* பி.ஜே.பி.யை வீழ்த்த அனைவரும் ஒன்று சேரவேண்டும்
* காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது கரை சேராது!
தனது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
சென்னை, மார்ச் 2- 2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கியம். பி.ஜே.பி.யை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்; காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது கரை சேராது என்றார் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நேற்று (1.3.2023) மாலை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆற்றிய ஏற்புரையில் குறிப்பிட்டதாவது,
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் எனக்கு இன்று எழுபதாவது பிறந்தநாள்!
நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல!
இந்த நந்தனத்தில் நான்கு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் இருக்கக்கூடிய உங்களை எல்லாம் சேர்த்துதான்!
நீங்கள் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகமே தங்களது உயிர் என்று தாய்த்தமிழ்நாட்டின் எட்டுத் திக்கிலும் கழகத்தைக் காத்து நிற்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்பு களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
'ஈ.வெ.ராமசாமி என்கிற நான்!'
நான், என்றும் உங்களில் ஒருவன்!
ஸ்டாலின் என்கிற எனது பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உயிர்கள் அடங்கி இருக்கிறது. 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்ற ஒற்றை வாக்கியத்தில் நம்மை இணைத்தார், நம்முடைய உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!
அவருக்கு நான் மட்டுமா பிள்ளை? நீங்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள்தான். தந்தை பெரியார் அவர்கள், “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்போட்டுக் கொண்டு..." என்றுதான் புறப்பட்டார்!
நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், “இந்த அண்ணாத்துரையால் என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ, அனைத்தையும் இந்த அண்ணாத் துரையால் சாதிக்க முடியும்" என்றுதான் எழுந்து நின்றார்!
நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்" என்று தனது தொண்டால் நிறைந்து வாழ்கிறார்!
''வீட்டுக்கு விளக்காக இருப்பேன்!''
அந்த வழித்தடத்தில் வந்த நானும், “மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன் - நாட்டுக்குத் தொண் டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலை வனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல் வனாவேன்" என்று உறுதிமொழி ஏற்று நாளும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன் என்பதை இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக் கான தொண்டர்களுக்கு முன்னால், உறுதியேற்று என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்!
ஏற்புரை வழங்க இப்போது உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு இட்ட கட்டளையை ஏற்று முதலமைச்சராகச் செயல்பட்டு வருகின்ற நான் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று உடன்பிறப்புகள் வழங்கிய கட்டளையை ஏற்று தலைவராகச் செயல்பட்டு வருகின்ற நான், மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்த்துகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
''கடந்து வந்த பாதையைத்
திரும்பிப் பார்க்கிறேன்!''
கடமையையும் - பொறுப்பையும் எனது தோளில் சுமத் தியவர்கள் நீங்கள்தான். அதனை நான் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டும். பேரறிஞர் அண்ணாவைப் போல எனக்குப் பேசத் தெரியாது - தலைவர் கலைஞரைப் போல எனக்கு எழுதத் தெரியாது - ஆனால் அவர்களைப் போல உழைக்கத் தெரியும்!
இந்தத் தருணத்தில், நான் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கிறேன்! பதினான்கு வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கிய நான், தேர்தல் பரப்புரைகளில்- பொதுக்கூட்ட மேடைகளில் என கழகக் கொள்கைகளைக் குரலெடுத்து முழங்கினேன்!
நாடக மேடைகளில் கனல் தெறிக்கும் வசனங்கள் மூல மாக கழகத்தின் வெற்றிக்காக உழைத்தேன்! அதனாலேயே அவசரநிலைக் காலத்தில் அரசியல் கைதியாகச் சிறைப் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தேன். ஓராண்டு காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டேன். திருமணம் ஆன அய்ந்தே மாதத்தில் சிறைக்குப் போனேன்.
'பொதுவாழ்க்கை என்றால் இப்படித்தான் எல்லாமும் இருக்கும்' என்று சொல்லி வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப் பது போல சிறைச்சாலைக்கு என்னை அனுப்பி வைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அதுதான் அரசிய லில் என்னுடைய பாசறையாக அமைந்தது.
சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றி நான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்க உறுதி எடுத்துக் கொண்டேன். இந்த அய்ம்பத்தைந்து ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டில் என்னுடைய கால் படாத கிராமம் இல்லை, நகரம் இல்லை, மாநகர் இல்லை என்கிற அளவுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டேன்.
சாலைகளே இல்லாத புழுதிக்காட்டிலும் கருப்பு சிவப்பு புகழ்க்கொடியை ஏற்றி வைத்தேன். வானுயர் கட்டடங்களுக் கிடையே கம்பீரத் தூணாக கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.
மேடு பள்ளம் - வெயில் மழை - இரவு பகல் எனக் கால - நேரம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பது ஒன்றே பணி என்று பணியாற்றியதில் எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. நினைத்துப் பார்த்தால் எல்லாம் நேற்று நடந்தவை போல தோன்றும்! ஆனால், என்னுடைய பயணம், நெடிய பயணம்! மக்களுக்காகப் போராடும், வாதாடும் நம்மைப் போன்ற வர்களுக்காக காலம் - நேரம் எதுவும் தெரியாது. காலம் நேரம் எதுவும் கிடையாது!
மார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் எனக்கு வயது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சட்டெ னக் கடந்துவிடுகிறது. நாளை வழக்கம்போல் என்னுடைய பணிகளைத் தொடர்ந்துவிடுவேன். எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஏன், கடந்த ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கு நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வந்திருந்தபோது கூட, நகைச்சுவையாக குறிப்பிட்டுச் சொன்னார். “ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக நான் போகிறேன் என்று எனது தாயார் அன்னை சோனியா காந்தியிடம் சொன்னேன். ஸ்டாலினுக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். தெரியாது என்றார். அவருக்கு வயது 69 ஆகப்போகிறது என்றேன். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் அவர். பின்னர், கூகுளில் தேடி பார்த்த பிறகு தான் நம்பினார். பொதுவாக, வயது என்பது மனதைப் பொறுத்தது!
இளமை என்பது உடலில் அல்ல;
உள்ளத்தில் இருக்கிறது!
இளமை என்பது முகத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது. உங்களது மனதில் கொள்கை உறுதியும், அந்தக் கொள்கையை வென்றெடுப்பதற்கான இலட்சிய தாகமும் - அந்த இலட்சியத்துக்காக உழைப்பதும் உங்களது அன்றாடப் பணியாக இருக்குமானால் உங்களுக்கு வயதாவது இல்லை! இலட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை!
நம்முடைய இலட்சியத்தை வென்றடைவதற்கு உடன் பிறப்புகளாகிய நீங்கள் என்னோடு அணிவகுத்து வரும்போது நாளுக்கு நாள் நான் இளமை ஆகிவிடுகிறேன். துடிப்புமிக்க இளைஞனாகி விடுகிறேன். 1980-களின் அந்தத் தொடக்கத்தில் இளைஞரணிச் செயலாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். அதே உற்சாகத்தோடுதான் நான் இருக்கிறேன்.
நாங்கள் விதைத்த விதைதான் - இன்று கழகம் கம்பீரமாக நிற்கிறது. அந்த விதையின் விளைச்சலாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்னுடைய 70வது பிறந்தநாளான இன்று நான் உங்களை எல்லாம் நம்பி, உங்கள் முன் ஒரு உறுதிமொழி எடுக்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களே!
நீங்கள் உருவாக்கிய கழகத்தை....
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே!
நீங்கள் கட்டிக் காத்த கழகத்தை ...
எந்நாளும் நிரந்தரமாக, நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன்!
இது ஏதோ, நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றோ அல்ல - முப்பது பேர் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்றோ அல்ல, இந்த இயக்கமும் அதற்காக தோற்றுவிக்கப்பட்டதல்ல!
கொள்கையைப் பரப்ப கட்சி -
கொள்கையை நிறைவேற்ற ஆட்சி!
பாராண்ட தமிழினம் இடையில் ஏற்பட்ட பல்வேறு பண் பாட்டுப் படையெடுப்புகளால் அடிமைப்பட்டுக் கிடந்ததை மீட்க 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கத்தைக் காக்கக்கூடிய கடமை நமக்குத்தான் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் நெறிமுறை களின்படி தமிழ்நாட்டை கல்வியில், சமூகத்தில், பொருளா தாரத்தில் முன்னேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்த இரண்டும்தான் நம்முடைய இரு இலட்சியக் கண்கள்! இதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் - நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
கொள்கையைப் பரப்ப கட்சி!
கொள்கையை நிறைவேற்ற ஆட்சி!
இந்த இரண்டின் வழியாகத் தமிழ்நாட்டை என்றும் தலைநிமிர வைப்போம். இதனைத் தான், இந்த இரண்டு ஆண்டுகாலத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வழங்கி னோம். அதில் 85 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டு விட்டன. மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத எத்தனையோ திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதனால் தான் சொன்னேன்,
தலைவர் கலைஞர் பாணி
“சொன்னதைச் செய்வோம்
செய்வதைச் சொல்வோம்” என்பது,
இந்த ஸ்டாலினின் பாணி
“சொல்லாததையும் செய்வோம்
சொல்லாமலும் செய்வோம்” இது என்னைப் பொறுத்த வரையில்,
என்னைப் பொறுத்தவரையில், நம்பர் ஒன் முதலமைச்சர் - நம்பர் ஒன் தமிழ்நாடு - என்று அங்கீகாரம் பெறுவதை விட, நம்பர் ஒன் நன்மைகள் தரக்கூடிய காலமாக நம்முடைய ஆட்சிக்காலம் அமைய வேண்டும். அதனால்தான் தமிழ்நாட்டினுடைய எல்லைகளைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, நமது திராவிட மாடல் ஆட்சி!
இந்தியாவின் மிக மிகப் பழைமையான அரசியல் கட்சி யான காங்கிரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் - என்னை வாழ்த்தியது எனக்குப் பெருமை!
காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா அவர்கள் வாழ்த்தி இருக்கிறார்.
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத முகங்களாக கோலோச்சிய முலாயம் சிங் அவர்களின் மகன் அகிலேஷ் அவர்களும் - லாலுபிரசாத் அவர்களின் மகன் தேஜஸ்வீ அவர்களும் - இங்கு வந்திருப்பது எனக்கு மிக, மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு சீனியர்களும் ஜூனியர்களும் என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள். இது எனது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையாக மட்டுமில்லாமல் - இந்தியாவில் புதிய அரசிய லுக்கான தொடக்க விழா மேடையாகவும் அமைந்திருக்கிறது. இதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
Dear Mallikarjuna Kharge Avargale,
You have already given my birthday present Three days before.
I consider one of the resolutions passed at the 85th plenary session of Indian National Congress to be the ideal birthday present.
காங்கிரஸ் எனக்கு அளித்த பரிசு!
''ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயார்'' என்ற காங்கிரசு கட்சியின் தீர்மானத்தைத்தான் எனக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசாக நான் சொல்கிறேன்.
இன்றைய காலத்துக்கு மிக மிகத் தேவை 2024 நாடாளு மன்றத் தேர்தல், அதில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்கான தேர்தல் அது!
ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி ஒற்றைத் தன்மை எதேச்சாதிகார நாடாக மாற்ற நினைக்கக்கூடிய பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்!
பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இத னையே, ஒற்றை இலக்காக திட்டமிட்டு ஒன்றுசேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே, வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்லி விடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசி யலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரசு உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த ஒற்றுமை என்ற அந்த அடிப்படைதான்!
காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது!
இதனை 2021 ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வைத்து கொண்டே நான் சொன்னேன். சாட்சி இருக்கிறார் - அழகிரி அமர்ந்திருக்கிறார், தங்கபாலு அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட் டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதேநேரத்தில், காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சிலரால் சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடை முறைக்கு சரியாக வராது.
Political parties should rise above their differences and stand together as a unified force to defeat BJP in the upcoming parliamentary elections.
Talks of third front are pointless.
I humbly request all the political parties opposed to BJP to understand this simple electoral arithmetic and stand united.
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு- நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு - இன்றுவரை ஒரு செங்கல்லுக்கு மேல் வைக்காமல் தமிழ் நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மொத்தமே 12 கோடி ரூபாயை மட்டும்தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது எட்டுக் கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா? எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு நாட்களைக் கடத்த முடியுமானால் - இவர்கள் தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சமஸ்கிருதத்துக்கு எத்தனைக் கோடி ரூபாய்?
சங்கத் தமிழுக்கு எத்தனைக் கோடி ரூபாய்?
சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குவாய்... சங்கத் தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய்.... என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது யார்? திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொந்தளித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவை எல்லாம் அரசியல் கொள்கைகள். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறை வேற்றி அனுப்பினோம். அதற்குக் கூட இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்திலேயே சூதாட்டம் இருக்கிறதே என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா?
பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!
முறையாக நிதிகளை வழங்குவது இல்லை!
ஜி.எஸ்.டி.க்கு பிறகு நிதி உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை!
இழப்பீடுகளை உரிய காலத்தில் தருவதும் கிடையாது!
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த பெரிய திட்டங்களும் இல்லை!
இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இப்படி, நீண்ட நாள் திட்டங்களைப் புரிந்துகொண்டு அதனுடன் கொள்கை யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம்! அந்தக் களத்தை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்களை வகுக்கும் பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்தத் தகவல்களை டில்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தள மிடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச் என்பது
அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையட்டும்!
BJP is waging a war against the states governed by its opposition parties.
The 2024 General Elections is an opportunity to win our ideological battle.
Let us unite and march towards victory!
நாற்பதும் நமதே! நாளும் நமதே!
நிறைவாக,
கழக உடன்பிறப்புகளுக்கு ஒன்றை மட்டும் அன்போடும் உரிமையோடும் சொல்கிறேன்.... வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவர்க்கும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது.
புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றி யைப் பெற்றாக வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் வழிநடத்திய காலத்தில்
2004 ஆம் ஆண்டு நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றோம்.
கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். அந்த ஒன்றுடன் சேர்த்து நாற்பதையும் நமது அணி மீண்டும் கைப்பற்றியாக வேண்டும். அதற்காக இன்று முதல் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்கு தரக்கூடிய பிறந்தநாள் பரிசாக இருக்கும்!
களம் நமக்காக காத்திருக்கிறது. நாற்பதும் நமதே நாடும் நமதே!
நன்றி! வணக்கம்!
-இவ்வாறு முதலமைச்சர் தமது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
தலைவர்கள் பங்கேற்பு
காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாடு தழுவிய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
இப்பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளு மன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவிற்கு தலைமையேற்ற தி.மு.க. பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் தி.மு.க. தலைவரை வாழ்த்தி தலைமையுரை நிகழ்த்தினார்.
தேசிய கட்சித்தலைவர்களின் வாழ்த்துரை!
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார் ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரேதேச மாநில மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி உள்ளிட்டவர்கள் தி.மு.க.தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியும், தற்போது இந்திய நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தும், அடுத்து நாம் அனைவரும் ஓர் அணியில் திரண்டு இந்த மதவாத ஒன்றிய அரசினை அகற்றிட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் உறுதி பூண்டனர்.
நிறைவாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்தி னார்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேசிய, மாநில கட்சித் தலைவர்கள், ஒன்றிய மேனாள் அமைச்சர்கள், மாநில மேனாள் இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற மேனாள் இந்நாள் உறுப்பினர்கள், திமுக மாவட்ட செய லாளர்கள், பல்வேறு அணிகளின் மாநில அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க. முன்னணியினர், தோழர்கள், மற்றும் கவிஞர்கள், எழுத்தா ளர்கள், பேராசிரியர்கள், முனைவர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் என்று இலட்சக்கணக்கானோர் திரண்டனர்.
No comments:
Post a Comment