வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம்!

தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, மார்ச் 4  வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத்  தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஈரோடு முதல் கடலூர்வரை

பரப்புரைக் கூட்டம்

கடந்த 19.2.2023 அன்று  தருமபுரியில் சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இட ஒதுக்கீடு என்பது 

தனியார்த் துறையில் கிடையாது

எனவே, பெரிய மீன், சிறிய மீனை விழுங்கும். இது பொருளாதாரத்தில் ஏப்பம் விடுவது மட்டுமல்ல; அதையும் தாண்டி அடுத்தபடியாக சொல்லவேண்டும் என்றால், சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், இட ஒதுக்கீடு என்பது தனியார்த் துறையில் கிடையாது.

பொதுத் துறை நிறுவனமாக இருக்கும் வங்கிகளை தனியார் மயமாக்குவது; எல்.அய்.சி.யை தனியார் மயமாக்குவது; பொதுத் துறை லாபகரமாக நடக்கிறதா? அதை உடனே தனியாருக்கு விற்றுவிடுகிறார்கள்.

யாருக்கு விற்கிறார்கள்?

அதானி, அம்பானிகளுக்கு.

பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்பதினால், சமூகநீதிக்கு இன்னொரு ஆபத்து ஏற்படுகிறது.

ஏனென்றால், தனியார் நிறுவனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது. பொதுத் துறை நிறுவனமாக இருந்தால், 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்.

அந்த வாய்ப்புகள் இப்பொழுது பறிபோகும் நிலை. அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஆபத்து நண்பர்களே!

அந்த ஆபத்திலிருந்து நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; அதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

நூறாண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகள் இப்பொழுது பறிபோகின்ற நிலை!

நம்முடைய தலைவர்கள் நூறாண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகள் இப்பொழுது பறிபோகின்ற நிலை. எல்லோருக்கும் எல்லாமும் இன்னும் கிடைக்க வில்லை.

அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் பிறந்த நாளை  சமூகநீதி நாளாகக் கொண்டாடும்படி அறிவித்தார்; அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தார்.

அனைவருக்கும் அனைத்தும் 

கிடைப்பதுதான் சமூகநீதி!

அவர் சொன்னார், சமூகநீதி என்பது என்னவென்றால், ‘அனைவருக்கும் அனைத்தும்’ கிடைப்பதுதான் சமூக நீதி என்றார்.

பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய பங்கை மறுக்கவில்லை. 3 சதவிகிதம் இருப்பவர்களுக்கு எவ் வளவு இட ஒதுக்கீடோ அதைக் கொடுக்கிறோம். 3 சதவிகிதமாக இருப்பவர்கள், நூறு சதவிகிதத்தையும் அனுபவிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

பசியேப்பக்காரர்களுக்குப் பந்தியில் இடம் கொடுங் கள்; புளியேப்பக்காரர்கள் எல்லோரையும் இடித்துக் கொண்டு உள்ளே போகவேண்டும் என்று நினைத்தால் என்ன அர்த்தம்?

அதற்காகத்தான் போராட்டம் - இதுதான் இன்றைக்கு மிகப்பெரிய போராட்டம்.

அதனை விளக்கித்தான் இந்தப் பயணம்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன் னார்கள் - ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம்; ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். இப்பொழுது லட்சுமி விலாஸ் வங்கியே காணாமல் போய்விட்டது.

லட்சுமி விசா வாங்காமலே, 

துபாய் நாட்டிற்குப் போய்விட்டாள்

லட்சுமி பெயரில் வங்கி, அந்த லட்சுமி விசா வாங் காமலே, துபாய் நாட்டிற்குப் போய்விட்டாள். லட்சுமி அங்கே போய் குடியேறிவிட்டாள்.

இந்த சூழ்நிலையில், உங்களால் வேலை வாய்ப்பு களைக் கொடுக்க முடியாவிட்டாலும், எங்களிடம் அதற் குரிய திட்டம் இருக்கிறது. ஆகவே, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் அனுமதியுங்கள். ஏற்கெனவே அந்தத் திட்டம் நடத்தப்பட்டு, உங்களால் நிறுத்தப்பட்டு இருக்கின்ற திட்டம். அந்தத் திட்டத்திற்குப் பெயர்தான் தோழர்களே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.

மூன்று புத்தகங்கள்

இங்கே மூன்று புத்தகங்கள் இருக்கின்றன.

1. சேது சமுத்திரத் திட்டம் ஒரு விளக்கம் - மேனாள் அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதிய நூல்.

2. சேது சமுத்திரத் திட்டமும் - இராமன் பாலமும் - இது கலைஞர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு - தகவல் களஞ்சியமாக இருக்கிறது. 

3. சேது சமுத்திரத் திட்டமும் - இராமன் பாலமும் - கி.வீரமணி. இதில் யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்டார்களோ அதற்குரிய பதில்களின் தொகுப்பு.

மேற்கண்ட புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படித்தீர் கள் என்றால், முழு விளக்கத்தையும் தெரிந்துகொள்ள லாம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நம் கைகளில் வெண்ணெய் இருப்பது போன்று. நெய்யை வேறு யாரிடமும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை.

வேலை வாய்ப்புகளை லட்சக்கணக்கானவர்களுக்கு, நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல - இந்தியாவில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க முடியும்.

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் 

தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம்

இந்திய நாடு, தமிழ்நாடு - தென்தமிழ்நாடு செல்வம் கொழிக்கும் ஒரு பகுதியாக மாறும். வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் இருக்கும்.

இந்தியாவிற்குள் வெளிநாட்டவர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரண் போன்றும் இருக்கும்.

அந்தக் கால்வாய்த் திட்டத்தை எப்பொழுது சொன்னார்கள்?

ஆற்காடு இராமசாமி முதலியார்

திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது, நீதிக்கட்சி பத்திரிகை ஜஸ்டிஸ். அதன் ஆசிரியராக இருந்தவர் பிரபலமான சிந்தனையாளர் ஆற்காடு இராமசாமி முதலியார்.

அவர் பெரிய பொருளாதார நிபுணர், சிந்தனையாளர். அவர் நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஒரு திட்டம் கொடுத்தார்.

இந்தத் திட்டம்பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வெள் ளைக்காரர்கள் காலத்திலேயே கருத்துரு உருவானது.

சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்தியா வரைபடம் பார்த்திருப்பீர்கள். மேலே இந்தியா - கீழே இலங்கை. இதை சுற்றிக்கொண்டுதான் கப்பல்கள் போகின்றன. சுற்றிக்கொண்டு போவதற்குப் பதிலாக - இடையில் இருக்கின்ற பாக் நீரிணைப்பு பகுதியை ஆழப்படுத்தினால், கப்பல்கள் பயணம் செய்யலாம். அந்தப் பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள்.

அந்தக் காலத்திலேயே 50, 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘எழுச்சி நாள்’’ என்று கொண்டாடி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அன்றைய ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

அடுத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி அமைத்தவுடனே, சேது சமுத்திரக் கால் வாய்த் திட்ட விழாவினை மதுரையில் தொடங்கினார்.

தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்குத் திராவிடர் கழகம் தான் திட்டங்களைக் கொடுத்திருக்கிறது. நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோலியம் போன்ற திட்டங்கள்.

அசாமில் நிலக்கரி எடுத்தால், மாநில அரசுக்கு உரிமைத் தொகை கொடுக்கிறது ஒன்றிய அரசு. அந்த மாநிலத்திற்கு உரிமைத் தொகைக் கொடுக்கும்பொழுது, நெய்வேலி நிலக்கரிக்காக தமிழ்நாட்டிற்கு ஏன் உரிமைத் தொகை கொடுக்கக் கூடாது? என்று ஒன்றிய அரசைக் கேட்டு, அதை வாங்கும்படியாக வைத்த இயக்கம்தான் திராவிடர் கழகம். அன்றிலிருந்து இன்றுவரை உரிமைத் தொகையை மாநில அரசு பெறுகிறது.

நல்ல வாய்ப்பாக 2006 ஆம் ஆண்டில், தி.மு.க.வும் - காங்கிரசும் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியை தேர்தலில் பெற்றனர்.

ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அம்மையார், தனக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம், கப்பல் துறை அமைச்சர் பதவியை எங்களுக்குக் கொடுக்கவேண்டும்; ஏனென் றால், அப்பொழுதுதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி,  டி.ஆர்.பாலு அவர்களை கப்பல் துறை அமைச்சராக ஆக்கினார்.

அந்தத் திட்டத்திற்கு 2000 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கவேண்டும் என்பதால், அந்தப் பணம் எப்படி கிடைக்கும் என்றார்கள்; சேது சமுத்திர நிதிக் கார்ப்பரேசன் என்ற ஒன்றை உருவாக்கி, அந்தப் பணியை மிக வேகமாக செயல்படுத்தினார்கள்.

அப்படி நடத்தியதினுடைய விளைவு இரண்டாண்டு களுக்குள் பணத்திற்கும் ஏற்பாடு செய்து, பணிகளையும் வேகப்படுத்தி, இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகள்தான் மீதமிருக்கின்றன. அதையும் முடித்துவிட்டால், கப்பல் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

மக்களுடைய மூடநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்

2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. ஜெய லலிதா அம்மையார் என்ன நினைத்தார்கள் என்றால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், அந்தப் பெருமை தி.மு.க.விற்கு வந்துவிடுமே? மக்கள் அவர்களை நம்பிவிடுவார்களே! ஆகவே, மக்கள் இவர்களை நம்ப விடாமல் செய்யவேண்டும்; அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்று நினைத்து, மக்களுடைய மூடநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எப்படி பயன்படுத்தினார்கள் என்று சொன்னால், பவளப் பாறைகளை, சுண்ணாம்புப் பாறைகளை சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக அதை வெட்டிக் கொண்டே வந்து பணிகளைத் தொடர்ந்தார்கள்.

அதுகுறித்து, சோ ராமசாமி, சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா ஆகிய மூவரும் சேர்ந்து பேசி, அது இராமர் கட்டிய பாலம்; அதை இடித்தால், ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று கிளப்பிவிட்டார்கள்.

400 ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதியை இடித் தார்கள்; இங்கே இல்லாத பாலத்தை இடிக்காதே என்று சொன்னார்கள்.

உடனே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்கள் எல்லாம் அவாள்கள் மயம்தான். உயர்ஜாதியைச் சேர்ந்தவர் கள்தான் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் இன்றைக்கு இட ஒதுக்கீடுக்குக்கூட ஆபத்து வரக்கூடிய நிலையில் இருக்கிறது; அதைப்பற்றி பேசுவதற்குக்கூட மற்றவர்களால் முடியவில்லை. நாங்கள் தைரியமாகப் பேசுகிறவர்கள். உயர்ஜாதிக்காரர்களை நீதிபதியாக நியமிக்காதே! எங்களுக்குரிய பங்கைக் கொடு என்று கேட்பதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை.

நீதிமன்றத்திற்குத்தானே செல்வீர்கள்; எங்கள் தலைவர் தந்தை பெரியாரே வழிகாட்டியிருக்கிறாரே - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவரை நீதிமன்றத்திற்கு அழைத்தார்கள்.

அன்றைக்குக் கொடுக்கப்பட்ட தடை ஆணை இன்றுவரை தொடருகிறது

அங்கே சென்ற தந்தை பெரியார் அவர்கள், ‘‘பார்ப் பான் நீதிபதியாய், நிர்வாக அதிகாரியாக இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடு; ஆகவே, நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம்; புலி எங்கள் மேல் விழுந்து கடித்தால், நாங்கள் சாகத் தயார்’’ என்றார்.

சாகத் துணிந்தவனுக்கு, சமுத்திரம் முழங்கால் அளவு. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நடைபெறக் கூடாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தடை ஆணை கொடுத்துவிட்டார்கள். அன் றைக்குக் கொடுக்கப்பட்ட தடை ஆணை இன்றுவரை தொடருகிறது.

ஆதாரம் கேட்டால், வெறும் நம்பிக்கையின் அடிப் படையில்தான் இராமன் பாலம் என்று சொல்கிறார்கள்.

இந்த ஊர் காவல் நிலையத்திற்கு ஒருவர் சென்று, நேற்றிரவு என் கொள்ளுத்தாத்தா கனவில் வந்து, காவல் நிலையம் இருக்கும் இடம் எங்கள் இடம் என்று சொல் லியிருக்கிறார்; ஆகவே, இந்த இடத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னால், ஒப்புக்கொள் வார்களா?

உங்கள் இடம் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று காவல் துறை அதிகாரிகள் கேட்டால், 

இல்லீங்க, ஆதாரம் எங்களுக்கு நம்பிக்கைதான் என்றால் ஏற்றுக்கொள்வார்களா? என்றால், நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இராமன் பாலம் என்றால், நம்பிக்கைதான் என்றால், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்கிறது.

அதனுடைய விளைவு என்னாயிற்று, வெறும் நம்பிக்கை என்று சொல்லி, லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் திட்டத்தை, ராமன் பெயரைச் சொல்லி, அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள்.

கலைஞர்தான் கேட்டார்

அப்பொழுதே நாங்கள் சென்னையில் பொதுக் கூட்டம் 16.5.2007 ஆம் நாளில் நடத்தினோம். கலைஞர், நாங்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினோம். 

அந்தக் கூட்டத்தில் கலைஞர்தான் கேட்டார் - ‘‘ராமன் பாலம் கட்டினான், பாலம் கட்டினான் என்று சொல்கிறீர்களே, அவர் என்ன என்ஜினியரா? அவர் எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்தான்?’’ என்று கேள்வி கேட்டார்.

அது ஒன்றும் தவறான கேள்வியல்ல; நியாயமான கேள்விதான். ஏனென்றால், நீங்களும், நானும் பாலம் கட்ட முடியாது, என்ஜினியர்தான் பாலம் கட்ட முடியும்.

இதைப் பொறுக்க முடியாத வடநாட்டு சாமியார் ஒருவர், ‘‘கருணாநிதி என்பவர் யார்? அவர் தலையை சீவ வேண்டும்’’ என்று சொன்னார்.

அதைக் கேட்ட நம் ஆட்கள் எல்லாம் ஆத்திரப் பட்டார்கள்; கொந்தளித்தனர். உடனே கலைஞர் அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்லி, நான் இதற்குப் பதில் சொல்கிறேன் என்றார்.

அவரும் மிக எளிமையாக அதற்குப் பதில் சொன்னார்; வன்முறையைத் தூண்டாமல், ‘‘என்னுடைய தலையை நான் சீவியே நீண்ட காலமாயிற்று; அங்கே சீவுவதற்கு ஒன்றும் இல்லை; அவர்கள் வந்து சீவி விட்டால், மிகவும் வசதியாக இருக்கும் எனக்கு’’ என்றார்.

ஆக, சேது சமுத்திரத் திட்டம் - மக்களுக்குப் பயன்படவேண்டிய திட்டம். லட்சக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கும் அல்லவா - 2007 ஆம் ஆண்டில் நிறைவேறியிருந்தால்.

ஒன்றிய அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன வற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், மாநில அரசு அதனை நிறைவேற்றியிருக்கும் அல்லவா!

கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒருவர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கிறார்;

‘‘உச்சநீதிமன்றத்தில் இராமன் பாலம் வழக்கு இருக்கிறதே, இராமன் கட்டிய பாலத்தை தேசிய சின்னமாக ஏன் அறிவிக்கக் கூடாது?’’ என்று.

அத்துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் என்பவர் பதில் சொல்கிறார், ‘‘நாங்கள் இத்தனை ஆண்டுகளாக துருவி துருவி தேடிப் பார்த்தோம். அதை இராமன்தான் கட்டினான் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது’’ என்று சொன்னார்.

இதிலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள் யார் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

சரி, நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனிமேல் நடப்பதாவது சரியாக இருக்கட்டும். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடங்குங்கள். எங்களுடைய மாநில அரசுக்கு அனுமதி கொடுங்கள் என்று தி.மு.க. உறுப்பினர்கள் கேட்டார்கள்.

திராவிடர் கழகம் குரல் கொடுத்தது

22 ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியவுடன், 24 ஆம் தேதி  தந்தை பெரியார் நினைவு நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் குரல் கொடுத்தது.

நமது திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் அவர்கள், உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று சொன்னார்.

ஜனவரி 12 ஆம் தேதி சட்டமன்றம் கூடியது; தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள்.

ஆகவே, இப்பொழுது பந்து எங்கே இருக்கிறது? டில்லியில்தான் இருக்கிறது.

இராமன் பாலம் என்ற ஒன்று இல்லை என்று ஒன்றிய அமைச்சரே சொல்லிவிட்டார். 

இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்; இந்தியாவினுடைய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருக்கும் அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குங்கள் என்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

தோழர்களே, உங்களுடைய பிள்ளைகளின் எதிர் காலத்தை கருதித்தான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வரவேண்டும்; அதற்காகப் போராடும்பொழுது, ஜாதியில்லை, கட்சியில்லை, மதமில்லை, தமிழ்நாட்டி னுடைய நலன் - மக்களுடைய நலன் - எதிர்கால சந்ததி யினர்களின் நலனுக்காகத்தான் இந்தப் பயணம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வாழ்க தமிழ்நாடு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment