'காவல்துறையில் பெண்கள்' சாதனை படைத்த தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

'காவல்துறையில் பெண்கள்' சாதனை படைத்த தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 

மார்ச் 16 இல் பொன்விழா

சென்னை, மார்ச்11- மதத்தின் பெயரால், பழைமையின் பெயரால் பாலின பேதங் களுடன் பெண்கள் கல்வி பெற முடியாமல், பொதுவெளிகளில் நடமாட, பெற்ற கல்வித் தகுதிக்கேற்பப் பணி வாய்ப்புகள், சம வேலைக்கு சம ஊதியம் பெற முடியாமல்  பாலியல் சமத்துவமின்றி ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர்.

தந்தைபெரியாரின் கொள்கைகளை, இலட்சியங்களை செயல்படுத்த வலியுறுத்தி மாநாடுகள், போராட்டங்கள் என களம் பல கண்டது திராவிட இயக்கம். 1929 ஆம் ஆண்டிலேயே  முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் தீர்மானங்கள் சரித்திர சாதனை படைத்தவை. அம்மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களுக்கு உரிமைகளை அளிக்கும்வகையில் நிறை வேற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காவல்துறை, இராணுவத்தில் பெண்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்பது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 1973இல்  திமுக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் முதல மைச்சராக இருந்தபோது முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

தற்பொழுது தமிழ்நாடு காவல் துறையில் பெண்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16ஆம் தேதி ‘காவல்துறையில் பெண்கள்' பொன்விழா கொண்டாட திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், தலைமைக் காவலர் ஒருவர், மகளிர் காவ லர்கள் 20 பேர் என மொத்தம் 22 பெண்கள் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டனர். 

1976இல்  தமிழ்நாடு பிரிவில் முதல் அய்பிஎஸ் அதிகாரிகளாக தருமபுரியின் திலகவதியும், கேரளாவின் லத்திகா சரணும் பொறுப்பேற்றனர். தமிழ்நாட்டில் தற்போது ஒரு காவல்துறை தலைமை இயக்குநர், 2 கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர்,, 14 அய்.ஜி. உள்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

1992 இல்  அதிமுக ஆட்சியில் ஜெய லலிதா முதலமைச்சராக இருந்தபோது காவல் துறையில் புதிய அத்தியாயமாக, சென்னை ஆயிரம்விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 202 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. 2004 ஜனவரியில் நாட்டிலேயே முதல்முறையாக அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து மகளிர் காவல் படையை (பெண் காவல் பட்டாலியன்) அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநராக லத்திகா சரண் 2009 இல் பணியமர்த்தப்பட்டார்.

தற்போது சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பெண் காவலர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். தேசிய அளவி லான காவலர் திறன் போட்டியிலும் பதக்கங் களை குவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறை பணியில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆகின் றன. இதையொட்டி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 16ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொன்விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள் ளது. இதில், சாதனை படைத்த பெண் காவல்துறையினருக்கு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பல் வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

இதுகுறித்து மேனாள் அய்பிஎஸ் அதிகாரி திலகவதி கூறும்போது, ‘‘காவல் துறையில் பெண்கள் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண் காவலர் சீருடையில் கம்பீரமாக ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்வதை பார்க்கும் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை அதி கரிக்கும். தவிர, காவல் பணியில் பெண்கள் இருப்பது, பாதிக்கப்படும் பெண்களுக்கு தைரியம் அளிக்கும். அவர்கள் தயக்கமின்றி புகார் கொடுப்பார்கள்.

இதனால், குற்றம் நடந்தால் காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் பதிவாகும். இதன்மூலம், பெண்கள் மீதான குற்றங்கள் குறையும். காவல் பணி செய்து சொந்தக் காலில் நிற்பதால், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற்றத்தை அடைய முடியும்’’ என்றார்.

சாதனை படைக்கும் ‘த்ரீ ரோசஸ்’ 

சென்னை காவல் வட்டாரத்தில் ‘த்ரீ ரோசஸ்’ என அறியப்படும் சுகன்யா (சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு), ஜெயசுதா (நுண்ணறிவு பிரிவு), சுபாசினி (பூவிருந்த வல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு) ஆகிய 3 சகோதரிகளும் ஆய்வாளர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் தேசிய, மாநில அளவிலான காவலர் திறனாய்வு போட்டி களில் ஏராளமான பதக்கங்களை குவித்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த் துள்ளனர்.


No comments:

Post a Comment