கழகப் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளில்
தமிழர் தலைவரின் சூளுரை
அன்னை மணியம்மையாருக்குப் பிறகு கழகத்தில் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளான இன்று (18.3.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சூளுரை - அறிக்கை வருமாறு:
பெருமைக்குரிய நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம் மையார் அவர்கள் மறைந்த அடுத்த நாள் (17.3.1978) அவரது உடல் அடக்கம் வெகு உணர்வுப்பூர்வ வீர வணக்கத்துடன் நடைபெற்று முடிந்தது.
கழகத்தின் பொறுப்பேற்ற
அந்த மார்ச் 18
அதற்கடுத்த நாள் அவரது ஆணைப்படியும், அதற்கு முன்பே நம் அறிவு ஆசான் தந்த பல வாய்ப்பு, ஒத்திகைகள்மூலமும் செதுக்கப்பட்ட பெரியாரின் வாழ்நாள் மாணவனான நான் பொறுப்பேற்றேன் - கழகத்தின் மூத்த பெரியார் பெருந்தொண்டர்களின் ஆதரவுடனும், அன்புடனும்!
அந்த நாள்தான் 18.3.1978
இன்று 18.3.2023.
ஆம்! காலம் என்ற ஜீவ நதி எதையும் பொருட் படுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது! அது புய லானால் என்ன? சுட்டெரிக்கும் வெயிலானாலும், சுகம் தரும் குளிர் இரவானாலும், தென்றல் வீசிய நிலை யானாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதன் கடமையை - அது இயற்கை வழியே அயராது ஆற்றிக்கொண்டே இருக்கிறது!
அதுபோலத்தான் தந்தையாலும், அன்னையாராலும் உருக்கி வார்க்கப்பட்ட உலைக்கூடத்து உற்பத்திப் பொருள்கள்தான் நமது கழகப் பாசறைத் தோழர்களான பெரியார் படைவீரர்களும்!
இராணுவக் கட்டுப்பாடுதான்
கழகத்தின் தனித்தன்மை!
என்றும் இராணுவக் கட்டுப்பாட்டையே தோற்கடிக் கும் வல்லமை படைத்த பெரியாரின் தனி மனித இராணுவத்தின் கட்டுப்பாடுதான், என்றும் ஒளிரும் அதன் தனித்தன்மையாகும்!
அந்த எஃகு உள்ள உரமேறிய தோழர்களின் உறுதிமுன் எண்ணிக்கைப் பலம் வெகுச்சாதாரணமே!
அடக்குமுறை நமக்குக் கிடைத்த அறைகூவல்!
அச்சம் - நாம் அறியாதது
அயர்வு - நமக்குத் தெரியாதது!
சபலம் - நம் அகராதியில் காணாதது!
சாதனை - நமது அன்றாட மூச்சுக்காற்று!
அவதூறு - நமது கொள்கை விளைச்சலுக்கான உரம்!
சுயநலம் - நம்மை ஒட்டக்கூடாத மனக்கிருமி!
அடக்குமுறை - நமக்குக் கிடைத்த அறைகூவல்!
எதிர்ப்பு - என்றும் நமக்குத் துச்சம்!
நம்மை என்றும் அசைத்துப் பார்க்க முடியாது!
இவ்வளவும் நமது கருஞ்சட்டைப் பாசறையாம் படையினருக்கு உண்டு; காரணம், அவர்கள் நிற்பது வெறும் கட்டாந்தரையில் அல்ல; தந்தை பெரியார் என்ற பழிப்பற்ற இமயத் தொண்டின் துவளாத் தோள்கள்மீது!
எனவே, ஏச்சும், பேச்சும், ஏளனங்கள் எல்லாம் நம்மை அசைத்துப் பார்க்க முடியாது!
கொள்கையும், கட்டுப்பாடும்மிக்க ஒரு பாசறைப் படையில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை!
வயது இடைவெளி இல்லாத கூட்டுத் தோழர்கள்!
இந்தப் பாடங்களை நாளும் பயின்று, வளர்ந்து வரு பவன் என்பதால், எமது தோழர்கள் - வயது இடைவெளி சிறிதுமின்றி - எம் பணியை கூட்டுப் பணியாக்கி, கொண்டாடத்தக்க பெருமித உணர்வோடு செய் கிறார்கள்!
குறையொன்றுமில்லை; நிறை உள்ளமே நேரிய பாதையே நமது ஈரோட்டுப் பாதை.
''புகழ்வேட்டையைத் துறந்து, தன்னலம் மறந்து, மான அவமானத்தை அலட்சியப்படுத்திடும் எந்தப் பொதுத் தொண்டனும் என்றும் இலட்சியத்தின் வெற்றிக் கனி பறிக்கும் வீரனேயாவார்'' என்பது நாம் நமது எதிர் நீச்சல் அனுபவத்தால் கற்ற பாடம் - பெற்ற படிப்பினைகள்!
அதனால்தான் சென்ற 45 ஆம் ஆண்டு விடுத்த ('விடுதலை') அறிக்கையில், நான் ஓர் உறுதிமொழியை எம் சகப் போராளித் தோழர்களுக்கும், நம்மீது பற்றுக் கொண்டு தோளைத் தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தும் உண்மை நட்புறவுகளுக்கும் தந்தேன்!
அன்று எடுத்த உறுதிமொழி!
அதையே அனைவருக்கும் நன்றி காணிக்கையாக்கி மீண்டும் புதுப்பித்துக் கூறும் உறுதிமொழிகளாக மிகுந்த தன்னடக்கத்துடன் தலைதாழ்ந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
''முடியும் வரை கடமையைச் செய்வேன் -
மடியும்வரை என் பணிகள் ஓயாதவை!'' என்பதே!
கடந்த ஆண்டில் நாம் நிறைய பிரச்சாரக் களத்தினை - அதுவும் கரோனா கொடுந்தொற்றால் மக்கள் மறந்து விட்ட பொதுக்கூட்டங்கள்மூலம் - மாலை நேரப் பிரச் சாரத்தை பெருமளவில் புதுப்பித்து நடத்தி, மக்களைத் திரளச் செய்து, எதிரிகளை மிரளச் செய்துள்ளோம்!
ஊடக விளம்பர வெளிச்சம்பற்றிக் கவலை கொள் ளாதவையே நமது கொள்கைப் பயணங்கள் என்பதால், மக்களை நேரிடையாகச் சந்தித்து ''திராவிட மாடல் ஆட்சிக்கு'' எதிராக ஜாதி, மத, பதவி வெறியர்களால் உருவாக்கப்படும் தடைகளைத் தகர்த்தெறிய நம் பணிகளைச் செய்வதில் ஓய்வில்லை, ஒழிச்சல் இல்லை என்ற அளவுக்கு ஆற்றிய பணிகளால் நமக்கு முழு மன நிறைவு ஏற்பட்டது!
இளைஞர்கள் நம் இயக்கத்தின்மீது கொண்டுள்ள பற்று - பல போராட்டங்களை, அறப்போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
களத்தில் நிற்பவர்களுக்கு களைப்பு எப்படித் தோன்றும்?
1943 - நான் ஏறிய முதல் மேடை!
மாணவன் கையைப் பிடித்து மணலில் எழுதிடக் கற்றுத்தரும் தொடக்க ஆசிரியரைப் போன்று, மணல் தரைமேல் மேடைப் போட்டு, அதன்மீது ஒரு சிறு மேஜையைப் போட்டு, அதற்குமேல் என்னைத் தூக்கி நிறுத்தி, 1943 இல் கடலூரில் பேசிட அரங்கேற்றி வைத்தார் எனது ஆசான் ஆ.திராவிடமணி.
அதுவும் அறிஞர் அண்ணாவுக்கு 'திராவிட நாடு' பத்திரிகைக்கான நிதியை கடலூர் எளியவர்கள் திரட்டிய அக்காலத்துப் பெருநன்கொடை. - அதைப் பெற்றிடவும், பகுத்தறிவுப் பிரச்சார மழை பொழிந் திடவும் ஒரு குழுவோடு வந்தார் அண்ணா!
போட் மெயில் பொன்னம்பலனாரும், காஃபி கலர் சில்க் ஜிப்பா அணிந்த டி.பி.எஸ்.பொன்னப்பாவும் அண் ணாவின் சில நண்பர்களும் புடைசூழ - அண்ணாவுக்கு முன்பே தொடக்கப் பேச்சாக என் மேடைப் பேச்சு - அல்ல அல்ல மேஜைப் பேச்சு அமைந்தது!
தந்தை பெரியார்முன் பேசும் வாய்ப்பு!
அதற்கு சில மாதங்கள் கழித்தே கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் நடைபெற்ற தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு - அதில்தான் இந்த சிறுவனின் பேச்சைக் கூர்ந்து கவனித்து, வியந்து பாராட்டி ''திராவிடர் இயக்கத் திருஞான சம்பந்தனாக'' எனக்கு ஊக்க மாத்திரை தந்தார் அண்ணா - அதுவும் அய்யா முன்னிலையில்!
அதற்குப் பின் சில மாதங்கள் கழித்து ''சேலம் செயலாற்றும் காலம்'' என சேலத்தில், 1944 ஆம் ஆண்டில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு! அதிலும் இடைவேளையில் பேசும் வாய்ப்பளித்து அண்ணா என்னை ஊக்கப்படுத்தினார்; அவரது படைப்பான ''கலிங்கராணி''யின் பாத்திரம் (வீரமணி) அல்லவா நான்! அன்று தொடங்கிய பணி நினைவு தப்பினாலும் அப்பணி ஒருபோதும் தப்பாது; தப்பவே தப்பாது - காரணம், அதுதான் எனது ரத்த ஓட்டமே! கொள்கை ஓட்டமே!!
60 ஆயிரம் 'விடுதலை' சந்தா சேர்த்த
அரும்பணி!
சென்ற ஆண்டில் 60 ஆண்டு 'விடுதலை' பணி செய்ததைப் பயன்படுத்தி, 60 ஆயிரம் அரையாண்டு 'விடுதலை' நாளேட்டுக்கான சந்தா திரட்டலை, சுழன்ற டித்த சூறாவளியென நமது கழகப் பொறுப்பாளர்கள், நம்மீது நல்லெண்ணப் படை நண்பர்களும், கூட்டணித் தோழர்களும் ஒருங்கிணைந்து செய்த பணி - ஓர் இதழின் சந்தா சேர்க்கும் வெறும் பணி அல்ல; ஓர் இன மானப் போருக்கான ஆயுதக் கிடங்காக, அறிவாயுதப் பட்டறையை வெகுவேகமாக இயங்கிடச் செய்த இணையற்ற, இன்பம் பெருக்கிய விழாப் பணி, பெரும்பணி!
'விடுதலை'யின் வீச்சு வீடுகளை - இதுவரை எட்டாத வீடுகளை தேடிச் செல்லுகின்றன. மக்களும் நாடிப் படிக்கிறார்கள் - அவர்களை என்றும் நாம் ஓடித் தேடித் திரிதல் நமது நிரந்தரப் பணியாகவே இருக்கவேண்டியதை இயக்கத்தின் இன்றியமையாத பணியாக ஆக்கிக் கொள்ளுங்கள் தோழர்களே!
இயக்கத்தை நோக்கி இளைஞர்கள்!
வேறு மாலை மரியாதை, சால்வை, பொன்னாடைகள் வேண்டாம் - வீடுதோறும் 'விடுதலை' திட்டம் பருவம் பாராது - மானம் பாராது நடைபெறவேண்டிய மூச்சுப் பயிற்சிப் பணியாக அமையவேண்டும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் நம் இயக்கம் நோக்கி வருகிறார்கள்!
அது அதிசயத்திலும் அதிசயம்! காரணம், இது கடும் 'பத்தியம்' உள்ள கருஞ்சிறுத்தைப் பாசறை! என்றாலும், அதை விரும்பி வருகிறார்கள் - அந்த எண்ணிக்கை எமது கூட்டங்களில் நாளும் பெருகிவருவது - கிழக்கு வெளுத்து, வெள்ளி முளைத்து பெரியார் மண் இது என்று அகிலத்திற்கும் அலைபாயச் செய்கின்றனர்.
ஆர்ப்பரிக்கும் எதிரிகளின் - அதுவும் அறிவு நாணயமற்ற இன எதிரிகளிடம் நாம் நமது அறிவுப் போரை - கொள்கை லட்சியப் போரை நடத்திட முன் வருகிற நேரமிது! மிகுந்த எச்சரிக்கையோடு, தக்க கவசங்களுடன், குலையாத - சீரிய கட்டுப்பாட்டோடும் போராடவேண்டும்!
ஆரியம் வகுக்கும் சனாதனத்தை முறியடிப்போம்!
சனாதனத்தின் சதிராட்டம் சதிவட்டமாகி வஞ்சக வலை விரிப்பதை நாம் நமது மக்களுக்குப் போதிய பிரச்சாரம், போராட்டம் ஆகியவைமூலம் வெளிப் படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும்.
தமிழ்நாடு திராவிட மண் - பெரியார் மண் - சமூகநீதி மண் என்று முழங்கினால் மட்டும் போதாது!
அம்மண்ணை காவி மயமாக்கிட ஆரியம் வகுத்திடும் வியூகமும், அதன் கருவிகளும் அரசியலில் நித்தம் நித்தம் புத்தம் புது ''அவதாரங்கள்'' எடுத்துவரும் நிலையில், நம் மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, பொல்லாங்குகளைப் பொடிபடச் செய்து, எதிரித் தத்துவங்களைப் பின்னங்கால் பிடரியில் பட்டு ஓடும்படி விரட்டியடித்து வெற்றி காணும்வரை நமக்கு ஓய்வில்லை தோழர்களே!
பெரியாரை உலக மயமாக்குவதும், 'பெரியார் உலக'த்தை உலகம் புரிந்து, உள்வாங்கி பயன்பெறும் பணியும், நம் அனைவரது முக்கிய முன்னுரிமைப் பணியாகும்.
பெரியாரின் பெருமைகளை பேசா நாள்கள் எல்லாம் நமக்குப் பிறவா நாள்கள் அல்லவா!
''முடியும்வரையல்ல - முடிக்கும்வரை'' உழைப்பேன்!
'முடியும் வரை' செய்வேன் என்று கூறியதை சற்றுத் திருத்தி, அப்பணியை முடிக்கும்வரை உழைப் பதில் இன்பம் காணுவதே நம் அனைவரது ஒரே கடமையாக அமையவேண்டும்.
நமது ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தலைமையில் நடைபெறும் 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியை காப்பதும், அவ்வரசின் வெற்றி நூறு விழுக்காடு உறுதியே என்று பறை சாற்றுவதும் நம் பணியின் முக்கிய பணியாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.3.2023
No comments:
Post a Comment