தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 3- பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

''தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் தற்போது அரசின் வசம் உள்ளதை மாற்ற வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, சிபிஅய் இயக்குநரை தேர்வு செய்வது போல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்'' என்று கோரி வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ் வரம் ராஜ், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. முன்னதாக, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ''தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது அரசின் நிர்வாகச் செயல்பாட்டின் ஓர் அங்கம். தேர்தல் ஆணையராக சுதந்திரமாக செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.என்.சேஷன். அவரை நியமித்தது அரசுதான். இப்படி புகழ்பெற்ற பலர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாய தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர நாராயணன், ''தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனி செயலகம் இருக்க வேண்டும். நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்'' என வலி யுறுத்தினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ''பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செலவினங்களை கையாள்வதற்கு தனியான சுதந்திரமான செயலகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றமும் ஒன்றிய அரசும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு கோருகிறது'' என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment