ஆளுநர் பதவியின் பெருமையும் கவுரவமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

ஆளுநர் பதவியின் பெருமையும் கவுரவமும்

[நடுநிலை தவறி அரசியல் செய்பவர்கள் ஆளுநர்களாக கட்டாயமாக நியமிக்கப்படக்கூடாது]

[14-02-2023  'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்]

ஞாயிற்றுக்கிழமை (12.2.223) ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு  நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களில் உச்சநீதிமன்ற  மேனாள்  நீதிபதி ஒருவரும்,  இந்திய  ராணுவ தளபதி ஒருவரும்  அடங்குவர்.  பல மாநில ஆளுநர்களும், ஒரு யூனியன்  பிரதேச துணை  நிலை ஆளுநரும் இட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக, ஜார்ஜ்கண்ட், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள  மாநில ஆளுநர்கள் ஆளும்  ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு  ஆதரவாக  அரசியல் செய்து  வருவது, ஒரு தொடர் முரண்பாடுகளை உருவாக்கி  உள்ளது. ராணுவம்   மற்றும்  நீதித்துறைகள்,  குறிப்பாக அரசியல் நிர்வாகத்துடன்  அவர்களுக்கு  உள்ள தொடர்பு   தரும் தலைப்புகள்,  தக்க  காரணங்களுக்காக,   ஆர்வம்  மிகுந்தவையாக விளங்குபவை ஆகும்.

நீதித்  துறை  நியமனங்களைத்  தங்களின்  கட்டுப் பாட்டிலேயே  வைத்திருக்க  வேண்டும்  என்றும், அத்துடன் நீதிபதிகளை நீதிபதிகளே  நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை பற்றிய விவாதம் ஒன்று  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசியல் நிர்வாகம் பேராவல் கொண்டுள்ளது வெளிப்படையாக தெளிவாகத்  தெரிவதாகும்.  கொலீஜியம்  பரிந்துரைத்த  நீதித்  துறை நீதிபதிகளின்  நியமனங்களை ஒன்றிய  அரசு தேர்ந்தெடுத்து  தேவையின்றி  தாமதப் படுத்தியும், விரைவுபடுத்தியும் உள்ளது. நீதிபதிகளின்  நியமனங்களில்  தங்களுக்கு இல்லாத  அதிகாரத்தை அரசு பயன்படுத்தியிருப்பது இதில் இருந்து மிக நன்றாகவே தெரிகிறது.  ராணுவப்  படைகளை  தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக்  கொள்கிறது என்ற  குற்றச்சாட்டும் பா.ஜ.கட்சியின்  மீது சுமத்தப்பட்டுள்ளது.  இதற்கு  முன்பு கூட,  ஓய்வு  பெற்ற காவல்துறை அதிகாரிகளும் ஒன்றிய  புல னாய்வுத்  துறை  அதிகாரிகளும்கூட  ஆளுநர்களாக  இருந்துள்ளனர். ஆனால்,  2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஆளுநராக நியமிக்கப்பட்டது  ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு உச்சநீதிமன்ற மேனாள் தலைமை  நீதிபதி  மாநிலங்கள் அவைக்கு 2020 இல் நியமிக்கப்பட்டது  அனைவரது புருவங்களையும்  உயர்த்த  செய்தது.

ஆங்கிலப் பேரரசின் நிர்வாக கட்டமைப்பின் ஒரு  பாரம்பரியாக விளங்குவது ஆளுநர் என்ற பதவி. ஒரு ஜனநாயக  நாட்டில், ஆளுநர் ஒருவர் நியமனம் செய்யப்படுவது என்ற   தலைப்பு  பற்றி அரசமைப்பு  சட்ட - சட்டமன்றத்தில்  நீதித்  துறையிலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், எப்படியோ இந்த ஆளுநர் நியமன  நடைமுறை அரசமைப்புச் சட்டத் தில் நுழைந்துவிட்டது.  ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான உறுதியான  இணைப்பு பாலமாக  ஆளுநர் செயல்பட வேண்டும்.  ஆனால்,   ஆளுநர் பதவி வெறும்  அலங்காரப் பதவியாகவே இருக்க வேண்டும் என்றே  நமது  அரசமைப்புச்  சட்ட  பிதாமகர்கள் மிகவும் தெளிவாகவே இருந்துள்ளனர்.  முடிவெடுப்பதில்,  மிகச்  சில சூழ்நிலைகளில் மட்டுமே  ஆளுநர்  தனது  யுக்தானுசார அதிகாரத்தைப் பயன்படுத்துவது  அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த  சில பத்தாண்டுகளாக,  ஆளுநர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள்,  ஒன்றிய  அரசு  மற்றும் மாநில அரசுகளுடனான  உறவுமுறையையும், பொதுவாக  ஜனநாயகத்தையும்,  ஒரு தீவிரமான கேள்விக் குறியாக ஆக்கிவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய  அரசில்  பா.ஜ.கட்சி  செலுத்தி வரும் ஆதிக்கம்  மாநில அரசுகளுடனான  புதிய புதிய பதற்றங்களை  உருவாக்கிவிட்டது,  பிராந்திய  மக்கள்  குழுக்களிடையே  பேரச்சத்தை  ஏற்படச் செய்யும்  ஒரு  தேசிய  ஒருமைப்பாட்டுக் கண்ணோட்டத்தை பா.ஜ.க.  கொண்டிருக்கிறது.

ஆளுநர் பதவிகளை  வகிக்கும் தகைசால் தலைவர்கள் அப்பதவிக்கு  பெருமையையும்,  கவுர வத்தையும்  ஏற்படுத்தித் தருபவர்களாக இருக்க வேண்டும். நடுநிலை தவறி  ஆளுங்  கட்சிக்கு  ஆதரவாக  செயல்படும்  அதிகாரிகளுக்கு  அவர்களது ஓய்வு கால பணி நியமனத்துக்கான  வாய்ப்பாக ஆளுநர்  நியமனம் இருக்கக்கூடாது. அவ்வாறு  இல்லா விட்டால், தாங்கள் இதுவரை வகித்து  வந்த பதவி  மற்றும்  புதிதாக  மேற்கொள்ளப்  போகும் ஆளுநர் பதவி ஆகியவற்றின்  கவுரவத்தைக்  குலைப்பதாகவே அமையும்.

நன்றி:  'தி இந்து'  14-02-2023

தமிழில்:  த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment