புதுடில்லி, மார்ச் 18- இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப் பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 26 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 109 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதித்தவர் களின் எண்ணிக்கை 1,625 ஆக உள்ளது. மகாராட்டிராவில் 926 ஆகவும், கருநாடகாவில் 587 ஆகவும், குஜராத்தில் 435 ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 284 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தெலங்கானாவில் 281 ஆகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 133 ஆகவும், தலைநகர் டில்லியில் 107 ஆகவும் உள்ளது. மற்ற பல மாநிலங்களில் தொற்று பாதித் தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களிலேயே உள்ளது.தொற்று இல்லாத மாநிலங்களாக அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவை உள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 685 ஆக உள்ளது. கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 795 ஆக உள்ளது.
No comments:
Post a Comment