1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் -
இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று!
சென்னை, மார்ச் 2 1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று! புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
ஈரோடு முதல் கடலூர்வரை
பரப்புரைக் கூட்டம்
கடந்த 19.2.2023 அன்று தருமபுரியில் சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை
திராவிடர் கழகத்தின் சார்பில், கடந்த 3 ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாளினை யொட்டி, ஈரோட்டில் தொடங்கப்பட்ட இந்தப் பயணம் - சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பயணமாகும். தமிழ்நாட்டில் படித்து வேலை வாய்ப்பினை எதிர்நோக்கியுள்ள இளைஞர் களுக்கு ஒன்றிய அரசால், மோடி அரசால்,
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆட்சியால் - அவர்கள் பதவிக்கு வருவதற்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம்; ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்ன வாக்குறுதியை, அவர்களே இது சும்மா சொன்ன வாக்குறுதி என்று சொல்லக்கூடிய ‘யோக்கியமான’, ‘நாணயமான’ அரசியலை நடத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் மக்கள்.
மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான்
அதேநேரத்தில், திராவிட மாடல் ஆட்சி என்பது முழுக்க முழுக்க ‘‘சொன்னதைச் செய்வோம், செய் வதையே சொல்வோம்’’ என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்று, ‘‘இதுவரையில் நாங்கள் அளித் திருக்கின்ற வாக்குறுதிகள் அய்ந்தாண்டுகளுக்கு என்று சொன்னாலும், ஒன்றரை ஆண்டுகாலத்திலேயே, 20 மாதங்களிலேயே 75 சதவிகித வாக்குறுதிகளை நிறை வேற்றியிருக்கிறோம்’’ என்று சொல்லக்கூடிய ஒரு தெம்பும், திறனும் படைத்த ஆட்சிக்கு - எப்படியெல்லாம் தொல்லை கொடுத்து, இடையூறுகளை விளைவிக்கிறார் கள் என்பதை விளக்கிச் சொல்லவும், அதேநேரத்தில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஒன்றிய அரசால் கொடுத்திட முடியாவிட்டாலும், எங்களால் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மதவெறியர்களால், மூடநம்பிக்கையாளர்களாலே, அரசியலுக்கு அதைப் பயன்படுத்தி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்ற மிகப்பெரிய அளவிற்கு பல லட்சக்கணக் கானோருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கக் கூடிய அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய கொடுமையை மாற்றவேண்டும் என்பதற்காகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என் பதை வற்புறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வை உண் டாக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டதே இந்தப் பயணம்.
இந்தப் பயணம் 27 ஆவது நாள் பயணமாகும். தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் முதற்கட்ட பயணம் நிறைவடை கிறது. அடுத்ததாக இரண்டாம் கட்டப் பயணம் சேலத்தில் தொடங்குகிறது.
மக்கள் கட்சி வேறுபாடில்லாமல்,
ஜாதி வேறுபாடில்லாமல்...
தமிழ்நாட்டின் பாதி பகுதியில் தொடர்ந்து இடை யறாது மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்சி வேறுபாடில்லாமல், ஜாதி வேறுபாடில்லாமல் அத்துணை பேரும் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
அதையொட்டி, இந்த தருமபுரி மாவட்டத்தில், நம்முடைய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், மிகச் சிறப்பாக இந்தப் பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டத் தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தின் தலைவரும், மாவட்டத் தலை வருமான செயல்வீரர் சிவாஜி அவர்களே, வரவேற்புரை யாற்றிய மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ்ப்பிரபாகரன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாப்பி ரெட்டிப்படி பேரரூராட்சித் தலைவரும், முதுபெரும் பெரியார் தொண்டருமான அய்யா செங்கல் மாரி அவர் களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து அவர்களே, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் தோழர் பட்டு சுப்பிரமணி அவர் களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செய லாளர் நிசுமுதீன் அவர்களே, ஆதித்தமிழர் பேரவை தொண்டரணி அமைப்பாளர் தோழர் சிவா அவர்களே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில பிரதிநிதி தோழர் சாதிக்பாட்சா அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் இராஜேந்திரன் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஊமை.ஜெயராமன் அவர்களே, கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி அவர்களே, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர்கள் கதிர், வேட்ராயன் அவர்களே, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கவிதா அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி அவர்களே, மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்.திலீபன் அவர்களே, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லத்துரை அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கதிர் செந்தில் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மாவட்ட அமைப்பாளர் காமராஜர் அவர்களே,
மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெரு மக்களே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் எல்லாம் எம்.எல். படித்து பட்டதாரிகளாகி இருக்கிறார்கள்!
இங்கே எனக்குமுன் உரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நம்முடைய மதிவதனி அவர்கள், எம்.எல். - பொதுவாகவே பி.எல். படிப்பதே அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வம். அதில் எம்.எல்., என்கிற மேல் பட்டப்படிப்பு ஒரு சிலர்தான் தமிழ்நாட்டிலேயே படித்திருப்பார்கள். இன்றைய திராவிட மாடலினுடைய ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாக, தந்தை பெரியாரின் உழைப்பின் பலனாக இவரைப் போன்ற பெண்கள் எல்லாம் எம்.எல். படித்து பட்டதாரிகளாகி, கழகப் பிரச் சாரத்தைச் செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில், கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் தமிழறிஞர். அவர்தான் எம்.எல். படித்த ஒரே ஒரு தமிழர். அவருடைய பெயரே எப்படி மாறிவிட்டது என்றால், கா.சு. பிள்ளை என்ற பெயர் மாறி, எம்.எல்.பிள்ளை, எம்.எல்.பிள்ளை என்றே கூப்பிடுவார்கள், திருநெல்வேலிக்குப் பக்கத்தில்.
ஏனென்றால், தமிழர்கள் எம்.எல். படிப்பதே மிகவும் அபூர்வம். ஆனால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் எம்.எல்., படித்திருக்கிறார்கள். நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
அத்தனையும் நமக்கு அளித்த அருட்கொடையாளர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்
நம்முடைய தீர்த்தகிரி அவர்கள் வழக்குரை ஞராக இருந்தார்; இப்பொழுது நீதிபதியாக இருக்கிறார் என்றால், அது இந்த நகரத்திற்குப் பெருமை; இந்த மாவட்டத்திற்குப் பெருமை; இந்த சமூகத்திற்குப் பெருமை. இவை அத்தனையும் நமக்கு அளித்த அருட்கொடையாளர் யார் என்றால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அதற்கு வாய்ப்பளித்த மிகப்பெரிய ஒரு சூழல் எது என்று சொன்னால், காரணமான பெருமகன் யார் என்றால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. அதனு டைய ஒப்பற்ற முதலமைச்சராக, இன்றைக்கும் நீதிக் கட்சியினுடைய நீட்சியாக இருக்கக்கூடிய - இந்தியாவில் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக இருக்கக் கூடிய, தமிழ்நாட்டு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களாவார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நேரமின்மை காரண மாக என்னுடைய உரை சுருக்கமாக இருக்கும். அதனால்தான், இங்கே நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கின்றோம். எல்லா புத்தகங்களும் எளிய விலையில் இருக்கக் கூடிய புத்தகங்கள். அவை விற் பனை என்கிற நோக்கத்திற்காகக் கொண்டு வரப்பட்ட வையல்ல. கொள்கையைப் பரப்பவேண்டும் என்பதற் காக, பெரியார் அவர்கள் காலத்திலிருந்தே இந்தப் பணி நடைபெறுகிறது.
புத்தகங்களை வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; பயன்பெறவேண்டும்; பரப்பவேண்டும்!
ஒவ்வொரு செய்தியையும் நான் தொட்டுக் காட்ட முடியும்; விரிவாக விளக்கிச் சொல்வதற்கு நேரமில்லை. ஆகவேதான், நம்முடைய தோழர்கள் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள்; நீங்கள் புத்தகங்களை வாங்கவேண்டும்; படிக்க வேண்டும்; பயன்பெறவேண்டும்; பரப்பவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
டாக்டர் நடேசனார்
அதன்மூலமாக, நம்முடைய உணர்வுகள் தெளி வடையும். நம்முடைய மூத்தோர், நம்முடைய இயக்க முன்னோடிகள் - நீதிக்கட்சியை தொடங்கிய தலைவர் கள்பற்றிய செய்திகளை அறியலாம்.
நேற்றுதான் டாக்டர் நடேசனார் நினைவு நாள். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்க வருபவர் களுக்காக திராவிடர் இல்லம் என்ற விடுதியை, அவரு டைய வீட்டையே விடுதியாக மாற்றினார்.
தங்குவதற்கு இடமில்லை என்று சொல்பவர்களுக்கு, இங்கே வந்து தங்கிப் படியுங்கள்; நானே சாப்பாடும் போடுகிறேன் என்று சொன்னார்.
அங்கே வந்து தங்கிப் படித்தவர்கள் எல்லாம் இன் றைக்கு உலக அறிஞர்களாக இருக்கிறார்கள்; மிகப்பெரிய மேதைகளாக இருக்கிறார்கள்.
ஏனென்றால், சென்னை திருவல்லிக்கேணி பகுதி யில்தான் பெரிய கல்லூரிகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில், பார்ப்பனர்கள் மற்றவர்களைத் தங்கவிட மாட்டார்கள்; அதற்கு அனுமதி கிடையாது.
ஆகவே, டாக்டர் நடேசனார் அவர்கள், நம் பிள்ளை களை இங்கே வந்து தங்கிப் படியுங்கள் என்று சொன்னார்.
அப்படி, படி! படி! படி! என்று சொல்லி, சமூகநீதிக்காகப் போராடினார்.
அதோடு கம்யூனல் ஜி.ஓ., - வகுப்புவாரி உரிமை - அது செல்லாது என்று பார்ப்பனர்கள் வழக்குப் போட்டு, உச்சநீதிமன்றம் வரை சென்று அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
உடனே அதோடு முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். தந்தை பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்.
எப்பொழுது தெரியுமா?
1951 இல் நடந்த போராட்டம் -
இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று
நாங்கள் எல்லாம் மாணவர்களாக பல்கலைக் கழகத் தில் படித்துக் கொண்டிருந்தோம் - 1951 ஆம் ஆண்டு.
அந்த 1951 இல் நடந்த போராட்டம், இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று.
உடனடியாக பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, சட்ட அமைச்சராக இருந்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சேர்ந்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தினார்கள்.
நாடாளுமன்றத்தில் சில நண்பர்கள், தமிழ்நாட்டில் எங்கோ ஓரிடத்தில் கிளர்ச்சி நடக்கிறது என்பதற்காக, நீங்கள் ஏன் அரசமைப்புச் சட்டத்தை முதன் முறையாகத் திருத்தவேண்டும்? என்று கேள்வி கேட்டார்கள்.
பண்டித ஜவகர்லால் நேரு
நல்ல ஜனநாயகவாதி
பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் நல்ல ஜனநாயகவாதி. அவர் எழுந்து பதில் சொன்னார், ‘‘இன்றைக்கு இந்தப் போராட்டம் தமிழ் நாட்டில் நடக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் சமூகநீதிப் போராட்டம் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அதை ஏற்பதைத் தவிர, வேறு வழியில்லை’’ என்று சொல்லி, அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் செய்து தான், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர் களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமை பறிக்கப் பட்டதை மீண்டும் நாம் பெற்றோம்.
இப்பொழுது ஏன் இந்தப் பயணம்?
புதிதாகப் பெறுவது என்பது வேறு;
பெற்றதைக் காப்பாற்றவேண்டும்!
அதே நிலையை இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும். அதற் காகத்தான் இந்தப் பயணம்.
முன்பு இருந்த கரடு முரடான பாதைகள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஏனென்றால், திராவிட மாடல் ஆட்சி வந்தவுடன் நல்ல ஒகேனக்கல் போவதற்கு சாலைகளைப் போட்டிருக்கிறார்கள்,
ஆனால், அதற்கு முன்பு ஒகேனக்கல்லுக்குப் போகும் பாதை எப்படி இருக்கும் என்பது வயதான வர்களுக்குத் தெரியும். அவ்வளவு சீக்கிரம் அங்கே போக முடியாது; அங்கே தங்குவதற்கும் வசதிகள் இருக்காது. ஒரே ஒரு தொலைக்காட்சிதான் அங்கே இருக்கும்.
ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. இன்றைக்கு அது பெரிய போக்குவரத்து மய்யமாக, சுற்றுலா மய்யமாக இருக்கிறது. அருமையான சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன. அதில் பயணம் செய்வதற்கும் மிக சுகமாக இருக்கும்.
ஆனால், அந்த சாலையை அமைப்பதற்காக உழைத்த தொழிலாளியை யாருக்காவது ஞாபகத் திற்கு வருமா? அதே நிலைதான் எங்களுடைய நிலை.
சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை அனுபவிப்ப வர்களுக்கு சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்களைத் தெரியாது. அது ஏதோ தானாக வந்த வாய்ப்பு என்று நினைப்பார்கள். ஆனால், அதைக்கூட காப் பாற்றத் தெரியவில்லை, நம்முடைய பிள்ளை களுக்கு.
நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்ட காலமாக ஆகப் போகின்ற அபாயம் இருக்கிறது. ஆகவேதான், நம்முடைய பிள்ளை களின் எதிர்காலத்தை ஒளிமிக்க காலமாக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சுற்றுப் பயணம்.
தலைமுறையைப் பாதுகாக்கவேண்டும்; அதற்காகத்தான் இந்தப் பயணம்
எங்களுக்காக அல்ல - உங்கள் பிள்ளைகளுக்காக. உங்களுடைய வருங்கால சந்ததியினருக்காக. அதை நன்றாக நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் எந்தக் கட்சி யில் இருப்பவர்களாக இருந்தாலும், நீங்கள் பா.ஜ.க.வாக இருக்கலாம்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் களாக இருக்கலாம்; அல்லது வேறு வேறு கட்சிகளாக இருக்கலாம். கட்சி ஒரு பக்கத்தில் இருக்கட்டும். ஒரு சமுதாயம், ஒரு தலைமுறையைப் பாதுகாக்கவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயணம்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு; அதிலும் 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் இருக்கிறது.
இன்றைக்கு அதை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள். அந்த சட்டத்திற்குப் பெயரே ஷெட்யூல் காஸ்ட், பேக்வேர்ட் காஸ்ட் - படிப்பு, வேலை வாய்ப்பு எல்லாம் சேர்ந்த சட்டம்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சட்டம் இல்லை.
ஆனால், ஒன்றியத்தில் இன்றைக்கு இருக்கும் பா.ஜ.க. அரசு என்ற பெயராலே நடக்கக்கூடிய காவி அரசு, ஆர்.எஸ்.எஸினுடைய ஒன்றிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.
எப்படி பறிக்க முயற்சி செய்கிறார்கள்?
(தொடரும்)
No comments:
Post a Comment