ஒரு பிரமாண்ட ஊர்வலம் குஜராத் நகர வீதிகளில் - அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற் றன. குதிரைகள் பங்கேற்றன. ஒட்டகங்கள் பங்கேற் றன. பெருவாரியான மக்கள் கூட்டம். கம்பீரமாக யானை பல்லக்கில் ஒரு சிறுமி. அந்த குழந்தை யார்? எதற்காக இந்த ஏற்பாடு?
குஜராத்தை சேர்ந்த மிகப்பெரிய வைர வியாபாரியின் மகள் எட்டு வயது தேவன்ஷி சங்கி. இந்த குழந்தைக்கு தான் இந்த பிரம்மாண்ட ஊர்வலம். காரணம் இச்சிறுமி துறவறம் மேற்கொண்டது தான். இச்சிறுமி சமண மதத்தை தழுவி இருக்கிறார். இது மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களுக்கு கொண் டாட்டமாக இருந்தாலும் பகுத்தறிவு சார்ந்து இருப் பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தரக்கூடியது .எட்டு வயது தேவன்ஷி தொலைக்காட்சி, திரைப் படங்களை பார்த்ததில்லை - வரவேற்க வேண்டிய செய்திதான். உணவகம் சென்றதில்லை. இதுவும் வரவேற்க கூடியது ஆரோக்கியமான குடும்ப உறவுகளுக்கு பிள்ளைகள் பழகுவது நலம் தானே. எந்தவித திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அப்படி எனில் கொண்டாட்டம் என்ற எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் பெற்றோர் அவரை அழைத்துச் சென்றதில்லை. அங்கே உறவுகளிடம் பழகும் சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தரவில்லை.
அங்கே வரும் மற்ற குழந்தைகளோடு ஓடி விளையாடும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட வில்லை - மாறாக 367 தீட்சை நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று உள்ளார் - இல்லை அவர் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை.
அதேபோல் இரண்டு வயதிலேயே 'உண்ணா நோன்பு' இருந்து துறவறப்பாதையில் செல்ல உறுதியாக இருந்தாராம். இரண்டு வயது குழந்தைக்கு 'உண்ணா நோன்பு என்றால் என்னவென்று தெரியுமா? இரண்டு வயதிலேயே அந்த குழந்தைக்கு உணவு கொடுக்காமல் உண்ணா நோன்பு' என்ற பெயரில் துன்புறுத்தி இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. உண்மையில் உள்ளம் பதறுகிறது இரண்டு வயதில் குழந்தையின் பசியை ஆற்றாமல் பட்டினி போட எப்படி மனம் வருகிறது.
மதம் பிடித்தால் மதி மயங்கும் என்பது இதுதான்.
துறவறம் மேற்கொள்ளும் முன்பு அவருக்கு நேர்த்தியான விலை உயர்ந்த பட்டுப்புடவை அணி வித்து ஆடம்பரமான நகைகள் அணிவிக்கப்படுகிறது. அவருடைய தலையில் வைரம் பதித்த கிரீடம் இருந்தது. மிகச்சிறந்த இந்த அலங்காரம் எதற்காக? அவருக்குத் துறவறமாம்! துறவறம் மேற்கொண்ட பிறகு அவருக்கு மொட்டை அடித்த தலையோடு வெள்ளைப் புடவை அணிவிக்கப்பட்டது.
இனி அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எந்த உறவும் இல்லை. பெற்றோருடன் அவர் உறவு கொண்டாட முடியாது .அவர் ஒரு சாத்வி.ஆம் சிறுமியின் அனுமதியின்றி ஒரு தீவிர மத நம்பிக்கை கொண்ட பெற்றோரால் சாத்வி ஆக்கப்பட்டவர். இது இயல்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? மதம் சார்ந்த உணர்ச்சிகள் சார்ந்த விஷயங்களில் தலையிட முடியாது என்று தேசிய குழந்தைகள் நல வாரியம் கைவிரித்து விட்டது. ஆன்மிக விஷயங்களில் சட்டம் தலையிடக்கூடாது என்கிறார்கள். ஆன்மிக வாதிகள். மதத்தின் பெயராலும் ஆன்மிகத்தின் பெயராலும் இங்கே சிறு குழந்தைகளும் தங்கள் உரிமைகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு குழந்தைத் திருமணம் என்பது எப்படி சட்டப்படி தவறோ அது போல இதுவும் தவறு - இது சிறுவர்கள் மீதான அப்பட்டமான அத்துமீறல் - குழந்தைகள் தங்கள் குழந்தைத் தனத்தை இழக் கிறார்கள் அவர்கள் வயதுக்கு உரிய சந்தோஷங்களை இழக்கிறார்கள் என்று சொல்வதை விட அவர்களின் குழந்தைத் தன்மை பறிக்கப்படுகிறது - அவருடைய சந்தோஷங்கள் பறிக்கப்படுகிறது சிறு வயதிலிருந்து அக்குழந்தையின் மூளை சலவை செய்யப்படுகிறது. அந்த குழந்தையின் அறிவு திருடப்படுகிறது. அறிவு மழுங்கடிக்கப்படுகிறது. எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் செய்யப்படுகிறது. பகுத்தறியும் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.
கோயில்களில் ஆடு மாடுகளை நேர்ந்து விடுவதற்கும் இதற்கும் பெரிதாய் வேறுபாடு இல்லை. எட்டு வயதில் காதல் என்பது எப்படி தவறானதோ அதேபோல துறவறம் என்பதும் தவறானது. 18 வயது வரை அச்சிறுமி வளர்ந்து தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அங்கே அவ ருக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இன்னொருவரின் உடல் மீதும் உணர்வுகள் மீதும் முடிவெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது - அது பெற்றோராக இருந்தாலும்.
ஒரு குழந்தைத்தனத்தைக் கொன்று பெற்றோர் அடையும் மகிழ்ச்சி எல்லாம் மகிழ்ச்சியா? பெற்றோர் என்றும், மதம் என்றும் நம்பிக்கை என்றும் சொல்லி இப்படி எத்தனைச் சிறுமிகளின் வாழ்க்கை கொலை வாளின் விளிம்பில் நிற்கும் நிலைமை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்?
- தேன்மொழி
குடியாத்தம், மண்டல செயலாளர் - மகளிரணி
No comments:
Post a Comment