'தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ்' ஆவணப் படத்துக்கு ஆஸ்கர்: முதலமைச்சர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

'தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ்' ஆவணப் படத்துக்கு ஆஸ்கர்: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, மார்ச் 13- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கான விருதை டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது. இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை 'நாட்டு நாட்டு' பாடல் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இசையமைப் பாளர் கீரவாணி, சந்திரபோஸ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

பீகாரில் கூட்டணி மாற்றமா?  முதலமைச்சர் நிதிஷ் குமார் பதிலடி

பாட்னா, மார்ச் 13- பீகாரில் கூட்டணி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் பதில் அளித்தார். பீகார் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாட்னா வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வேலைக்கு நிலம் பெற்றதாகக்கூறப்படுகிற ஊழலில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் ஒன்றிய அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி உள்ளதே?

பதில்:- இதுபற்றி சோதனைகளுக்கு ஆளானவர்கள் தான் பதில் தெரிவிக்க முடியும். ஆனால் நாங்கள் எப்போதெல்லாம் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோமோ அப்போதெல்லாம் இப்படி சோதனைகளை நடத்துகிறார்கள். இது பற்றி அவர்கள்தான் விளக்க வேண்டும்.

 கேள்வி:- ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதுபற்றி பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுதிய கடிதத்தில் நீங்கள் ஏன் கையெழுத்து போடவில்லை?

பதில்:- அரசியல் கட்சிகள் தனித்தனியாக இயங்கு கின்றன. நான் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்த நிர்வாக செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந் தேன். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, தேவைப்படுகிறபோது நான் இடங்களைப் பார்வையிட செல்வேன்.

கேள்வி:- துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுகுக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளதே?

பதில்:- இதில் புதிதாக ஒன்றும் இல்லை.

கேள்வி:- பீகாரில் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா?

பதில்:- இல்லை. மெகாகூட்டணி பற்றி கவலைப்பட தேவை இல்லை என்று அவர் பதில் அளித்தார்.

கருநாடகாவில் முதியவர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் முறை தேர்தல் ஆணையம் ஏற்பாடு

பெங்களுரு, மார்ச் 13- கருநாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடு களை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது: முதல்முறையாக கருநாட காவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.இதற்காக, அதிகாரி கள் விண்ணப்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடுவதை வர வேற்கும் நாங்கள், ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர் களுக்கு இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். இந்த நடவடிக்கையில், ரகசியம் கடைப்பிடிக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் காட்சிப்பதிவு செய்யப் படும். வீட்டில் இருந்து ஓட்டுப்பதிவு செய்யும் நடவடிக் கைகள் குறித்து கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக 'சாக்ஷம்' என்ற அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், அவர்கள் முன்பதிவு செய்து, தாங்கள் எந்த வகையில் ஓட்டளிக்க போகிறோம் என்ற வசதியை முடிவு செய்து கொள்ளலாம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க 'சுவிதா' என்ற செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். மே 24க்கு முன்னர் கருநாடக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment