கொங்கு மண்டலத்தின்
குளிர்நெற்றிக் கொலுவிருக்கும்
குங்குமத் திலகம்
தனியொருவர் கோக்காத
கோவை!
கொடியிலே பழுக்காத
கோவை! எங்கோ வை
என்றெண்ணி இருக்காமல்
“எங்கோவை!” “எங்கோவை!”
என்றிதயத் தேற்றிவைக்கும்
இன்கோவை! மங்காத
“இளகல் வெயில்நகர”
மணிக்கோவை.
“ஏனுங்க! ஆமாங்க” எனும்
கொங்கு வார்த்தைகளைத்
தேனுங்க என்போமா
தித்திப்புங்க என்போமா?
சுடும்போது சூரியர்கள்,
நெஞ்சம் குளிர்ந்து
விடும்போது வெண்ணிலவு
விழுதுகளே மக்கள்!
எதார்த்தத் தூய்மையுள்ள
இதயங்கள், வஞ்சகப்
பதார்த்தத்தால் கெட்டுப்
பழுதடையாப் பளிங்குகள்!
புதுமை வெளிச்சத்தில்
புன்னகைக்கும் கோவையிலே
அதிசய அறிஞர் ஜி.டி.நாயுடு.
ஆச்சரியக் குறிகளின்
அணிவகுப்பை ஏற்கின்ற
மூச்சுள்ள சிந்தனையால்
முழுப்பெருமை சேர்க்கின்றார்!
தேனூறு தமிழில்
திகழ்கின்ற கோவைக்கோ
நானூறு துறையுண்டு!
நாகரிகம் கொப்பளிக்கும்
எங்களின் கோவைக்கோ
எண்ணாத் துறைகளுண்டு.
தங்கத் தரைமார்பை
அழகுறுத்தும் அதன் பெருமை
அத்தனையும் பாட
அவா மிக இருந்தாலும்
இத்தனைக்கே இங்கே இடம்.
- ஈரோடு தமிழன்பன்
No comments:
Post a Comment