சென்னை, மார்ச். 1- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பக் கோரி அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பப்பட்ட சுற்றிக் கையில், " கடந்த 2003ல் இருந்து தற்போது வரை, தமிழ் நாட்டு அரசின் அனைத்து துறைகளின் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற உத்தரவு அளிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், அரசாணைகள் வாயிலாகவோ, அரசு விளக்கங்கள் வாயிலாகவோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் வாயிலாகவோ புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற விருப்பம் கோரும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தது 30 ஆண்டுகள் பணியில் இருந்த அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், 2002-2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது. இந்த புதிய நடைமுறையின் கீழ், ஒன்றிய அரசில் 01-04-2003 ஆம் நாள் அன்றோ அதற்கு பின்னரே பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த பணியாளர்களின் அடிப் படை ஊதியம், அகவிலை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையை செலுத்துகிறது. இந்த தொகை பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் அரசுப் பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம் செய்யக் கோரும் பணியாளர்கள் விவரங்கள் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
No comments:
Post a Comment