இந்தியப் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பாபாசாகிப் டாக்டர் அம்பேதகருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்புச் செயய்திருக்கிறார்கள். அவரே கூறியுள்ளார், “இந்திய அரசியல் சட்டச் சிற்பி டாக்டர் அம்பேத்கருக்கு அவர் செய்த மகத்தான பணிக்காக காலம் கடந்து இந்த சிறப்பு செய்யப்படுகிறது. ஒரு கோயிலைக் கட்டியவனை அக்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதானது கொடுமையிலும் கொடுமையாகும்.”
பார்ப்பனக் கலாச்சாரம் என்பதே அதுதான். உண்ணும் பொருளை விளைவித்துக் கொடுப்பவனை, குடிக்க கஞ்சிக்கு அலையவைப்பதும்; வீடு கட்டுபவன் தெருவோரத்தில், குப்பை மேட்டில் பொத்தல் குடிசையில் குடியிருப்பதும்; பட்டு, பருத்தி, கம்பளி ஆடை நெய்பவன் கந்தலை உடுத் துவதும்; வாக்களிக்கும் மக்கள் கூட்டம் வறுமையில் வாடுவதும் பார்ப்பன வர்ணாசிரம கலாச்சாரத்தினால் காலம் காலமாக விளைந்துவரும் கொடுமையை, பிரதமர் மிக நுட்பமான உதாரணத்தின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.
பார்ப்பனக் கலாச்சாரத்திற்கெதிரான பல நுட்பமான சட்டங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவின் சட்டத் துறையிலும் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களிலும் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டு இந்த சட்டத்தில் ஓட்டை உள்ளது. அந்த சட்டத்தில் உடைசல் உள்ளது என்று சொல்லிக் கொண்டு தற்போதைய அரசியல் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு ஒரே குடும்ப ஆட்சி முறையை நிலைநிறுத்தி, அவர்கள் மூலம் இந்திய அரசியல் சட்டத்தை தூக்கியெறிந்து பார்ப் பன ஆட்சி மறையைக் கொண்டு வர முயன்று தோற்ற பார்ப்பனர்கள் அரசியல் சட்டத்தில் 540 தவறுகள் உள்ளதாக சவடால் பேசினார்கள். ஆனாலும், அவர்களால் செய்யப்பட்ட பல சட்ட திருத்தங்கள் எதிர்மாறான விளைவுகளையே உண்டாக்கி வருகின்றன.
“பார்ப்பனர்கள் படிப்பாளிகளே ஒழிய அறிவாளிகள் அல்ல. படிப்பாளிக்கும், அறிவாளிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது மிகவும் உண்மையாகும். சட்டத்தை மனப்பாடம் செய்தவர்களெல்லாம் நீதிபதியாக உள்ளனர். புரிந்து கொள்ளும் அறிவு திறனற்றுப் போய்விட்டது.
இன்றைய இந்தியாவில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கிடையிலும் இந்திய மக்களாட்சி நிலைத்திருக்கிறதென்றால் அது அரசியல் சட்டததின் வலிமையினால் தான் என்பதை பார்ப்பன பத்திரிகைகளே எழுதுகின்றன. எதிர்ப்பவர்களும் அவர்களே. பாராட்டுபவர்களும் அவர்களே. பார்ப்பனர்களால் நாட்டுக்குத் தேவையான எந்த நல்ல செயலையும் செய்ய முடியாது. யாராவது செய்து வைத்தால் அதை அழித்துக் காட்டுவார்கள் - குழப்பவாதிகள். பிற்போக்கான கலாச்சாரம் கொண்டவர்கள்.
இந்திய மக்களிடத்திலும், அரசியல் சமூகப் பொருளாதாரம் போன்ற பொறுப்பான துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எவரும் எதிர்க்க முடியாதவாறு உண்மைகளை நிலை நிறுத்திச் சென்ற டாக்டர் அம்பேத்கர் மீது பார்ப்பனர்கள் பொறாமைச் சேற்றை வாரியிறைத்து அவர் புகழை மங்கச் செய்து வந்தனர். இந்திய மக்களின் அங்கீகாரம் என்று சொல்லத்தகும் சிறப்பினைச் செய்து, பிரதமர் வி.பி.சிங், பார்ப்பனர் முகங்களில் கரி பூசியிருக்கிறார். இதுநாள்வரை டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று மட்டுமே ஜாதி வெறியர்கள் கூறி வருகின்றனர். இனி அவ்வாறு கூறுபவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வார்கள்.
டாக்டர் பிறந்த ஊர் அம்பேத்வதே என்ற சிற்றூர். ரத்தினகிரி மாவட்டம் மாகூ தாலுக்காவில் உள்ளது. அவர் பி.ஏ. படித்தவுடன் பம்பாயில் நடந்த காங்கிரஸ் போராட்டத்தில் அம்பேத்கர் என்ற பெயரில் ஆங்கில அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கைவெளியிட்டார். அவர்தாயின் பெயர் பீமாபாய். தந்தை பெயர் ராம்ஜிசக்பால் இந்த இருவரின் பெயரும்சேர்க்கப்பட்டு பீம்ராவ் ராம்ஜி என்று டாக்டர் அழைக்கப்பட்டார். பின்னாளில் அவராகத் தன் ஊர் பெயரையும் சேர்த்து பி.ஆர்.அம்பேத்கர் என்று எழுதலானார். பீம்ராவ் ராம்ஜி அம்பேவதேகர் என்பதன் சுருக்கம்தான். பி.ஆர்.அம்பேத்கர் என்பது.
பார்ப்பனர்கள் டாக்டர் சிறு பிள்ளையாக இருந்தபோது, அம்பேத்கர் என்ற ஆசிரியரால் பாதுகாக்கப்பட்டார் என்று பொய்யான தகவலைப் பரப்பி, பார்ப்பனர்களால்தான் டாக்டர் இவ்வளவு பெரிய மேதையாக முடிந்தது என்று வதந்திகளைப் பரப்பி விட்டார்கள்.
1932ஆம் ஆண்டு இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்குப் பிறகு கம்யூனல் அவார்டு என்கிற கழக நீதி ஆங்கில அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘தனித்தொகுதி’ ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டு செட்யூல்டு மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு சுதந்திர மனிதர்களாக தங்கள் தொகுதியை தாங்களே நிருவகித்துக் கொள்ளும் உரிமை பெற வேண்டும் என்பதுதான் சமூக நீதியின் தத்துவம். இன்று இருப்பது போல் கிராமத்துக்கொரு சேரி என்ற இழிநிலைமாறி மற்ற சமூகத்தவர் போல் உரிமை பெற்ற மக்களாக செட்யூல்டு மக்கள் வாழ எண்ணி பாபாசாகிப், சமூகநீதி என்ற கம்யூனல் அவார்டை ஆங்கில ஆட்சியில் பெற்றார். அதன் மூலம் ஒரு புதிய சமூக நீதி தத்துவத்தையே ஏற்படுத்தினார்.
ஆனால், பார்ப்பனர்களும் அவர்களோடு சேர்ந்த ஜாதி வெறியர்களும் காந்தியாரைத் தூண்டி, எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வைத்து, இந்தியாவையே டாக்டருக்கு எதிராகத் திருப்பி பெரும் கலவரத்தை உருவாக்கினார்கள். டாக்டர் அம்பேத்கர் விடாப் பிடியாக இருந்ததால் வங்காளப் பிரிவினைக் கலவரம், நவகாளிக் கலவரம், தேசப் பிரிவினைக் கலவரம் போல் இந்தியா முழுக்க செட்யூல்டு மக்களுக்கெதிரான கலவரங்கள் உருவாகும் சூழ்நிலையை பார்ப்பனர்களும், அவர்களின் அடிமைகளும் உருவாக்கி வைத்தார்கள்.
காந்தியார் இருபத்தோரு நாள் உண்ணா நிலைக்குப் பிறகு கிட்டதட்ட சாகும் தருவாயில் அன்னை கஸ்தூரி பாயும் பிற காங்கிரஸ் தலைவர்களும், சமூகநீதித் தத்துவத்துக்கு மாற்றாக ரிசர்வேசன் என்கிற ஏற்பாட்டைக் கூறி டாக்டர் அதை ஒப்புக்கொண்டு காந்தியாரின் உயிர் பிழைக்கச் செய்தார். முடிவில் தங்களுக்குப் பல விதத்தில் பயன்பட்ட காந்தியாரையே சுட்டுக் கொன்ற குற்றவாளிகளான பார்ப்பனர்கள், டாக்டர் அம்பேத்கரின் ரிசர்வேசன் முறை என்பது இவர்களாலேயே கொடுக்கப்பட்டதாக பீற்றிக் கொள்கின்றனர். செட்யூல்டு மக்களுக்கு தனித் தொகுதி முறையே சிறந்த தீர்வாகும். அதற்காகவே பாடுபட வேண்டும்.
ஆக, இந்த உண்மைகளும் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்டு பொய்யான செய்திகளை நாட்டு மக்களுக்கப் பரப்பி வருவதை புறக்கணிப்பதே நமது கடமை.
- சி.நாராயணசாமி, (டாக்டர் அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர்)
No comments:
Post a Comment