ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்
அறிவு ஆசான் அய்யா பெரியாரை அகிலத்திற்கு அளித்த ஈரோட்டு மண்ணில் இருந்து திராவிடர் கழகத்தின் சமூக நீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரப் பெரும் பயணம், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் தலைமையில் புறப்பட்டு, தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அய்யா பெரியாரின் தலைமாணாக்கராம் நம் அறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில் தொடங்கி உள்ள இந்த எழுச்சிப் பேரணி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் (10.03.2023) ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் பிறந்த கடலூரில் நிறைவு அடைகிறது என்பதும், 40 நாட்களில் 80 பொதுக் கூட்டங்களில் அய்யா கி.வீரமணி அவர்களின் முழக்கம் வெற்றி மணியாய் விண்முட்ட ஒலிக்கிறது என்பதும் இப்பேரணியின் பெரும் சிறப்புக்களாகும்!
“எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாத சுயமரி யாதை சமதர்ம சமநோக்கு இளைஞர்களை உரு வாக்க இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கட்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்பு மிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூக நீதிப் பயணத் திற்கு வாழ்த்துக் கூறி வரவேற்றுள்ளார்.
“90 வயதிலும் 20 வயது இளைஞராய் களத்தில் நின்று தொண்டறம் தொடர்ந்திடும், நம் ஆசிரியர் அண்ணன் வீரமணி அவர்களின் இலட்சியப் பயணம் வெற்றி பெறட்டும்” என்று திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள், வாழ்த்து மலர் தூவி, சமூக நீதிப் பரப்புரைப் பயணத்தை பாராட்டியுள்ளார்!
தமிழ் மக்களும், தோழமை இயக்கங்களின் தலைவர்களும், தோழர்களும், வழிநெடுக காத் திருந்து, பயணக்குழுவினரை வாழ்த்தி, வரவேற்று, சமூகநீதியை வென்றெடுக்க தோள் கொடுக்கவும், துணை நிற்கவும், தயார், தயார் என ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்!
பெரியாரின் கொள்கை முரசமாக தொடர்ந்து ஒலிக்கும் நம் ஆசிரியர் வீரமணியின் வெற்றி மணியின் வயது 80., 1943 ஆம் ஆண்டில், கடலூர் முதுநகர், செட்டிக்கோயில் மைதானத்தில் ‘போட் மெயில்’ என்று அழைக்கப்பட்ட பூவாளூர் பொன் னம்பலனாரும், காஞ்சி டி.பி.எஸ். பொன்னப்பாவும் கலந்து கொண்ட ‘திராவிட நாடு’ இதழுக்கு அறிஞர் அண்ணா அவர்களிடம் 112 ரூபாய் நிதி அளிக்கும் கூட்டத்தில்தான் முதன் முதலாக மேடை ஏறிப் பேசினார் ஆசிரியர் கி.வீரமணி!
இராமலிங்க பக்த ஜனசபை பொது நூலக படிப்பக கட்டடத்தில் ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் அளித்த பயிற்சியினையும், கேரள நண்பர் நடத்திய பகவதி விலாஸ் உணவு விடுதியில் உணவி னையும் சாப்பிட்டு, தம்பு, வேலு, மணிப்பிள்ளை எனும் சுப்ரமணியம், மா.பீட்டர், சண்முகம், ஜெய ராமன், சின்னராஜூ, இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தோழமையினையும் பெற்று; மூத்த அண்ணன் கி.கோவிந்தராசன் அவர்களின் வழி காட்டுதலோடு, கம்பீரமாகப் பேசி, அனைவரின் கைத்தட்டலைப் பாராட்டாகப் பெற்றவர்தான் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி!
இத்தகைய பெருமைக்குரிய நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவரை மேடையில் போடப்பட்டிருந்த மேசை மீது ஏற்றி நிறுத்தி வைத்து, “இப்போது 10 வயது பகுத்தறிவுச் சிறுவன் வீரமணி பேசுவார்!” என அறிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணி அனைவரும் வியக் கும் வண்ணம் சிறப்பாக சொற்பொழிவாற்றினார்.
இதற்கு அடுத்த ஆண்டு கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் (29.07.1944) தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. விருதுநகரில் சுயமரியாதை இயக்கம் வளர்த்த வி.வி.இராமசாமி அவர்கள்தான் மாநாட்டின் தலைவர்; மாநாட்டுத் திறப்பாளர் தந்தை பெரியார்; மாநாட்டில் திராவிட நாடு படம் திறந்து உரையாற்றியவர் அறிஞர் அண்ணா; இந்த மாநாட்டில் சிறுவன் வீரமணி ஆற்றிய சீரிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
“இப்போது பேசிய இச்சிறுவன், காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படி பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியி ருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்ட தெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத் தறிவுப்பால்தான்” என்று அந்த மாநாட்டில் ‘சிறுவன் வீரமணிக்கு’ புகழ் மாலை சூட்டினார் அண்ணா!
அதற்கு அடுத்த ஆண்டில் (1945) சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் கழக மாநாட்டில் இவரின் சொற்பொழிவின் திறன் கண்டு, தங்கமெடலை, ‘சிறுவன் வீரமணி’யின் கழுத்தில் அணிவித்து பாராட்டி பெருமைப்படுத் தினார் அய்யா பெரியார்!
அதே ஆண்டில் (01.05.1945) முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னின்று நடத்திய தென்மண்டல திரா விடர் மாணவர் மாநாட்டில், திருவாரூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து தலைவர்களுடன் மேளதாளம் முழங்கிட மாநாட்டு திடலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பில் இவர் வீர உரையாற்றியதையும் நம்மால் மறக்க முடியாது!
ஓயாத கடல் அலைபோல் - ஒலித்து வரும் இவரின் வெண்கலக்குரல், இப்போது சமூக நீதி பிரச்சாரப் பயணத்திலும் கம்பீரம் குறையாமல் வெற்றி மணியாய் ஒலிக்கிறது! இதற்கான அறிவிப்பைக் கூட, தன்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செய்தியாக வெளியிட்டதுதான் விவரிக்க இயலா வியப்பான செய்தி ஆகும்.
“எனது பணி, வரும் 2023 ஆம் ஆண்டு தொடங்குவதில் இருந்து, நாடு தழுவிய சமூக நீதி போராட்டத்திற்கான ஆயத்த பரப்புரை பயணமாக அமையும். 2023 ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் பிரச்சாரப் பயணம்; மார்ச்சில் பெரும் மக்கள் தொடர் போராட்டம், (1950களில் தந்தை பெரியார் நடத்தி யதைப்போல) இளைஞர்களே, சுடர் ஏந்த வாருங்கள்! மகளிரே, உங்கள் பங்களிப்பும் தேவை அல்லவா? நமது வாழும் நாட்கள் வரலாறு படைக்கும் நாட் களாகட்டும். பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெ டுக்கும் பணிக்கான போர்ச்சங்கை முழங்குங்கள்! அணிவகுத்து பணி முடிக்க ஓடோடி வாருங்கள்” என அழைப்பு விடுத்த பிறந்த நாள் விழா அறிக் கைக்கேற்பவே, ஆசிரியரின் சமூக நீதி விழிப்புணர்வு தொடர்பயணம் நடைபெற்று வருகிறது. பிரச்சாரப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக 02.02.2023 சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை அழைத்து சுற்றுப்பயணத்தின் நோக்கங்களை விளக்கினார் ஆசிரியர் கி.வீரமணி!
“சமூக நீதிக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும், சேதுக்கால்வாய் திட்டம் தொடர வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுப்பதையும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவைகளை தமிழ்நாட்டு இளை ஞர்களுக்கே அளித்திட வற்புறுத்தியும், 10 விழுக்காடு ஏழைகளுக்கு வாய்ப்பு என்ற பெயரில் சமூக நீதிக்கு சவக்குழி எழுப்பும் போக்கை தடுத்து நிறுத்தக் கோரியும், இவைகளைப் பற்றியெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெரும் திரள் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் விழிப் புணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சமூக நீதி சுற்றுப்பயணம் தொடர்கிறேன்” என்று அப்போது விரிவாக எடுத்துக் கூறினார் ஆசிரியர் கி.வீரமணி!
