அய்.டி.அய். கல்வித் தரத்தை ஒன்றிய அரசு சீர்குலைப்பதா? சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

அய்.டி.அய். கல்வித் தரத்தை ஒன்றிய அரசு சீர்குலைப்பதா? சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, பிப் 12 அய்டிஅய் கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி முறையை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அய்டிஅய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்ற கிராமப்புற, நகர்ப்புற மேற்படிப்பு படிக்க வாய்ப்பில்லாத 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் இந்நிறுவனங்களில் பயிற்சி பெற்று திறமை வாய்ந்த தொழிலாளர்களாக உருவாகி வருகிறார்கள்.

இவ்வாறு பயிற்சி பெறுவோர்கள் தொழில் முனைவோர்களாக, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து நாட் டின் தொழில் வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அய்டிஅய்-யின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கோடு புதிய தொழிற்கல்விக் கொள்கையினை புகுத்தி, கணிணி வழித் தேர்வு, கணிதம் மற்றும் வரைபடம் பாடத் திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைப்பு, பொறியியல் சார்ந்த அத்தியாவசிய பாடத் திட்டங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.

இதனால் அய்.டி.அய். படித்து செல்லும் இளைஞர்கள் எந்தவித தொழில் நுட்ப அறிவும், நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக (Bond Labour) பணி புரியும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானதாகும்.

தமிழ்நாட்டில் இயங்கும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்திட முதலமைச்சர் ரூ.3200 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு அய்.டி.அய். நிறுவனங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, ஒன்றிய அரசு தொழிற் கல்வியில் புகுத்தியுள்ள புதிய தொழிற்கல்வி முறையை முற்றிலுமாக கைவிட வேண்டுமெனவும், கணிதம் மற்றும் வரைபடம், பாடத்திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைத்ததையும், தேசிய திறன் தகுதி குறைத்ததையும் உடனடியாக திரும்ப பெற்று பழைய நிலையிலேயே பாடத்திட்டங்கள் தொடர வேண்டுமெனவும், என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., பயிற்சி முடித்த பயிற்சியளார்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

மேலும், தொழிற்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்வதற்கு ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழ் நாட்டில் அய்.டி.அய். நிறுவனங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்று நர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டு மெனவும் சிபிஅய் (எம்) வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment