‘திராவிட மாடல்' ஆட்சியில் ஜாதியை ஒழிக்காவிட்டால், வேறு யார் ஆட்சியில் ஒழிப்பது?
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கே, பாதுகாப்பு!
நாகை, மார்ச் 30 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தில் திருமருகல் ஊராட்சி, காரைக்கால் நகரம் ஆகிய பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
திருமருகலில் தமிழர் தலைவர்!
திருமருகல் சந்தைப்பேட்டையில் நேற்று (29.03.2023) நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலி யன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், நாகை நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் முருகையன், மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஒன்றிய தலைவர் சின்னத்துரை, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த அணி மற்றவர்கள்
பிணி போக்குகின்ற அணி!
தமிழர் தலைவர் தமதுரையில், “ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் இது. தோழர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இப்போது நிகழ்ச்சியை ஒரு மாநாடு போல நடத்தியிருக்கிற நமது தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கினார். மாவட்டத் தலைவர் நெப்போலியனைக் குறிப்பிடுகையில், “நெப்போலியன் என்றாலே வரலாற் றில் ஒரு தனி இடம் உண்டு, அவரை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு” என்றார். பக்கத்தில் அமர்ந்திருந்த நெப்போலியன் முகத்தை மூடியபடி வெட்கப்பட்டார். மேடையில் இருந்தோரும், மக்களும் கைகளைத் தட்டி ஆசிரியர் கூற்றை ஆமோ தித்தனர். ‘‘அவருக்கு நல்ல துணை பூபேஸ்குப்தா” என்று மாவட்டச் செயலாளரைப் பாராட்டினார். தொடர்ந்து, ‘‘இவர்களுக்கு உறுதுணையாக தி.மு.க. உள்பட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. ஆகவேதான் இந்த அணியை வேறு எந்த அணியாலும் வெல்லமுடியாது” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே பாராட்டியவர், இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘‘இந்த அணி மற்றவர்களின் பிணி போக்குகின்ற அணி!” என்று ஆழமான பொருளுடன் பாராட்டினார்.
தொடர்ந்து, பெண்கள் எராளமாகக் கலந்து கொண் டிருப்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 10 ஆண்டு களுக்குப் பிறகு, தான் இங்கே வந்திருப்பதை நினை வூட்டினார். அந்த நினைவில் பழைய தோழர்கள் நினைவு வந்து அவர்கள் குறித்துப் பேசினார். “இங்கே வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது வீரம் செறிந்த பாடல்கள் பாடும் கண்ணன்தான். அவருடைய பிள் ளைகள் சி.பி.நாத்திகன், திருப்புகலூர் பெரியார் முரசு, ராஜேந்திரன் போன்றோரைக் குறிப்பிட்டுவிட்டு, புதிய தோழர்கள் வந்து ஒரு பெரிய மாறுதலையும், வளர்ச்சியும் அடைந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் குடும்பம் குடும்பமாக பெரியாரியப் பற்றாளர்கள் இருக்கின்றனர்” என்று பெருமிதத்துடன் கூறிவிட்டு, “இந்த இயக்கம் தேர்தலில் நிற்கக் கூடிய இயக்கமல்ல, தேர்தலில் யார் வரவேண்டும் என்று நிர்ணயிக்கக் கூடிய இயக்கம்” என்றார். பலமான கைதட்டல் தொடர்ந்தன.
திருவாரூரில் பெண்கள் செய்த புரட்சி!
இங்கிருக்கும் விவசாய சங்கங்கள், அதில் பெண்கள் பெருமளவில் இருப்பதை குறிப்பிட்டவர், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைப்பது தான், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று ‘திராவிடர் கழகம்’ முதன் முதலில் சொன்னதையும், எம்.ஜி.ஆர். அதை ஏற்றுக் கொள்ளாததையும் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, அதற்காக திருவாரூர் நகரில் ஆசிரியர் தலைமையில் ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கக் கேட்டு, போராட்டம் நடத்த பெண்களுக்கு அழைப்பு விடுத்ததையும், யாரும் எதிர்பாராத வண்ணம் பெண்கள் மட்டும் 250-க்கும் மேல் வந்து விட்டதையும், காவல்துறை மிரண்டு போய், ‘அத்தனை பேரையும் கைது செய்ய நாங்கள் தயாராக இல்லை. ஆகவே. நீங்கள் பெண்களை மட்டும் வீட்டுக்குச் செல்லச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் கேட்பார்கள்’ என்று ஆசிரியருடன் படித்த மாவட்ட காவல்துறைக் கண் காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்ததையும், தான் பெண்களிடம் நிலைமையைச் சொன்னபோது, ‘இங்க பாருங்க நீங்க சொல்லித்தான் நாங்கள் போராட்டத்திற்கு வந்தோம். பெண்களாகிய நாங்கள் கைதாவோம்' என்று உறுதியாக இருந்து, பெண்கள் கைதாகி மதுரையில் 15 நாட்கள் சிறையில் இருந்த புரட்சிகரமான வரலாற்றை எடுத்துரைத்தார். கைது செய்ய வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர், என்ற சுவையான தகவலையும் எடுத்துரைத்து, ‘அப்படிப்பட்ட உணர்வுள்ள பெண் தோழர்களைக் கொண்ட பகுதி இது” என்று சொன்ன போது, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படபடவென கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து ஜாதியை தோலுரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். அதாவது, காதலர் தினம் என்பது ஜாதி ஒழிப்பு தினம். அதில் காவிகள் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்த முட்டாள்தனத்தை மக்கள்முன் நகைச்சுவை யுடன் எடுத்து வைத்தார். கழுதையை மட்டுமல்ல, மாட்டையும் பிரித்து பேதப்படுத்தி விட்டது ஹிந்து மதம் என்ற கேவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
போராடத் தயாராகுங்கள்
வைக்கம் நூற்றாண்டு விழாவை நினைவு படுத்தி, அது ஜாதி ஒழிப்புக்காக நடந்த வரலாறு என்பதைச் சொல்லி, தற்போது கேரளா, தமிழ்நாடு இரண்டும் இணைந்து நூற்றாண்டு விழா கொண்டாட இருப்பதைக் குறிப்பிட்டார். அன்று முதல் இன்று வரை நடக்கும் சனாதனத்துக்கும் நமக்குமான சமூகப் போராட்டம்பற்றி சுட்டிக் காட்டினார். மேலும் அதையொட்டியே தோள் சீலை போராட்டத்தைச் சுருக்கமாக சொல்லி ஜாதியின் கொடூரம் எத்தகையது என்பதை மனதில் பதிய வைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்ட வரலாறு, அதில் கலைஞரின் பங்கு, நீண்ட நெடிய சட்டப் போராட்டம் ஆகியவற்றை சுருக்கமாக நினைவுபடுத்தி, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியதையும் வெற்றிக்களிப்பு பொங்கக் குறிப்பிட்டார். ஆனாலும், இன்னமும் ஜாதி தாண்டவமாடுவதை சுட்டிக்காட்டி, “இந்த ஆட்சியில் ஜாதியை ஒழிக்கா விட்டால் வேறு எந்த ஆட்சியில் ஒழிப்பது?” என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தார். இறுதியில், “இளை ஞர்களே! தாய்மார்களே! ஜாதியை ஒழிக்காவிட்டால் நாம் மனிதத் தன்மையை அடைய முடியாது! ஆகவே, போராடத்தயாராகுங்கள்” என்று கூறி, பலத்த கைதட் டல்களுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் ப.க. மாநில அமைப் பாளர், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர் முகம்மது சுல்தான், ம.ம.க. மாவட்ட தலைவர் இப்ராகிம், சி.பி.அய்.மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாபுஜி, வி.சி.க. தொகுதி செயலாளர் அறிவழகன், ப.க. மாநில ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட ப.க. செய லாளர் மு.க.ஜீவா, திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் கோவிந்த ராசன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மண்டல மகளிரணி செயலாளர் சி.செந்தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கவிதா, திருவாரூர் மாவட்ட மகளிரணி செயலாளர் சரசுவதி, நாகை மாவட்ட மகளிரணி தலை வர் பேபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் ஒன்றிய செயலாளர் இரமேஷ் நன்றி கூறினார். அங்கிருந்து தோழர்களின் அன்பு மழையில் நனைந்தபடியே ஆசிரியர் அடுத்த கூட்டமான காரைக் காலுக்குப் புறப்பட்டார்.
தமிழர் தலைவரின்
எடைக்கு எடை பழங்கள்!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கப்பப்பா காலனியில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு ‘திராவிட மாடல் ஆட்சி சாதனையின் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மண்டல தலைவர் பழக்கடை கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர், மண்டல துணை தலைவர் செந்தமிழன், மண்டல இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி, மண்டல இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர், மண்டல இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், மண்டல மாணவர் கழகத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மண்டல செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி கழகத் தலைவரின் எடைக்கு எடை பழங்களை வழங்குவதாக அறிவித்து கழகத் தலைவரை எடைத் தட்டில் அமர வைத்தார். பிறகு வழங்கிய பழங்களை ஏலத்தில் விடு வதாக ஆசிரியர் அறிவிக்க மண்டல இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர் ரூ 20,000/- த்திற்கு ஏலம் எடுத்து, அந்த நிதியை ஆசிரியரிடம் வழங்கினார். நிதியை பெற்றுக்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ”இந்த நிதியை திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு வழங்குகிறேன்” என்று பலத்த கைதட்டக்களுக்கிடையே அறிவித்தார்.
ஒடுக்கப்பட்ட காரைக்காலுக்கு
இனி முன்னுரிமை!
ஆசிரியர், ”நாங்கள் அடிக்கடி புதுச்சேரிக்கு வருகி றோம். ஒதுக்கப்பட்ட இடங்களுக்குத்தான் முன்னுரிமை என்கின்ற அடிப்படையில் இனி அடிக்கடி காரைக் காலுக்கும் வருவோம்” என்றார். ஆசிரியர் முடிக்கும் முன்பே, அவர் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு மக்கள் கைதட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் இளைஞர்களுக்குத் தெரியாத ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரிக்கு வந்த போது, “கிமிமிவிஷி போல இதற்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரிக்கு மட்டுமல்ல, காரைக்கால் பகுதிக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்” என்று ‘விடுதலை'யில் தலையங்கம் எழுதியதைக் குறிப்பிட்டுவிட்டு, அதற்கான பலனும் இருந்தது என்பதையும் எடுத்துச் சொன்னார். ‘‘ஒரு பக்கம் மட்டுமே வளர்ந்தால் அதற்குப் பெயர் வீக்கம்? எல்லா பிரிவுகளிலும் வளர்ச்சி இருக்க வேண் டும். அதுதான் வளர்ச்சி!” என்று தத்துவ ரீதியாகவும் எளிமையாகப் புரியும்படி விளக்கினார். இதற்கு விதை இந்திய அரசமைப்புச் சட்டத்தில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று கூறுகளாக இருப்பதையும், அதற்கும் விதையாக பிரெஞ்சு புரட்சியில் இருந்தல்ல, இந்தியாவின் முதல் பகுத்தறிவுவாதி புத்தரிடம் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அம்பேத்கரே சொல்லியிருப் பதை எடுத்தியம்பினார்.
காவி செல்கள் ஜனநாயகத்தை அழித்துவிட்டது
தொடர்ந்து, மேனாள் அமைச்சர் கமலக்கண்ணன் கூறிய அதிகார வர்க்கம் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது ஜனநாயகம் என்பது போல் அதிகார நாயகம் என்பதும் இருக்கின்றது. அதற்கு ஆங்கிலத்தில் ‘பீரோக்கிரசி’ என்று பெயர் என்று சொல்லிவிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ‘சாவரின், சோசலிஸ்ட், செக்குலர், டெமோகிராடிக், ரிப்பப்ளிக்’ அதாவது, ‘இறையாண்மை, சமதர்ம, மதச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” இந்த அய்ந்தும் முகப் புரையில் உள்ளது. இது பாண்டிச்சேரி பொலித்திக்ஸ் ஆக இருந்தாலும் என்று கூறிவிட்டு, நாங்கள் பாலிட் டிக்ஸ் என்று சொல்வோம். பிரெஞ்சில் ’பொலித்திக்ஸ்’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஏன்னா நான் கடலூர்காரன். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டாவது மொழியாக பிரெஞ்சு படிச்சேன். எல்லா பிரெஞ்சு வார்த்தையும் தெரியும்” என்று சிரித்துக்கொண்டே ஆசிரியர் கூறினார். மக்களும் வெடித்துச் சிரித்துக் கொண்டே கைகளைத் தட்டினர். பிறகு, மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிஆம்பிளுக்கு வந்தார். அய்ந்து கூறுகளுக்கும் தனித்தனியாக விளக்கம் சொன்னார். அத்தோடு ‘‘என்றைக்காவது அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை பிரித்துப் பார்த்தால் புத்தகம் அப்படியே இருக்கும். உள்ளே செல்லரித்திருக்கும். அந்த செல்கள் காவி செல்கள்? இந்த காவி செல்கள்தான் ஜனநாயகத்தை அழித்துவிட்டது” என்று நடைமுறையில் இருக்கும் ஒரு உண்மையை திடுக்கிடும் படியாகச் சொன்னார். தொடர்ந்து, “அதற்குப் பெயர் டெமாக்கிரசி அல்ல? பிரோக்கிரசி? இந்தப் பகுதியில் ‘பீரோ’ என்கிற வார்த்தை அதிகமாகத் தெரிந்த வார்த்தை. “என்ன மிஸ்ஸி? எங்க போயிட்டு வர்றீங்க மிஸ்ஸி?” அப் பிடின்னு கேட்டால், ‘பீரோவிலிருந்து வர்றேன் மிஸ்ஸி’ அப்பிடிம்பாங்க” என்று மறுபடியும் பிரெஞ்சு வார்த்தை களைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலகலப்பாக்கினார். ‘‘சின்ன வயதில் பாண்டிச்சேரிக்காரங்க இப்படி பேசுவது எனக்குப் புரியாது. இதென்ன? பீரோ சின்னதா இருக்கும். இவரு அதிலிருந்து வருவதாக சொல்கிறாரே என்று கேட்டால், பீரோங்கிறது ஆபீசுங்க அப்பிடிம்பாங்க” என்றும் ’ஒப்பித்தாள்’, ’அவுக்கா’ என்று பல பிரெஞ்சு வார்த்தைகளைச் சொல்லி, மறுபடியும் கலகலப்பூட்டி விட்டு, ‘இங்கே அதிகாரிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. அப்படி நடக்கலாமா? சமூக நீதிக்கு விரோதமாக இருக் கலாமா?' என்று கேள்விகள் கேட்டார். தமிழ்நாட்டில் காரைக்கால், பாண்டிச்சேரியில் நடப்பதற்கு மாறாக நடைபெற்று வரும், சமூக நீதி ஆட்சியின் சாதனைகளாக சிலவற்றைக் குறிப்பிட்டார். இறுதியாக, சேது சமுத்திரத் திட்டம் பற்றிய அண்மைக்கால, கடந்த கால வரலாற்றை நினைவூட்டி, “சேது சமுத்திரத்திட்டம் மறுபடியும் நிறைவேற்றப்பட்டால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கே பாதுகாப்பு என்றும் கூறி, அதற்கான காரண காரியங்களையும் விவரித்து'' தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மாநில மேனாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சி.பி.அய்.காரைக்கால் மாவட்ட செயலாளர் மதியழகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் அம்பலவாணன், இ.யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் முகம்மது ஆரிப், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் ஹாஜா நிஜாமுதீன், சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ராஜ், த.மு.மு.க.மாநில பிரதிநிதி அப்துல் ரஹீம், புதுச்சேரி மண்டல தலைவர் வே.அன்பரசன், நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல மாணவர் கழக செயலாளர் பிலோமின் ராஜ் நன்றி கூறினார். நிகழ்வின் தொடக்கத்தில் புதுவை குமார் வழங்கிய ‘மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment