பேராவூரணியில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியரின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

பேராவூரணியில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியரின் பேச்சு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள "சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பெரும் பயண பொதுக்கூட்டம்" பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் 28.2.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

விவசாயிகள், வணிகர்கள் அதிகமாக வசிக்கும் 18 வார்டுகளை உள்ளடக்கிய பேராவூரணி பேரூராட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திராவிடர் கழகம் இளைஞரணி பொறுப்பாளர்கள் தோழர்கள் கடைவீதியில் பொதுக்கூட்ட விளக்க துண்டறிக்கைகளை வழங்கியும், வசூல் பணியை மேற்கொண்டும் பொதுக்கூட்டப் பணிகளைத் தொடங்கினர்.

பேராவூரணி நகரில் இரண்டு நாட்களாக  விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள் எனக் காணும் இட மெல்லாம் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரம் செய்யப்பட்டு தமிழர் தலைவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தது பேராவூரணி பேரூராட்சி,

28.2.2023 அன்று காலையே பேராவூரணி நகர் முழுவதும் கழகத்தின் லட்சியக் கொடி பட்டொளி வீசி பறக்கத் தொடங்கியது. நகரம் முழுவதும் ஒலிப்பெருக்கி கள் அமைக்கப்பட்டு கழகத்தின் லட்சியப் பாடல்கள் இசைக்கப்பட்டு, தமிழர் தலைவர் வருகையையொட்டி, பேராவூரணி பகுத்தறிவு விழாக் கோலம் கொண்டது.

வாகனத்தில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு பேராவூரணி பேரூராட்சி முழுவதும் 18 வார்டுகளுக்கும் தமிழர் தலைவர் வருகிறார், சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உரை நிகழ்த்த வருகிறார், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மதவாத பிஜேபி அரசின் அக்கிரம ஆட்சியை தோலுரித்துக் காட்டி உரையாற்ற வருகிறார், ஜனநாயக முற்போக்குக் கூட்ட ணியை சார்ந்த திமுக உள்ளிட்ட அனைத்துக் காட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர் அனைவரும் வருக வருக என அழைப்பு விடுத்து மாங்காடு மணியரசன் ஒலிப்பெருக்கி யில் விளம்பரம் செய்தார்.

சரியாக 5.30 மணி அளவில் கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் உரையாற்றத் தொடங்கினார். பொதுக்கூட்டம் தொடங்கியதும் கடை வீதிக்கு வேலை நிமித்தமாக வந்தவர்கள், பணிக்கு வந்தவர்கள் எனப் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் நடைபெற்ற மேடையை நோக்கி வர ஆரம்பித்தார்கள். அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கின. 6 மணி அளவில் தமிழர் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கட்சி பொறுப்பாளர்கள் மேடை ஏறிட கூட்டம் தொடங்கியது.

தமிழர் தலைவர் உரையாற்ற ஆரம்பிக்கும் பொழுது பேராவூரணியில் இருந்த மசூதியில் தொழுகை தொடங்கியது. தொழுகைக்கான பாங்கு ஓதப்பட்ட போது தமிழர் தலைவர் தனது உரையை இரண்டு நிமிடம் நிறுத்திவிட்டு, பாங்கு ஓதுவது முடிந்தவுடன் பிறகு மீண்டும் உரையை தொடங்கி 1 மணி நேரம்  சிறப்புரையாற்றினார்.

கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த சிவகாமி மெடிக்கல் உரிமையாளர் தமிழர் தலைவரின் உரையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று என்னங்கையா ரொம்ப ஆழ்ந்து கவனிக்கிறீங்க என்று கேட்ட பொழுது, பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் விளக்கம் கூறி, பாடம் எடுப்பது போல் அய்யா அவர்கள் ஒவ்வொரு சட்ட திட்டத்திற்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் விளக்கத் துடன் உரையாற்றுகிறார் என்று பெருமிதத்தோடு கூறினார்.

ஆனால் மசூதி தொழுகையின் போது ஏன் உரையை நிறுத்தினார் இது ஒரு சார்பாக இருக்கிறது என்ற சந்தேகத்தையும் கேட்டார், அவருக்கு தொழு கையின் போது மட்டும் அல்ல, மற்ற மத நிகழ்வுகள் எது நடந்தாலும், இதே வீதியில் பிள்ளையார் ஊர்வலம் சென்றாலும், காவடி தூக்கிக்கொண்டு பக்தர்கள் சென்றாலும் நாங்கள் உரையாற்றுவதை நிறுத்துவதை தந்தைபெரியார் காலம் முதல் வழக்கமாக கொண்டுள் ளோம்.

எங்கள் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல மாறாக அனைவரையும் பண்படுத்துவதே - அவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிபதின் வெளிப்பாடாக தலைவர் உரையை சற்றுநேரம் நிறுத்தினார் - யாருக் கும் சார்பாக அல்ல ,இவ்வாறு விளக்கம் கூறினோம். அவரும் தெளிவடைந்தார்.

பேராவூரணியில்  இளைஞரணி பொறுப்பாளராக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பொறியாளர் கதிர்வேல் கரோனா காலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடைய மனைவி ரம்யா, மாமனார் சுந்தரம், மகன் பெரியார் பிஞ்சு அன்புச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வுடன் நேரில் சென்று நலம் விசாரித்தேன். அப்போது அவர்கள் அய்யா அவர்கள் பேராவூரணியில் உரை யாற்ற வருகிறார் என்ற உடனே இன்றைக்கு கூட்டத் திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு, அய்யா அவர்களின் உரையைக் கேட்க இங்கு வந்தோம் என்று கூறி, அய்யா அவர்களின் உரை முடியும் வரை இருந்து உரைமுழுவதையும் கேட்டுவிட்டுச் சென்றனர்.

கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த ஒரு மளிகைக் கடையில் கடையின் வெளியில் ஒரு நாற்காலி போட்டு வயதான ஒருவர் அமர்ந்து அய்யா அவர்களுடைய பேச்சை கூர்ந்து கவனித்து அவர் பேசுவது அனைத்தையும் சரியே சரியே என்பது போல் கண்ணை மூடி தலையாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று தங்கள் பேர் என்னங்கய்யா என்று கேட்ட பொழுது நாகூர் பிச்சை என்றார். தனக்கு 25 வயது இருந்த பொழுது ஆசிரியர் அவர்களின் உரையை இதே பேராவூரணியில் கேட்டிருக்கிறேன், தற்போது எனக்கு 60 வயதாகிறது, 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கேயே அவருடைய உரையைக் கேட்கிறேன் அவரது குரலில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் அவர்களுக்கு 90 வயது என்று சொன்னால் தான் தெரிகிறது. இன்னமும் அவர் சிறு வயது இளை ஞனைப் போல் பிசிறு தட்டாமல் உரையாற்றுகிறார் என்று சொல்லி மீண்டும் அய்யா அவர்களது உரையைக் கவனிக்கத் தொடங்கினார்.

உங்களுடைய கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கும் பொழுது ஆசிரியர் அவர்கள் கூறுவார் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் (visible members)  சிலர் என்றாலும், கண்ணிற்குத் தெரியாத உறுப்பினர்கள் (non-visible members) ஏராளம் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது.

பேராவூரணி நகர் முழுவதும் ஒலிப்பெருக்கி அமைக் கப்பட்டிருந்தது ஆங்காங்கே இருந்த வணிக நிறு வனங்களிலும் தேநீர் நிலையங்களிலும் 20 பேர் 30 பேர் என்று, குல்லா அணிந்தவர்கள், நாமம் போட்ட வர்கள், பட்டை போட்டவர்கள், விவசாயிகள் என்று ஏராளமானோர் நின்று கொண்டே அய்யாவினுடைய உரையை  கேட்டு மகிழ்ந்தனர்.

- முனைவர் வே.இராஜவேல், தஞ்சை


No comments:

Post a Comment