சமூக நீதி பிரச்சார துவக்க விழாவில் கலந்து கொள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ரயிலில் பயணம் செய்தபோது, அதே ரயிலில் பயணம் செய்த, தமிழில் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்று, ஆசிரியர் அவர்களால் பாராட்டப்பட்ட, ரயில்வே அதிகாரி ஒருவர், தான் பயணம் செய்த உயர் அதிகாரி களுக்கான கூபே (தனிபெட்டி)யில் ஆசிரியரை பயணம் செய்ய அழைத்ததையும், பெரியாரின் பெரும் உழைப்பினால்தான், தான் இந்த பணியைப் பெற்றேன் என்று நன்றியுடன் அவர் குறிப்பிட்டதையும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதியின் விளைச்சலாக இதனை விளக்கி முதல் நாள் கூட்டத்தில் பேசினார். அனைவருக்கும் அனைத்தும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சமூக நீதிக் கொள்கைகளை 1928 ஆம் ஆண்டிலேயே சுயமரி யாதை இயக்கத்தின் குறிக்கோளாய் பெரியார் குறிப்பிட்டதையும்,
“அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப் பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும் தானே!”
என்ற பாடலை 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘குடியரசு’ இதழின் முகப்பில் பெரியார் அச்சிட்ட தையும், சமூக நீதிப் பயண பிரச்சார துவக்க விழாவில் நினைவூட்டினார் ஆசிரியர் வீரமணி!
ஈரோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான பிரச்சாரக் களமாகவும் சமூகநீதிப் பயணக் கூட்டம் அமைந்துவிட்டது. ஈ.வெ.கி.சம்பத், ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திருமகன் ஈ.வெ.ரா ஆகிய பெரியார் குடும்பத்தின் குருதி உறவுகள் தேர்தலை சந்தித்த வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, மதவெறி மோடி அரசுக்கு முடிவுகட்ட, தி.மு.கழகத் தின் திராவிட மாடல் அரசுக்கு வலுசேர்க்க,
ஈ.வெ.கி.ச.இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தொடக்க விழா மேடையில், தேர்தல் பரப் புரையை சிறப்பாக செய்து முடித்தார் ஆசிரியர் கி.வீரமணி!
ஈரோட்டைத் தொடர்ந்து கோபிச்செட்டிப் பாளையம், திருப்பூர், காரமடை, பொள்ளாச்சி, உடு மலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, முசிறி, குளித்தலை, பெரம்பலூர், திருவரங்கம், சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம் என எழுச்சி யுடன் தொடர்கிறது சமூக நீதி விழிப்புணர்வு பெரும் பயணம்!
அதிரடி அன்பழகன், வழக்குரைஞர்கள் அ.அருள் மொழி, சே.மெ.மதிவதினி, முனைவர் துரை சந்திர சேகரன், இரா.பெரியார்செல்வன் ஆகியோர் அடங்கிய பிரச்சாரக் குழுவினரும், சமூக நீதி பயணத்தில் பரப்புரை செய்கிறார்கள். வீ.அன்பு ராஜ், இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பேரா சிரியர் ப.சுப்ரமணியன் ஆகியோரின் ஒருங் கிணைப்பில் மருத்துவர்கள், ஒளிப்படக்காரர்கள், ஊடக இயலா ளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், களப்பணியா ளர்கள் ஆகியோர்களின் துணையோடு தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது சமூக நீதிப் பிரச்சாரப் பயணம்!
தமிழ் மக்களோடு இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகமும், ‘சங்கொலி’ ஏடும், சமூக நீதிப் பய ணத்தை வரவேற்கிறது! வாழ்த்துகிறது! பாராட்டு கிறது! நன்றி தெரிவிக்கிறது!
நன்றி: 'சங்கொலி' (17-2-2023)
No comments:
Post a Comment