கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் சந்தோஷ் குமார் ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வதந்தி பரப்பிய காட்சிப் பதிவு மற்றும் வாசகத்தை கண்டனர்.
இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் சிவக்குமார், மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரில், ‘‘நாங்கள் ட்விட்டர் சமூக வலைதளத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தோம். அப்போது யுவராஜ் சிங் ராஜ்புட் என்ற பெயரில் காட்சிப் பதிவுடன் வாசகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டில் பீகார் மாநில சகோதரர்கள் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பீகார் அரசு அமைதி காக்கிறது. இந்த அரசு துன்புறுத்தலில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என ஹிந்தி மொழியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரு வகுப்பினருக்கு இடையே, வெறுப்பை வளர்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இப்பதிவு உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
அதன் பேரில், சைபர் கிரைம் காவல் துறையினர் யுவராஜ் சிங் ராஜ்புட் என்ற ட்விட்டர் அடையாள எண் பெயர் உள்ள நபர் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment