மின்வாரியம் எச்சரிக்கை! வேலைவாய்ப்பு தொடர்பாக வரும் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

மின்வாரியம் எச்சரிக்கை! வேலைவாய்ப்பு தொடர்பாக வரும் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்

சென்னை, பிப். 22- மீட்டர் ரீடிங் எடுக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் தற்போது 90,700 பேர் பணிபுரிகின்றனர். தற்போதைய நிலவரப் படி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிகா ரிகள் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், களப் பிரிவு பணிகளுக்கு மின்வாரியமே ஆட்களை நேரடியாகவும் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.  அறிவிப்பு வெளியிடவில்லை: ஆனால், இது வரை புதிய ஆட்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலை யில், மின்வாரியத்தில் மீட்டர் ரீடிங் எடுக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இத் தகவல் போலியானது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘‘வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மின்வாரியத்தின் இணைய தளத்திலும், முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்படும். தற்போது, மீட்டர் ரீடிங் எடுக்க பணியாளர் தேர்வு செய்யப்படுவது குறித்து மின்வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இந்த போலியான விளம்பரத்தைக் கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment