திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பன்னாட்டு மகளிர் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பன்னாட்டு மகளிர் நாள்

திருச்சி, மார்ச் 13- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச்செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் மற்றும் பன்னாட்டு மகளிர் நாள் விழா 10.03.2023 அன்று மதியம் 2 மணியளவில் கல்லூரி அரங்கத் தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில் பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம் என்று சிந்தித்த ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் என்றும் அத்தகைய மாபெரும் தலைவரை 94 ஆண்டுகள் பாதுகாத்த இலட்சியத்தாய் அன்னை மணியம்மையார் என்றும் கூறினார். அத்தகைய அன்னை மணிய.ம்மையாரின் பிறந்தநாளினை பன்னாட்டு மகளிர் நாளாக கொண்டாடு வதில் பெரியார் மருந்தியல் கல்லூரி பெருமை கொள்கிறது என்றும் இத்தகைய இருபெரும் விழாவிற்கு, நாகம்மையார் குழந்தைகள் இல்ல பொன்விழா கொண் டாட்டத்தில் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களால் சிறந்த பெண்மணி விருது பெற்று மகளிர் மருத் துவத்தில் மிகப்பெரிய சாதனையாளராக திகழும் மருத்துவர் இரமணி தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் கல் லூரி பெருமையடைவதாகவும் கூறினார். 

பன்னாட்டு மகளிர் நாள் விழாவின் சிறப்பு விருந்தினர்  திருச்சி இராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஜனனி செயற்கை கருத்தரிப்பு மய்யத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் தி. இரமணி தேவி கருப்பை நலம் குறித்து மருந்தியல் மாணவர்களிடத் தில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் அவர்களுக்கு தனது தந்தையார் மருத்துவர் திருநாவுக் கரசு சிகிச்சை வழங்க பெரியார் மாளிகைக்கு செல்லும் போது 10 வயதில் பெரியார் அய்யா அவர்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.  அதுவே தம் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் தந்தை பெரியார் மீது கொண்ட பற்றினால் இராமகிருஷ்ணா மருத்துவ மனையை தந்தை பெரியார் அவர்கள் திறக்க வேண்டும் என்று தங்களது குடும் பம் விரும்பி அய்யா அவர்கள் திறந்து வைத்த பெருமைக்குரிய மருத்துவமனை தான் இராமகிருஷ்ணா மருத்துவமனை என்றும் அதன் நினைவாக பெரியார் அவர்களின் உருவப்படம் மருத்துவ மனையில் தற்பொழுதும் கம்பீரமாக இருக்கிறது என்றும் உரையாற்றினார். 

பெண்களின் உயர்விற்கு அடித்தள மிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனைபுரி கின்றனர். ஆனால் பெண்களுக்கு உள்ள உடல் ரீதியான பாதிப்புக்களை இந்த சமூகம் மிகப்பெரிய அளவிற்கு கொண்டு செல்லும் ஒரு சமுதாய குறைபாடுதான் குழந்தையின்மை. அதுமட்டுமல்லாது அதீத வலி மற்றும் அசவுகரியத்தால் பெண் கள் அவர்களின் தினசரி செயல்பாடுகளை சரிவர செய்யமுடிவதில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் பொரு ளாதார முன்னேற்றமும் பாதிக்கப்படுகின் றது. இதலிருந்து பெண்கள் சமுதாயத்தை காக்க வேண்டும். அவர்களை இச்சமுதாய குறைபாட்டிலிருந்து காக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் இராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஜனனி செயற்கை கருத்தரிப்பு மய்யம் என்று உரையாற்றினார். 

ஒரு நாட்டின் ஆரோக்கியத்தினை தெரிந்து கொள்ள முதலில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு குழந்தை பேறின் போது  இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை தான். அத்தகைய எண்ணிக்கை அதிக மாக இருந்தால் அந்த நாடு நலவாழ்வில் பின்தங்கிய நாடாக கருதப்படும். அந்த அளவிற்கு பெண்கள் நலவாழ்வு மிக முக்கியம். இந்தியாவில், தமிழ்நாடு குழந்தை பிரசவிப்பின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநி லங்களின் பட்டியலில் முதலில் இருப்பது நமக்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும். கருப்பையில் பலவிதமான நோய்தொற்றுக் கள் உருவாகின்றன. அதில் மிக முக்கிய மான ஒன்று கருப்பையை சுற்றிய திசு வளர்ச்சியாகும். 

மாதவிடாயின் போது வழக்கத்திற்கு மாறான அதிக இரத்தப்போக்கு, பொறுத் துக்கொள்ள முடியாத வலி மற்றும் உட லுறவின் போது ஏற்படும் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய இப்பாதிப்பினால் குழந்தையின்மை ஏற் படுகிறது.  மாதவிடாயின் போது கருப் பைக்குள் குருதி உறையப்பெற்று அவை கட்டிகளாக மாறுகின்றன. இதனை சாக் லேட் கட்டி என்று அழைப்பர். இதற்கு மருத்துவ மேலாண்மை, லேப்ரோஸ்கோபி மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச் சைகள் வழங்கப்படுகிறது. சரியான மருத் துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் குழந்தையின்மை பாதிப்பை சரிசெய்து விடலாம். சத்தான சரிவிகித உணவு, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை இளைய சமுதாயம் குறிப்பாக பெண்கள் பின்பற்றினால் இது போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்று உரையாற்றி கருப்பை திசு பாதிப்புக்களை ஒளிப்படக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.  

அதனைத் தொடர்ந்து திருச்சி சுப்ரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மய்யத்தின் தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் அமுதா சொக்க லிங்கம் வளர் இளம் பருவத்தினருக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாண வர்கள் மத்தியில்  கருத்துரையாற்றினார். அவர் தமது உரையில் தமிழ்நாடு அரசு பெண்கள் நலவாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்தி ரைகள், குடற்புழு நீக்க மாத்திரைகள் போன்றவற்றை வழங்கி ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள் வதோடு உடலுக்கு தீமை விளைவிக்கும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியின் முடிவில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க.அ.ச. முகமது ஷபீஃக் நன்றியுரையாற் றினார். இந்நிகழ்ச்சியில் சாமிகைவல்யம் முதியோர் இல்ல பெரியோர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  

முன்னதாக காலை 10 மணியளவில் பெரியார் மருத்துவக்குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து பெரியார் மணியம்மை மருத்துவமனையில் காய்ச்சல் முகாமினை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தியது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

No comments:

Post a Comment