புதுவை முதலமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ள தமிழ்ச்சிறகம் என்பதற்குப்பதிலாக நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்வளர்ச்சித் துறையை சட்டப்பேரவையில் உடனே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கடும் போராட்டம் நடைபெறும் என்று புதுவை சிந்தனை யாளர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
நமது புதுவையின் முதலமைச்சர் தனது
2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பக்கங்கள் : 18- 19, வரிசை எண்கள்: 39 - 41 வரை கலை பண்பாடு என்ற தலைப்பில் சில முன் மொழிவுகளை தெரிவித்துள்ளார்.
அதன்படி புதுவையில் உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
மேலும் அவர் புதுவையில் அரசு தமிழ்ச்சிறகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை ஏற்க இயலாது.
புதுவை மாநிலத்தில் கடந்த பல ஆண்டு களாக தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் போராடி வருகின்றனர்.
இவ்வாறு தனியே ஒரு துறை உருவாக் கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு ஏற்கெனவே சிறகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது உண்மை.
ஆனால் அது இன்று செயல்படாமல் தானே முடங்கி விட்டது.
சிறகம் என்பது கல்வித்துறை அல்லது கலை பண்பாட்டுத் துறையின் ஒரு பகுதி.
ஏற்கெனவே இத்துறைகள் வேலைச்சுமை யால் மற்றும் பல்வேறுப் பிரச்சினைகளால் தடுமாறுகின்றன.
கலை, பண்பாடு என்பது வேறு.
மொழி வளர்ச்சி என்பது வேறு.
சில வட மாநில அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் நம்முடன் சேர்ந்து உள்ள தெலுங்கு மலையாள பகுதிகளில் உள்ள சிலர் இதில் தொடர்ந்து சதி செய்து வருகின்றனர்.
இதற்கு நமது சமூக ஜனநாயக இயக்கத்தி னரில் ஒரு பகுதியினர் எப்படி பலியாகியுள்ளனர் என்பது வியப்பாகும்.
அருகில் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்டு மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்ச்சிறகம் அமைக்கக்கோருவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.
இதற்காகப்போராடிய மற்றும் போராடும் மூத்த தமிழறிஞர்களுக்கு நாமிழைக்கும் அநீதி மற்றும் துரோகமாகும்.
புதுவையில் சமுக நலத்துறை உள்பட பல துறைகள், மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத் துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதுபோல கலை பண்பாட்டுத்துறையி லிருந்து புதியதாக தமிழ்வளர்ச்சித்துறை உரு வாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புதுவை சிந்தனையாளர்கள் பேரவை மற்ற அமைப்புகளுடன் இணைந்து, நமது தற் போதைய முதலமைச்சரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப் பேரவை யில் நேரில் மனு அளித்தோம்.
அப்போது நமது கோரிக்கையை நிறைவேற்று வதாக முதலமைச்சர் தெரிவித்து ஆண்டு ஒன்றுக்கு மேல் ஓடிவிட்டது.
அவருக்கு பல முறை நினைவூட்டல் மடல்கள் அனுப்பினோம்.
சமூக அமைப்புகளுடன் இணைந்து பல நூறு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தி னோம்.
தமிழ்வளர்ச்சித்துறையை அமைக்கக் கோரி, 29.04.2022 அன்று பாவேந்தர் பிறந்த நாளில் நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஒரு நாள் உண்ணாநிலைப்போராட்டம் நடை பெற்றது.
இதனை வலியுறுத்தி கடந்த 11.09.2022 மகாகவி நினைவு நூற்றாண்டு நிறைவில் பாவேந்தர் நினைவகத்திலிருந்து பல நூறு பேர் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக முழக்கமிட்டபடி பாரதி சிலைக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் தடையை மீறி பலர் கைதானோம்.
இப்படி பலர் பலகாலம் உயிரைக் கொடுத்துப் போராடி தமிழ்வளர்ச்சித்துறையைக் காண வேண் டும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் இவ்வாறு தமிழ்ச்சிறகம் என சிலர் புறப்பட்டுள்ளது வேதனை தருகிறது. முதலமைச்சர் இதனை மறுபரிசீலனை செய்து புதுவை அரசின் தமிழ்வளர்ச்சித்துறையை உடனே அறிவிக்கவேண்டும்.
இல்லையெனில் சாகும் வரை தொடர் பட் டினிப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் தமிழ் வளர்ச்சித் துறையை வென்றெடுப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவைத் தலைவரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரனுமாகிய கவிஞர் புதுவை கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment