தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும் பயணத்தில்... கண்டதும், கேட்டதும்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும் பயணத்தில்... கண்டதும், கேட்டதும்...!

பாசிசத்தின் கோரமுகத்தை கிழித்தெறியும் ஆயுதம், ”உண்மை!”

இந்தியத் துணைக்கண்டம்,  வேறு எப்போதும் இல்லாத வகையில், இப்போது பாசிசத்தின் கோரப்பிடி யில் சிக்கியிருக்கிறது. திரும்பத் திரும்ப பொய்களை உலவ விடுதல்; வரலாற்றுத் திரிபுகளை ஈவு, இரக்கமின்றி போகிற போக்கில் வீசிச் செல்லுதல்; திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்துதல் போன்றவை பாசிசத்தின் மிக முக்கியமான ஆயுதங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் இதற்கெல்லாம் ஆட்படமாட் டார்கள் என்றாலும், ’எறும்பு ஊர, கல்லும் தேயும்’ என்பது போல, இந்த பாசிச ஆயுதங்கள் அவர்களைக் கொஞ்சம் தடுமாற்றம் அடையத்தான் செய்கின்றன. எப்போதும் போல, இந்த ஆயுதங்களில் சாம, தான, பேத, தண்டம் அடக்கம்தான். 2024 இல் மீண்டும் அவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று, வேறு யாரைக் காட்டிலும் திராவிடர் கழகம் தெளிவோடு இருக்கிறது. அதனால்தான் ”தமிழர் நலன் ஒன்றே தம் நலம்” என்று இயங்கிக்கொண்டிருக்கும் தமிழர் தலைவர், தனது 90 ஆம் வயதில், இளைஞர்களும் செய்யத் துணியாதவாறு, தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாய் சுற்றிச் சுழன்று நாள்தோறும் மக்களை நேரில் சந்தித்து, சமூகநீதியை ஏன் பாதுகாக்க வேண்டும்? திராவிட மாடலால் நாம் அடைந்திருக்கும் கல்வி, சமூக, பொரு ளாதார உயரங்கள் என்னென்ன? தமிழ்நாட்டின் படித்த இளைஞர்கள் பயன்பெறக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கிய பார்ப்பனர்கள் யார், யார்? என்ன காரணம்? என்று கீற்று இரண்டாக, பாசிசத்தின் கோர முகத்தை ”உண்மை” எனும் ஆயுதம் கொண்டு,  கிழித் தெறியப் புறப்பட்டுவிட்டார். நான்கு கட்டப் பயணத்தில் மூன்று கட்டங்கள் முடிந்து, வருகிற 2023, மார்ச் 26 இல் நான்காம் கட்டமாக புதுச்சேரியில் தொடங்கி, 2023 மார்ச் 31 இல் கடலூரில் நிறைவு பெறவுள்ளது. இந்தப் பெரும் பயணத்தில், நிகழ்ச்சிகளைத் தவிர, சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அப்படித்தான் 27.02.2023 அன்று பொன்னமராவதி கூட்டம் முடிந்து சிவகங்கைக்கு வந்தோம். அங்கும், ஆசிரியருக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைகைப் போரின் ரகசியம் என்ன?

பெரிய்ய்ய... மேடை! ஆசிரியர் நடுநாயகமாக அமர்ந்துள்ளார். மற்ற, மற்ற நடைமுறைகள் முடிந்து, ஆசிரியர் பேசுவதற்கு தயாராகிவிட்டார். வழமை போல பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் ஒலிவாங்கியை ஆசிரியர் பேசுவதற்குத் தோதாக வைக்கும் முயற்சியில் இருந்தார். சிவகங்கை தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் ஆசிரி யரை நேருக்கு நேர் பார்க்கும்படி மக்களோடு மக்களாக கீழே, நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேடையின் வலது பக்கம் நின்றவாறு, புரசை அன்புச்செல்வன், வலது கையால் சைகை செய்து, ’மேடைக்கு வாங்க’, ’மேடைக்கு வாங்க’  என்று  பொன்.முத்துராமலிங்கம் அவர்களை திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார். அவரும், சைகையிலேயே தொடர்ந்து மறுத்தபடி இருந்தார். என்ன இது? என்று எண்ணுவதற்குள் ஆசிரியர் பேசத் தொடங்கி விட, நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ’சைகைப் போர்’ தற்காலிகமாக ஓய்ந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. காவல் வாகனங்கள் புடை சூழ ஆசிரியர் தனது படை, பரிவாரங்களுடன் திருப் பத்தூர் சாலையில், நீதிமன்ற வாசல் அருகிலுள்ள திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட்டத் தலைவர் சுப்பையா - மணிமேகலை இணையர் ஆகியோரின் இல்லத்திற்கு சென்றார். அங்குதான் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் வீட்டினுள் சென்றுவிட, தோழர்கள் அனைவரும் முகப்பறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருகிலிருந்து, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் மிகுந்த உற்சாகத்துடன், தோழர்களை நன்றாக உணவு எடுத்துக் கொள்ளும்படி உபசரித்துக் கொண்டிருந்தார். அவரு டைய அந்த உற்சாகத்தையும் தாண்டி, ’சண்முகராஜா கலையரங்க’ மேடையில் நடைபெற்ற, ‘சைகைப் போர்’ நினைவுக்கு வந்தது. ’காண்பதும், கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்!’ என்று, அப்போது வராத உணர்வு, இப்போது மேலோங்கியது. அதைப் பற்றி அவரிடம் கேட்டு விடலாமா? என்ற ஆவலும் ஊறியது. ஆனால், இந்த இடத்திற்கு அது பொருத்தமாக இருக்குமா? என்ற அய்யமும் உள்ளுக்குள் முட்டி மோதியது. பரப்புரைப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் தோழர்கள் சூழ உணவு அருந்திக்கொண்டே, பொன்.முத்துராமலிங்கத்திடம் சிறப்பாக நடந்து முடிந்த பொதுக்கூட்டம் பற்றி, மனம் நெகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

தாய்க் கழகத்திற்கு செய்ய வேண்டியது, எங்கள் கடமை!

”எங்கங்க, தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளை, தி.மு.க.காரங்களே கூட இப்படி பேசறதில்லைங்க” என்றார் பொன் முத்துராமலிங்கம். அவரது முகத்தில் அலுப்பும், உற்சாகமும் ஒருசேரப் பொலிந்தது! பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், ”நம்ம ஆட்சிங்க, நம்ம பேசலைன்னா எப்படிங்க? அது போகட்டும், அதென் னங்க மேடையில் வந்து அமரச்சொல்லி கூப்பிட்டாங்க. வரமாட்டேன்னு சொல்லிட்டீங்களே, ஏன்?” என்று, நான் கேட்க எண்ணியதை பொசுக்கென்று கேட்டுவிட்டார். நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காததால், அட! என்ற உணர்வுடன், காதுகள் அனிச்சையாக கூர்மையடைந்தது. “மேடையில் உட்கார்ந்தால் ஆசிரியரை நேருக்கு நேர் பார்க்க முடியாது. ஆசிரியரும் நம்மைப் பார்க்க முடியாது. அதுவே ஆசிரியருக்கு நேர்கீழே உட்கார்ந் திருந்தால் இது இரண்டுமே நடக்கும். நமக்கு ஆசிரியர் பார்வையில் பட்டுக்கிட்டே இருக்கணும். அவ்வளவு தான். அதனால்தான் இதுபோன்ற கூட்டங்களில், நான் எப்போதுமே கீழே தான் அமர்வேன்” என்றார், பொன் முத்துராமலிங்கம். அதைக் கேட்டதும், ’ஓ...’ இதில் இப்படியும் ஒரு பார்வை இருக்கிறதா? என்று புருவங்கள் மேலேறியது. தொடர்ந்து, ஒரத்தநாடு குணசேகரன், “கூட்டத்துக்கும் நீங்க நன்றாக ஒத்துழைப்பு கொடுத்ததாக தோழர்கள் சொன்னார்கள்” என்றார், நன்றிப் பெருக் குடன். அவரோ, “தாய்க்கழகத்துக்கு செய்ய வேண்டியது, எங்க கடமைங்க!” என்றார் பெருமிதத்துடன். இத்தகைய கொள்கை ரீதியிலான உணர்வுகள்; பெருமிதங்கள் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என இரண்டு தலைமைக் கழகங்களோடு மட்டும் நின்று விடாமல், மீண்டும் தமிழ்நாடு முழுவதும் கிளைக் கழகங்கள் தோறும் பற்றிப் பரவி, இரட்டைக்குழல் துப்பாக்கித் தத்துவமும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது! ஆசிரியர் பேசிக்கொண்டு வருவது போல, ஆரியத்தை வேரறுத்து, ”திராவிடம் நிச்சயமாக வெல்லும்! அதை நாளைய வரலாறு சொல்லும்!”

- உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment