கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய 3 பக்தர்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய 3 பக்தர்கள் பலி

விழுப்புரம், மார்ச் 30- புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55), ஆட்டோ டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் (28.3.2023) காலை தனது மனைவி வேளாங் கண்ணி(50) மற்றும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரி (50) ஆகியோருடன் ஆட்டோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளபரமேசுவரி அம்மன் கோவிலுக்கு "சாமி கும்பிட" என சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் வழிபாடு செய்துவிட்டு, ஆட் டோவில் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். 

கார்-ஆட்டோ மோதல்

மதியம் 12 மணியளவில் மேல்மலை யனூர் அடுத்த விழுப்புரம்- ஆற்காடு சாலையில் கன்னலம் கிராம வளைவில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதில் ஆட்டோ இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த விஜயகுமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தார். பாலசுப்பிரமணி, வேளாங்கண்ணி ஆகியோர் பலத்த காயங்களுடன் உயி ருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்த மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய வீரர்களும், வளத்தி காவல்துறையினரும் விரைந்து வந்து, விபத்தில் படுகாயமடைந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலசுப்பிரமணி, வேளாங்கண்ணி ஆகியோர் பரிதாப மாக இறந்தனர்.

இந்த விபத்தில் அந்த வட்டாரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காய மின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.


No comments:

Post a Comment