார்ந்த செய்திகளே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. இத்தா லிய, ஜெர்மானிய மக்களை கவருவதே அவற்றின் நோக்கமாக இருந்தது. கோயபல்ஸைப் போலவே பொய்களைப் பரப்பி வந்தன அந்தக் காலக்கட்டத்து ஊடகங்கள். இரவும் பகலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. பொய்யே உருவான ஜெர்மன் அதிகாரி அல்லவா கோயபல்ஸ்? ஊடகங் களும் அவரைப் போலவே இருந்ததில் வியப் பில்லையே!
2014ஆம் ஆண்டில் இந்த நாட்டிலும் அதுபோன்ற நிலை உருவாயிற்று. பணபலமும் அடியாட்களின் பலமும் கொண்ட ஒரு கட்சி பொய்ப்பிரச்சாரப் பணியில் இறங்கியது. சமூக வலைதளங்களில் குவிந்த பொய்யான செய்திகளையும் வரலாற்று திரிபுகளையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு அந்தக் கட்சி கோயபல்ஸ் பாணி செயல்களில் இறங்கி தன் விஷமங்களைத் துவக்கியது. கட்சியும் அரசும் இரண்டறக் கலந்து ‘‘வார இறுதி வரலாற்று நிபுணர்களையும், வாட்ஸப் பல்கலைக் கழகங்களையும்” உருவாக்கிவிட்டன.
அவ்வப்போது வரலாற்றைத் திரித்து தருணத்திற் கேற்றபடி வார இறுதி நாட்களில் தயாரித்து வெளியிடு வதால் ‘‘வார இறுதி வரலாற்று அறிஞர்கள்’’ என்கிறார் நூலாசிரியர். இணையவழியாக தங்கள் மேதா விலாசத்தை அவ்வப்போது இவர்கள் வெளிப்படுத்தி வருவதால் ‘‘வாட்ஸப் பல்கலைக்கழகங்கள்’’ அவை என்று கேலி செய்துள்ளார் நூலாசிரியர்.
கூட்டாட்சித் தத்துவத்தையே புறம் தள்ளிவிட்டது அந்த செல்வாக்குமிக்க தலைமை. அச்சு ஊடகமும் சமூக வலைதளங்களும் மக்களுக்கு வரலாற்றை உள்ளது உள்ளபடி புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சக்திகள். அவை அந்தக் காலக்கட்டத்தில் அதைச் செய்யத் தவறிவிட்டன.
திரிக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை நேர்மையான கண்ணோட்டத்துடன் அடையாளம் காட்டும் நூல் இது. மனஉறுதியுடனும் அபாரத் துணிவுடனும் இந்த நூலை எழுதியுள்ள அஷோக்குமார் பாண்டே வாசகர் வட்டங் களில் பிரபலமான எழுத்தாளர், ‘காஷ்மீர் நாமா’, ‘காஷ்மீரும் காஷ்மீர் பண்டிட்களும்,’ ‘உஸ்னே காந்திகோ க்யோன்மாரா?’ (‘அவன் ஏன் காந்தியைக் கொன்றான்?’) போன்ற நூல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் இவர்.
‘‘நம்பத் தகுந்த வரலாறு’’ (The Credible History) என்ற பெயரில் இவர் துவக்கியுள்ள யூடியூப் சேனலை ஏறத்தாழ அறுபதாயிரம் பேர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். மிக நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்த குறிப்பிட்ட நூல். ஹிந்துத்துவா வாதிகளுக்கு சரியான பதிலடி இது என்றே கூறலாம்.
சாவர்க்கரை ‘வீரர்’ என்று போற்றி அவரை உன்னத உத்தமராகச் சித்தரிக்க முயன்று வருகின்றனர் ஹிந்துத்து வாவாதிகள். அந்த முயற்சியை முறியடிக்கவே எழுதப்பட்ட நூல் இதுவென்றாலும் மிகையாகாது. சாவர்க்கரின் நிஜமுகத்தை ஆசிரியர் காண வைத்துள்ளார். தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு சாவர்க்கர் எழுதியவற்றையெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் உள்ளனர். தனி நபர் சரிதங்களை எழுதியுள்ள தனஞ்செய் கீர் அவர்களுள் ஒருவர். இன்னொருவர் ஊடகங்கள் பிரபலப்படுத்திய விக்கிரம் சம்பத் என்பவர். இருவருமே பிறருடைய எழுத்துக்களை களவாடியவர்கள் என்று இகழப்பட்டவர்கள். இவர்கள் இருவருமே சாவர்க்கரை கண்மூடித்தனமாக ஆதரித்த வர்கள் என்று குறிப்பிடுகிறார் இந்த நூலின் படைப்பாளி அசோக்குமார் பாண்டே. உண்மைகள் கண்டறியப்பட்டு திரிபுகள் ஏதுமின்றி எழுதப்படுவதுதான் நல்லதொரு வரலாற்றப் படைப்புக்கு அடையாளம். இந்த விதியை தனஞ்செய் கீரும், விக்கிரம் சம்பத்தும் மீறியுள்ளனர். சுயமாகச் சிந்தித்து எழுதாமல் தக்க ஆதாரங்களைத் தராமல் மனம்போன போக்கில் சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்திருப்பவர்கள் இருவருமே என்று இந்த நூல் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார் அசோக்குமார் பாண்டே. இவர்களுக்குச் சரியானபடி பதிலடி வழங்கி யுள்ளார் இந்த நூலாசிரியர்.
நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இந்த நூல். திலகரின் பாதையில் பிற்போக்குவாதியாக வளர்ந்த சாவர்க்கர் நாளடைவில் பொதுவுடமைவாதியாக மாறிய கதையை விவரிக்கும் இந்த நூல், 1947ஆம் ஆண்டிற்குப் பின் அதே சாவர்க்கர் எப்படி மாறினார் என்பதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகு 1947ஆம் ஆண்டில் அய்க்கிய அமெரிக்க நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே இருந்த உறவில் ஒரு கடுமை நிலவியது. அமைதி நிலையும் இன்றி - போர் நிலையும் அற்ற இந்தச் சூழ்நிலையைக் குறிக்க வால்டர் லிப்மன் என்ற அறிஞர் ‘‘cold war’’ என்னும் பிரயோ கத்தை உருவாக்கினார். உறவில் ஏற்பட்ட விரிசலை வெளியில் காண்பிக்காமல், பட்டும் படாமல், ஓர் அக்கறையற்ற நிலையில் இருப்பது ‘‘cold war’’ என்று அறியப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் Central Intelligence Agency (CIA) என்னும் உளவுத் துறைக்காக ரகசியமாக பணியாற்றியுள்ளார் சாவர்க்கர் என்கிறது இந்த நூல். வாரம் ஒருமுறை கட்டுரைகளை ஓர் உளவாளி இதழியலாளராக CIA-வுக்கு அனுப்பி வந்துள்ளார் சாவர்க்கர். இந்த வேவு பார்க்கும் தொழிலுக்கு வாரந்தோறும் CIA இவருக்கு வழங்கிய சன்மானம் எழுபத்தைந்து டாலர்களாம். இதற்கு சரியான ஆதாரங்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் ஆய்வு நோக்குடன் எளிய உரைநடையில் சாவர்க்கரின் வாழ்க்கையை நூலாசிரியர் சித்தரித்துள்ள போதிலும் இது சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பது குறிப்பிட்டே ஆகவேண்டிய உண்மை. சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் சார்ந்த பல முக்கிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைகளையும் அளித்துள்ளார் நூலாசிரியர் பாண்டே.
மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள இந்த நூலின் பக்கங்களில் சாவர்க்கரை ஒரு தற்புகழ்ச்சிக்காரராக, கூசாமல் பொய் பேசுபவராக, தற்பெருமைக்காரராக காணமுடிகிறது. அத்தகைய பெருமைக்கு ஏற்புடைய ஆதாரங்களும் இல்லை என்பது தெளிவாகிறது.
சாவர்க்கரின் சமகாலத் தோழர் பரமானந்த் என்பவர் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பல்வேறு சிறைகளில் சுமார் முப்பது ஆண்டுகாலம் இருந்தவர். அந்தமான் சிறையிலும் தண்டனை அனுபவித்தவர். இந்த பரமானந்த் எழுதிய பல சிறைவாசக் குறிப்புகளை நூலாசிரியர் படித்துள்ளார். பரமானந்த் சாவர்க்கர் குறித்து எழுதியுள்ளவற்றையும் ஆழ்ந்துப் படித்து சாவர்க்கரை நன்கு புரிந்துகொண்டுள்ளார் நூலாசிரியர் பாண்டே. எனவே அவருடைய கணிப்பு சரியானது என்றே கூறலாம்.
‘சித்திரகுப்தா’ என்னும் புனைபெயரில் தன் சுய சரிதையை ‘The Life of Barrister Savarkar’ என்ற தலைப்பில் எழுதி 1926ஆம் ஆண்டு வெளியிட்டுக் கொண்ட தற்பெருமைக்காரர் சாவர்க்கர்.
சாவர்க்கரின் கட்டுரைகள் பல தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் உண்மைக் கலப்பில்லாதவை ஏராளம். பொய்கள், ஆதாரமற்ற தகவல்கள் எக்கச்சக்கம். சாவர்க்கரைப் பற்றி நூல்கள் எழுதியவர்கள் உண்மைகள் என்ன வென்றே ஆராயாமல் அவர் தன்னைப் பற்றி கூறியவற்றையே கண்மூடித்தனமாக நம்பி ஏற்றுக் கொண்டு தங்கள் நூல்களை எழுதியுள்ளனர் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் அசோக்குமார் பாண்டே. மற்றவர்களைப் போல் அந்தத் தவறைச் செய்யாமல் ஆழமாக ஆய்வு செய்து, உண்மைகளை கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே இந்த நூலை எழுதி சாவர்க்கரின் சுயரூபத்தை, முகமூடி இல்லாத முகத்தை நமக்கு காண்பித்துள்ளார் பாண்டே. ஒரு சிறந்த ஆய்வு நூலுக்கென சில விதிமுறைகள் உண்டு. மற்ற எழுத்தாளர்களைப்போல் அவற்றை மீறிவிடவில்லை பாண்டே.
உளவியல் மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஒரு நபரைக் கணித்து மதிப்பிட்டு, மிகச் சாதாரணமான அந்த நபரை உச்சத்தில் ஏற்றி சில எழுத்தாளர்கள் புகழ்ப்பாமாலை பாடுவது இயல்பான விஷயம்தான். அத்தகைய முகஸ்துதிக்காரர்களைப் பற்றி பாண்டே இவ்வாறு கூறுகிறார்.
‘‘சாவர்க்கரின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய பல எழுத்தாளர்கள் அவரைப் பற்றிய தகவல்களை, அவரே நினைவு கூர்ந்து எழுதியவற்றை, அக்கறையுடன் படித் திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அலட்சியமும் கண்மூடித்தனமும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தி யுள்ளது. இதன் விளைவாக சாவர்க்கரின் நிஜ முகம் மறைந்துவிட்டது.’’
“மிகச்சாதாரண மனிதரான சாவர்க்கரை மிக உன்னத மனிதராக இவர்கள் சித்தரித்திருப்பது இவர் களுடைய தாழ்வு மனப்பான்மையை மட்டுமல்ல, சாவர்க்கரின் தாழ்வு மனப்பான்மையையும் நிரூபிக் கிறது.’’ என்கிறார் நூலாசிரியர் பாண்டே.
அவர் மேலும் கூறுகிறார்:-
“தாழ்வு மனப்பான்மையின் எதிர்விளைவே உயர்வு மனப்பான்மை. இது உளவியல் ரீதியானது. தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைக்க சிலர் தங்களை உயர்ந்த மனப்பான்மை உள்ளவர்களாக வெளி உலகிற்கு காண் பித்துக் கொள்வதுண்டு. இது ஆல்பிரட் அட்லர்(Alfred Adler) என்னும் உளவியல் நிபுணர் கூறியுள்ள கருத்து. சாவர்க்கர் விஷயத்திலும் இதுதான் உண்மை. அவருடைய தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் போலியானவை!’’
சாவர்க்கர் அப்படி ஒன்றும் உன்னதமான மனிதரல்ல என்பதற்கு எத்தனையோ சான்றுகள் ஆதாரபூர்வமாக இருந்தபோதிலும், அவரைப் போற்றிப் புகழ்ந்து உச்சத்தில் வைத்த அவலம் அவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே நிகழ்ந்ததுதான் பெரிய கொடுமை. பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சி முன்பு சாவர்க்கர் மண்டியிட்டதும், மன்னிப்பு கோரியதும் ஓர் அரசியல் சாதுரியம் என்றும், அவர் வளைந்தது பின்னர் நிமிர்வதற்கே என்றும் அவரு டைய கைத்தடிகள் விளக்கம் வேறு அளித்தன. இப்படியும் ஒரு ‘மாய வலை’ பின்னப்பட்டு சாவர்க்கரின் இரட்டை வேடம் மறைக்கப்பட்டு வந்தது நீண்ட காலமாக. சாவர்க் கரின் “வீரர்’’ என்ற முகத்திரை அவருடைய மறைவுக்குப் பின் பாண்டே போன்ற எழுத்தாளர்களால் விலகியது. இதற்கென பல ஆதாரங்கள் தேடி எடுக்கப்பட்டன. பிரிட்ஷ் அரசுக்குச் சாதகமாக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மன்னிப்புக் கோரி விடுதலைக்காக மன்றாடி அவர் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதம் உலகறிந்த விஷயம். அந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய இன்ன பிற கருணை மனுக்களையும் மொழிபெயர்த்து இந்த நூலாசிரியர் பாண்டே, 223 முதல் 247 வரை உள்ள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் சாவர்க்கர் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ‘மாய பிம்பம்‘ சுக்குநூறாக உடைகிறது.
சிறையிலிருந்து வெளிவந்து பிரிட்டிஷ் அரசுடன் தீவிரமாக மோதுவதுதான் கருணை மனுவின் நோக்கம் என்றால், அதன்படி அவர் தப்பிப்பிழைத்த பின் நடந்து கொள்ளாதது ஏன்? சிறைவாசத்திற்குப்பின் அவர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து எந்த ஒரு செயலிலும் இறங்கியதாக ஆதாரம் இல்லையே! சாவர்க்கரின் கோழைத்தனத்திற்கும், பொய் முகத்திற்கும் இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் என்று கேட்கிறார் நூலா சிரியர் அசோக்குமார் பாண்டே.
பாண்டே மேலும் ஆழமாக இதுபற்றி ஆய்வு செய்துள்ளார். விடுதலைக்குப்பின் சாவர்க்கர் காலனிய ஆட்சியை தீவிரமாக ஆதரித்துள்ளார். நாட்டை இரண் டாகப் பிளக்கும் சதிக்கும் உடந்தையாக இருந் துள்ளார். சரி - சிறைவாசத்தின் போது அவர் எப்படி இருந்தார் என்று பார்த்தால் அதிலும் ‘வீரம் தெரியவில்லை - கண்ணீரின் ஈரம்தான் பதிவாகியுள்ளது. சிறைச்சாலை ஆவணங்களில். விதிமுறைகளுக் கெல்லாம் கட்டுப்பட்டு ஒழுங்குப் பிள்ளையாகவே நடந்துகொண்டிருக்கிறார். இதைத்தான் “என் நன்னடத்தையை கருத்தில் கொண்டாவது மன்னிக் கவும்” என்று கருணை மனுவில் குறிப்பிட்டு புலம்பித் தீர்த்துள்ளார் சாவர்க்கர். இதற்கு “வீர’’ சவர்க்கர் என்ற பட்டம் வேறா என்று கேட்கிறார் நூலாசிரியர். 1920ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் நாள் அவர் எழுதிய கருணை மனு அவருடைய கோழைத்தனத்தின் முத்திரை மட்டுமல்ல, போலி வேடத்திற்கான சான்றுமாகும்.
சிறைவாசத்தின் போது உயர் அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டு பல சிறப்புச் சலுகை களை சாவர்க்கர் அனுபவித்துள்ளார். இதற்கும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கைதிகளைக் கண் காணிக்கும் ‘வார்டர்’ பதவிகூட இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
அந்தமான் சிறையிலிருந்து சாவர்க்கர் ஒருவர் மட்டுமே கருணை மனுக்களை தொடர்ந்து அனுப்பிய வண்ணம் இருந்தது ஏன்? எளிதில் அவரை சிறைச் சாலை அதிகாரிகள் மிதித்து நசுக்கி காலடியில் போட்டுக் கொள்ள எப்படி முடிந்தது? ஏனெனில் அவர் சாதாரண களிமண் உருண்டையாக இருந்தவர் - பிளக்க முடியாத பாறையாக இருந்தவர் அல்ல.
புரட்சியாளர்கள் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் ஒரு சமயம் “சிறைச்சாலை வசதிகள் போத வில்லை, மிக மோசமாக நடத்தப்படுகிறோம்” என்றெல்லாம் புகார் கடிதம் எழுதியதுண்டு. ஒரு போதும் அவர்கள் விடுதலை கோரி கருணை மனு அனுப்பியதில்லை. மனிதர்களாக நடத்துங்கள் என்று மட்டுமே கேட்டுக்கொண்டார்கள். ஆனால், சாவர்க்கர் எந்தக் குறையையும் சுட்டிக்காட்டி எழுதவில்லை. எந்த வசதியும் கோரவில்லை. குறைகள் இருந்தால்தானே? வசதிகள் தேவைப்பட்டால் தானே? நிம்மதியான சிறைவாசம் அல்லவா அந்த மனிதர் அனுப வித்தது? வெகு சாதுரியமாக சிறைச்சாலை அதிகாரி களுக்கு கூழைக்கும்பிடு போட்டே நாளை கடத்தியவரா யிற்றே சாவர்க்கர்?
வரலாற்று நிபுணரான ஆர்.சி.மஜும்தார் சாவர்க்கரின் சிறைவாசச் சாதுரியங்கள் யாவும் உண்மை தான் என்று கூறியுள்ளார். சாவர்க்கரை தங்கள் தலைவராக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வழிபடும் கைத்தடிகள் போன்ற வர்கள் மஜும்தார் கூறியதையும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்றனர். அந்த பொய் முகங்களுக்கு எந்த ஆதாரம் பற்றியும் அக்கறை இல்லை. அவர்கள் பார்வையில் சாவர்க்கர் ஒரு வீரர் - அப்பழுக்கற்ற போராளி; தன்னல மற்ற தியாகி!
கண்மூடித்தனமாக சாவர்க்கரின் புகழ் பாடி வருபவர் கள் எல்லோரும் அசோக்குமார் பாண்டேயின் இந்த நூலைப் படிக்க வேண்டும். எளிமையான நடையில் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள சிறந்த நூல் இது. ஒரு பொது உடைமைவாதியாக, காலனிய சிறைச் சாலைகளின் உள்ளேயும் வெளியேயும் அவர் போட்ட வேடத்தை கலைத்துள்ளது இந்த நூல்.
காலனிய ஆட்சியை எதிர்த்து வந்தது காங்கிரஸ். அந்த காங்கிரசையே எதிர்த்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷ் அரசின் கைக்கூலியாகவே விளங்கியவர் அவர். சுபாஷ் சந்திர போசையும், அவருடைய ஃபார்வர்ட் பிளாக் (Forward Block) அமைப்பையும் எதிர்த்தவர் சாவர்க்கர். பிரிட்டி ஷாரின் நண்பனாகவும், காங்கிரசின் எதிரியாகவுமே இருந்தவர் அவர். சுபாஷ்சந்திர போசை ஒரு போலி தேசியவாதி என்று சாடிய வேடதாரி இந்த சாவர்க்கர். இந்த நூலில் அசோக்குமார் பாண்டே சாவர்க்கரின் அகம் - புறம் இரண்டையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். எது நிழல், எது நிஜம் என்பதை படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகை யில் எழுதப் பட்டுள்ள அபூர்வமான நூல் இது.
சாவர்க்கரின் நம்பிக்கைகளில் காணப்பட்ட முரண் பாடுகளையும் பாண்டே நமக்குப் புரிய வைத் துள்ளார். ஹிந்துத்துவா பேசிய சாவர்க்கர் தன் சொந்த வாழ்க்கையில் அறிவியல் கண்ணோட்டத்துடனும் இருந்துள்ளார். பசு வழிபாடு, ஜாதி பாகுபாடு போன்ற பகுத்தறிவுக்கு எதிரான வற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். பசுக்களைக் காட்டிலும் மனிதர் களுக்கு அதிகப்பயன் தரும் பிராணிகள் கழுதைகளும் நாய்களும்தான் என்று கூறியுள்ளவர் சாவர்க்கர். எனவே மனிதர்கள் பசுக்களை வழிபட்டு வணங்குவது மடமை என்று கண்டித்தார். உலகளாவிய மனித நேயம் குறித்து மேடைகளின் பேசி வந்தவர் அது பற்றி நிறைய எழுதியும் தள்ளினார். ஆனால் சாவர்க்கரின் அரசியல் சிந்தனைகளில் பிற்போக்குத் தனமே காணப்பட்டது. ஜாதி பாகுபாட்டுக் கருத்துகளும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வெறுப்பும் அவருடைய பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் வெளிப்பட்டன.
புகழ் மாலைகளை தனக்கே சூட்டிக் கொண்ட சாவர்க்கர் முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே வாழ்ந்தார். மறைந்திருந்து தாக்கும் கோழையாகவும், ரகசிய திட்டங்கள் தீட்டும் சாதுரியமான சதிகாரராகவுமே அவர் இருந்துள்ளார். ஹிந்துத்துவா குறித்து நீட்டி முழக்கிப் பேசி ஹிந்துக்களை உணர்ச்சிக் கொந்தளிப் படையச் செய்தவர், நிஜவாழ்வில் உணர்ச்சிகளற்ற ஜடம் போலவே இருந்துள்ளார். பல சமயங்களில் இரக்கமற்றவராக, மூர்க்கக் குணம் கொண்டவராக நடந்து கொண்டிருக்கிறார். நெருங்கிய உறவினர்க ளோடும், உற்றத்தோழர்களோடும் சில சமயங்களில் கடுமையாக நடந்துகொண்டதும் உண்டு. 1963ஆம் ஆண்டில் தன் மனைவி இறக்கும் தறுவாயில் படுத்தப்படுக்கையாகக் கிடந்தபோது அவரைப் போய் பார்க்கவும் மறுத்துவிட்ட கல்நெஞ்சக்காரர் சாவர்க்கர். மனைவியின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ளாத அன்புக் கணவர் இந்த மனிதர்! கோட்சேவுக்கு நெருங்கிய தோழராக இருந்த சாவர்க்கர், காந்தி கொலையுண்ட பிறகு கோட்சேவின் உறவைத் துண்டித்துக் கொண்டார். நீதி மன்ற விசாரணையின் போது கோட்சே பற்றி சாவர்க்கர் கவலைப்படவே யில்லை. நல்ல கணவனாக இல்லாதவர் நல்ல நண்பராகவும் இல்லை. நல்ல மனிதராக இவர் இல்லா மல் போனதில் வியப்பென்ன?
இனவெறி கலந்த தேசியவாதத்தை ஆதாரமாகக் கொண்டது சாவர்க்கர் வகுத்துக்கொண்ட பாதை. வெறுப்பு எனும் ஒளியே அந்தப் பாதையில் பளிச்சிட்டது என்றால் மிகையாகாது. இனப்பாகுபாடுகளற்ற நாட்டுப் பற்றும், தேசிய உணர்வும் உலகளவில் தழைத்து ஓங்கி வரும் காலக்கட்டம் இது. ஒழுக்கவியல் பார்வையிலும், சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், அரசியல் அணுகு முறையிலும் நம் அனைவருக்கும் முக்கியமான கடமை ஒன்று உள்ளது. சாவர்க்கரைப் போன்ற தகுதிக்கு மேல் அல்லது தகுதியின்றி போற்றிப் புகழப்பட்டுவிட்ட மனிதர் களின் வாழ்க்கையை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அலசி ஆராயும் கடமை தான் அது.
இனவெறியும், சமூக வேறுபாடுகளும் களையப் படாத தேசியவாதமும், நாட்டுப்பற்றும் பேராபத்தாகவே முடி யும். கலாச்சார, பண்பாட்டு அழிவுக்கு அது வழிவகுத்து விடும். இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நாம் ஒருங் கிணைந்து அதை எதிர்க்க வேண்டும். எல்லோரையும் உள்ளடக்கிய, முன்னேறி வரும் ஒரு நாட்டிற்கு அடிப் படையே வேற்றுமையில் ஒற்றுமை காணும் கொள்கைதான். மதவெறியர்களும், பிரிவினை வாதிகளும் அடையா ளம் காணப்பட வேண்டும். ஜாதி பாகுபாடுகளை ஆதரித் துக்கொண்டே தேசியம் பேசு வோரின் முகத்திரைகள் விலக்கப்பட வேண்டும். முடிவுரையில் நூலாசிரியர் அசோக்குமார் பாண்டே இதைத்தான் வலியுறுத்தியுள்ளார். குருட்டுத்தனமான தனிமனித வழிபாட்டைத் தவிர்த்து எதையும் அலசி ஆராய்ந்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என்கிறார் இந்த நூலின்
ஆசிரியர் அசோக் குமார் பாண்டே.
மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்
No comments:
Post a Comment