நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா?

100 நாள் வேலைத் திட்டத்திலும் இப்பொழுது கைவைத்து விட்டீர்களே!

தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, மார்ச் 3  நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா? 100 நாள் வேலைத் திட்டத்திலும் இப்பொழுது கைவைத்து விட்டீர்களே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஈரோடு முதல் கடலூர்வரை

பரப்புரைக் கூட்டம்

கடந்த 19.2.2023 அன்று  தருமபுரியில் சமூகநீதி பாதுகாப்பு, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அவர்கள் குறுக்கு வழியை 

கையாளுகிறார்கள்!

வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டினால், அதை மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; எதிர்ப்பு வந்துவிடும். அந்த அளவிற்கு மக்களிடம் நாம் விழிப் புணர்வை உண்டாக்கி வைத்திருக்கிறோம்.

அதற்காக அவர்கள் குறுக்கு வழியை கையாளு கிறார்கள். அது என்னவென்றால், 10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று சொல்லி - திறந்தவெளிப் போட்டியில் - அதிலிருந்து 10 சதவிகிதத் தைக் கொடுக்கிறார்கள்.

பொருளாதார அடிப்படைதான் - இனிமேல் ஜாதி அடிப்படை இல்லை என்கிறார்கள்.

ஜாதி அடிப்படையை திராவிடர் கழகத்தினர் ஆதரிக்கிறார்கள் என்று எங்கள்மீது குற்றம் சொல் கிறார்கள். இதன் உள்நோக்கம் புரியாமல், சில பேர் தவறாக நினைக்கிறார்கள்.

நாங்கள் கேட்பது, ஜாதியை ஒழியுங்கள் என்றுதான். ஜாதி அடிப்படையில்தானே எங்களைப் படிக்காதே என்று சொன்னீர்கள். கீழ்ஜாதிக்காரன் நீ படிக்காதே என்று சொன்னீர்கள்.

இதோ என் கையில் இருப்பது மனுதர்மம்; ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பார்ப்பனர்கள் போட்டது; அதனுடைய மொழி பெயர்ப்பு.

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முதன் முதலில் தொடங்கியது திராவிடர் கழகம் அல்ல.

கல்வி எங்களுக்கு, அடிமை வேலையெல்லாம் உங்களுக்குத்தான் என்று இட ஒதுக்கீட்டை உண்டாக் கியது யார் என்றால், மனுதர்மம்தான்.

நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா?

நாம், சமூகநீதி என்கிற பெயரில் என்ன கேட்டோம் என்றால், நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா? என்று கேட்டோம்; இது சமூக அநீதி அல்லவா என்று கேட்டோம். அதற் காகத்தான் போராடினோம், அதில் இப்பொழுது ஓரளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம்.

அதையும் பறிக்கின்ற முயற்சிகளைத்தான் இன் றைக்கு அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

என்ன தந்திரத்தை அவர்கள் செய்கிறார்கள் என் றால், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் என் கிறார்கள்.

ஏழைகள் என்று சொல்லுங்கள், அது நியாயம். அது என்ன உயர்ஜாதி ஏழைகளுக்கு?

அதிலும் உயர்ஜாதி ஏழைகள் என்பதற்கு என்ன தகுதி மோடி அரசு வகுத்திருக்கிறது என்றால், ஒரு நாள் ஒன்றுக்கு 2,222  ரூபாய் சம்பாதிக்கின்றவர், மோடி அரசின் கணக்கில் ஏழை.

ஓராண்டிற்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் வாங் குபவர், வருமான வரி கட்டியாகவேண்டும். 7 லட்சம் ரூபாய் வரைதான் வரி விலக்கு உண்டு.

8 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால், வருமானம் வரி கட்டியே ஆகவேண்டும். அப்படியென்றால், வருமான வரி கட்டுகின்ற ஏழைகள்.

இது என்ன அநியாயம்?

நம்முடைய கண்களில் மிளகாய்த் தூளை தூவு கிறார்கள் என்று பாருங்கள்.

ஏழைகள் அதிகமாக எங்கே இருக்கிறார்கள்? எங்கள் சகோதரர்கள்தானே ஏழைகள். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு எந்தப் பாப்பாத்தி பார்ப்பான் போறான்?

இதைக் கேட்டால், அய்யோ வர்க்க பேதம், வருணம் பேதம் என்பார்கள், நம்முடைய ஆட்கள்.

100 நாள் வேலைத் திட்டத்திலும் 

இப்பொழுது கைவைத்து விட்டார்கள்!

கிராமத்துப் பெண்கள் எங்கள்  சகோதரிகள் தானே கொளுத்தும் வெயிலில் 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை செய்கிறார்கள். அந்தத் திட்டத்திலும் இப்பொழுது கை வைத்துவிட்டார்கள். நம்மாட்கள் அந்தத் திட்டத்தினால் பயன் பெறுகிறார்கள் என்பதினால்.

சிற்றரசர்கள், பேரரசர்களுக்குக் கப்பம் கட்டுவது போன்று, டில்லி பேரரசர்களுக்குக் 

கப்பம் கட்டவேண்டி இருக்கிறது

விற்பனை வரியை மாநில அரசு வசூல் செய்கிறது. ஆனால், பழைய காலத்தில், சிற்றரசர்கள், பேரரசர் களுக்குக் கப்பம் கட்டுவது போன்று, டில்லி பேரரசர் களுக்குக் கப்பம் கட்டவேண்டி இருக்கிறது. மாநில அரசு வசூல் செய்த எல்லாவற்றையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. பிறகு நாம் எங்களுக்குரிய பங்கைக் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்பதாக இருக்கிறது.

நாம்தான் வசூல் செய்து கொடுக்கிறோம்; நம்மையே வேலைக்காரர்களாக ஆக்கி, நம்முடைய பையில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நமக்கே கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்.

இதை சொல்வதற்கு, எங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சட்டம் -ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

மாநில உரிமைகளைக் கேட்கக்கூடிய ஒரே ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால்தான், இந்த ஆட்சிக்கு இடை யூறுகளை விளைவிக்கவேண்டும்; சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் இன எதிரிகள்.

எப்படி இரவில் கொள்ளையர்கள் கொள்ளையடிக் கிறார்களோ, அதுபோன்று நம்முடைய உரிமைகளைப் பறிக்கிறார்கள். அதுதான் உயர்ஜாதிகளில் ஏழைகளுக் கான 10 சதவிகித இட ஒதுக்கீடு.

வருமான வரி கட்டுகிறவர்கள் எல்லாம் ஒன்றிய அரசின் கணக்கில் ஏழைகள். சாதாரண வேலை செய்கிறவர்களின் வயிற்றில் அடிப்பதுபோன்று, 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் ஏழைகளின் வருமானத்தைக் குறைப்பது நியாயமா?

காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இருக்கிறது.

உழைத்தவன் கணக்குப் பார்த்தால், 

உழக்குக்கூட மிஞ்சாது

நூறு நாள் வேலை திட்டத்திற்காக 10, 12 மைல் நடந்து சென்று வேலை செய்வார்கள். நடக்க முடியாது என்பதற் காக பேருந்தில் சென்றால், போவதற்கு 20 ரூபாய் பய ணச்சீட்டு; வருவதற்கு 20 ரூபாய் பயணச்சீட்டு; பேருந் திற்கே 40 ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கூலி என்றால், நடுவிலே ஒருவர் புரோக்கர் கமிசன் எதிர்ப் பார்ப்பார். அந்தக் கமிசனைத் தாண்டி, ஒருவ ருக்கு 80 ரூபாய் கூலியாக வந்தால், பேருந்திற்கு 40 ரூபாய் செலவாகும். உழைத்தவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது என்பது போன்றதாகி விடும்.

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று முதல் கையெழுத்துப் போட்டது எதற்காக என்றால், பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம். இத்தனைக்கும் அரசு கஜானா காலி. கடன் - வட்டி கட்டவேண்டும். இவற்றை யெல்லாம் சமாளித்துக்கொண்டுதான், பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை அறிவித்தார்கள்.

அதனால், பெண்களுக்கு ஓரளவு கூலியாகக் கிடைக்கிறது. அதை வாங்கிக்கொண்டு போய், உப்பு, மிளகாய், புளி, அரிசி வாங்கிக்கொண்டு போய் உலை வைக்கவேண்டும்.

ஆனால், இன்றைக்கு அதற்கும் ஆபத்து உண்டாக்கக் கூடிய நிலையை உருவாக்குகிறார்கள்.

யார்?

ஏழைப் பங்காளராக இருக்கிற மோடி அரசு.

ஏனென்றால், அவர்கள் எப்பொழுதும் ஏழைகளுக்கு சாதகமாகப் பேசுவார்கள்.

அவர்களைப் பொறுத்து நாட்டிலே முதல் ஏழை யார் தெரியுமா? உங்களுக்கு. 

காரோனா காலகட்டத்தில் எல்லோரும் கடைகளை மூடினார்கள்; வழிபாட்டுத் தலங்களை எல்லாம் மூடினார்கள். ஆனால், ஒரே ஒருவர்தான் அப்பொழுது சம்பாதித்தார்.

நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி சம்பாதித்த ஒரே ஏழை

நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த ஒரே ஏழை - நம்முடைய பிரதமருக்கு வேண்டியவர், பிரதமரோடு பயணம் செய்தவர் என்றெல்லாம் நாடாளுமன்றத்தில்  சொன் னார்களே, அந்த அதானிதான் அவர்.

பிரதமர் மோடி ஆட்சி வருவதற்கு முன்னால், அதானியை கேள்விப்பட்டு இருக்கமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அதானி, அம்பானி, டாடா, பிர்லா போன்ற பெயர்கள்தான்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆயினர்.

ஏழைகள், நூறு நாள் வேலைத் திட்டம் செய்கின்றவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

ஒன்றிய ஆட்சி, கார்ப்பரேட் ராஜ்ஜியமாக இருக்கிறது; பெருமுதலாளிகளின் வசமாகிறது என்று சொன்னார்கள். நாங்கள் இன்னும் ஒரு செய்தியை கூடுதலாகச் சொன்னோம்.

27 சதவிகிதத்தைப் பெற்றுக் கொடுத்தோம், ஒன்றிய அரசு நிறுவனங்களில்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள். 

ஓர் ஆபத்து, மண்டல் கமிசன் வந்தவுடன், நாம் போராடி 27 சதவிகிதத்தைப் பெற்றுக் கொடுத்தோம், ஒன்றிய அரசு நிறுவனங்களில்.

பொதுத் துறை நிறுவனங்களாக வந்தவுடன், நம் முடைய ஆட்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரி களாக ஆயினர். கீரைக்கார முனியம்மா, தெருக் கூட்டும் முத்தம்மா ஆகியோரின் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தார்கள்.

அந்த வரிசையில் அய்.பி.எஸ். அதிகாரியாக வந்தவர் தான் இன்றைக்கு பா.ஜ.க. அண்ணாமலை என்பதை மறந்துவிடாதீர்கள். மண்டல் கமிசன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அய்.பி.எஸ். அதிகாரியாக வந்தவர்.

இது அவருக்கு நினைவில் இருக்கிறதோ, இல்லையோ, அது வேறு விஷயம்.

வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது 

காவி கட்சியினர்தான்!

மண்டல் கமிசன் அறிக்கையை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அதற்காக அவருடைய ஆட்சியை கவிழ்த்தவர்கள் யார் என்றால், காவிக் கட்சியினர்தான்.

அதற்கு ஒரே காரணம், இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார் என்பதற்காகத்தான்.

அன்றைக்கும் நாம் போராடினோம்; தொடர்ந்து நாம் போராடியதன் விளைவாகத்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தன.

தனியார்த் துறையிலிருந்து பொதுத் துறைகள் வந்தன. இந்த ஏரியா பி.எஸ்.என்.எல். ஏரியா. இவை இப்பொழுது ஒரு தனியார்த் துறையான ஜியோவிற்குப் போகிறது. அம்பானிக்குப் போகிறது.

எல்லோரும் அதை 

அனுபவிப்பார்கள்

அவர்கள் எப்படி தூண்டிலைப் போடுவார்கள் என்றால், நாங்கள் இலவசமாகக் கொடுக்கிறோம்; போன் கொடுக்கிறோம் என்று சொல்வார்கள்.

நம்மாள்களும், பரவாயில்லையே, இலவசமாக போன் தருகிறார்கள்; நெட்வொர்க் இணைப்பையும் இலவசமாகத் தருகிறார்களே என்று எல்லோரும் அதை அனுபவிப்பார்கள்.

ஒருவரை பொடி போடுவதற்குப் பழக்குவது எப்படி என்றால், பக்கத்தில் இருப்பவர் பொடி போடுவார்; பொடி போட்டவருக்குத் தும்மல் வரும். 

ஏங்க, தும்முறீங்க? என்று கேட்பார் அருகில் நின்றவர்.

‘‘பொடி போட்டால், சளித் தொல்லை தீரும். நீங்களும் கொஞ்சம் போட்டுத்தான் பாருங்களேன்; முயற்சி செய்யுங்களேன்’’ என்பார்.

அவரும், கொஞ்சம் எடுத்துப் போடுவார். அடுத்த நாளும் அப்படியே; அதற்கு அடுத்த நாளும் அப்படியே செய்வார். மூன்றாவது நாள், இவரே அவரிடம் பொடி கேட்பார்.

நான்காவது நாள், பொடி டப்பாவை வாங்கிக் கொண்டு வருவார். இப்படி ஆண்டு முழுவதும் பொடி போடப் பழகி, கடைசியாக புற்றுநோய் வந்து மருத் துவமனைக்குச் செல்லவேண்டியதுதான் அவருடைய நிலைமை.

அதுபோன்று, இலவசமாக செல்போன், இணையதள இணைப்பைக் கொடுத்து, நம்மாள்களும் அதைப் பார்த்து பழகிவிடுவார். அந்தப் பழக்கத்திற்கு அடிமை யாகிவிடுவார்.

பெருமுதலாளித்துவம்; 

மிகப்பெரிய கார்ப்பரேட் ராஜ்ஜியம்!

உடனே, இணைய தள கட்டணம் நூறு ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்பார்கள். பிறகு 400 ரூபாய்; கொஞ்ச காலத்திற்குப் பிறகு 900 ரூபாய் என்பார்கள். பிறகு எவ்வளவு கட்டணம் என்றாலும், அதை வாங்கியே ஆகவேண்டும் என்கிற அளவிற்கு நம்மைப் பழக்கப்படுத்தி விடுவார்கள்.

அதுதான் பெருமுதலாளித்துவம்; அதுதான் மிகப்பெரிய கார்ப்பரேட் ராஜ்ஜியம். அதுதான் நடக்கிறது இன்றைக்கு.

நம்மூரில் வெற்றிலைப் பாக்குக் கடை, துணிக் கடை, எண்ணெய் வியாபாரிகள் எல்லாம் அண்ணாமலைக்கு அரோகரோ சொல்லிப் போகவேண்டியதுதான்.

கடை வைத்து வாடகைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை; மின்சாரக் கட்டணம் செலுத்தவேண் டியதில்லை. மக்கள் தேவையானவற்றை போனில் ஆர்டர் செய்தால் போதும்.

(தொடரும்)


No comments:

Post a Comment