சென்னை,பிப்.18- அதானி விவகாரத்தில் பாஜக பங்களிப்பு குறித்த உண்மை வெளிப்பட்டே தீரும் என்று தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் மோடி பொறுப்பேற்றதிலிருந்து அமலாக்கத் துறை, சிபிஅய், வருவாய் புலானாய்வு இயக்குநரகம் போன்றவை அரசியல், கருத்தியல் ரீதியான எதிரிகளை மிரட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி மறுக்கிறார். அவர் தலைமையின் கீழ் நியாயமான விசாரணை நடைபெறும் என்கிற நம்பிக்கை அவருக்கு இல்லை போலும்.
வெளிநாட்டுப் போலி நிறுவனங்களால் பணமோசடி செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளும் அதானி நிறுவனத்தை தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா என்ற கேள்வி எழுகிறது.
மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்த அதானி, 2022-இல் இரண்டாவது இடத் துக்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிஏஜி, சிபிஅய் போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் உண்மை வெளிப் பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது ஆரம்பம் தான். பாஜகவின் உண்மைமுகம் வெளிப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநிலப் பொதுச் செயலர் கே.சிரஞ்சீவி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment