இந்திய துணைக்கண்டத்திற்கே பெரியாரின் கொள்கை தான் வழிகாட்டுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

இந்திய துணைக்கண்டத்திற்கே பெரியாரின் கொள்கை தான் வழிகாட்டுகிறது

அறிஞர் அண்ணா பெரியாரைப் பற்றிச் சொல்லும்போது, ’தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்! பெரியார் திண்ணைப்பள்ளியில் படித்தது மூன்றாண்டு! பெரியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தது இரண்டு ஆண்டு! மொத்தம் பெரியார் படிப்பு என்பது அய்ந்து ஆண்டுதான்! அய்ந்து ஆண்டு பள்ளிக்கூடம் போன பெரியாரை பல் கலைக்கழகங்கள் ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு அறிவுலகம் அவரை ஏற்கிறது! அதனால்தான் பெரியாரை, அறிஞர் பெருந்தகை அண்ணா எப்படி சொல்றாருன்னா, ‘உலகப் பேரறிவாளர்கள் இங்கர்சால், சாக்ரடீஸ், பிராட்லா, ரூசோ இவர்களையெல்லாம் ஒரே சொல்லில் உச்சரிக்க வேண்டும் என்றால், தந்தை பெரியார் என்று சொன்னாலே போதும் இவர்கள் அனைவரும் இதிலே அடங்குவார்கள்’ என்றார். 

அதே முத்தமிழறிஞர் கலைஞர் கவிதையாக எழுதுகிறார். ‘வங்கத்து தாகூர் போல் தாடி உண்டு! பொங்குற்று எழுகின்ற பார்வை உண்டு! தெங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு! வெண்சங்கொத்த விழி இரண்டும் கருவண்டு! அதில் சாகும் வரை ஒளியுண்டு! பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின்! இவரோ படுகிழமாய் ஆனபின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்! எரிமலையாய்; சுடுதழலாய்; இயற்கைக் கூத்தாய்; எதிரிகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய்; இனவுணர்வின் தீப்பந்தத்தின் பேரொளியாய்; எதிரிகளை நடுங்க வைக்கும் கொடுவாளாய்; இறைவனுக்கே மறுப்பு சொன்ன இங்கர்சாலாய்; என்றும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்; ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய் என் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்! நாங்கள் இன்று வரையிலும் பெரியார் இறந்து விட்டதாக சொன்னது கிடையாது. முழக்கம் போடும்போது கூட ’பெரியார் வாழ்க’ என்று தான் சொல்வோம். 

ஏன் தெரியுமா? பெரியாரை நாங்கள் பார்ப்பது ரத்தமும், சதையுமாக அல்ல! ரத்தமும் சதையுமாக பார்க்கக் கூடியவர்கள் தான் இறந்துபோனதாகச் சொல்வார்கள். பெரியார் ரத்தமும் சதையுமாக பார்க்கக்கூடியவரல்ல, தத்துவமாக பார்க்கப்படவேண்டியவர்! உங்களுக்குத் தெரியும் கார்ல்மார்க்ஸ்! அந்த கார்ல்மார்க்ஸ் இறந்தபோது, ’கார்ல்மார்க்ஸ் இன்று முதல் தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என்று தான் உலகிற்கு அறிவித்தனர். பெரியார் மறைந்த போது முத்தமிழறிஞர் கலைஞரும், ‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்’ என்றுதான் எழுதினார். இவர்களெல்லாம் தத்துவத் தலைவர்கள்! வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்கள்! ஆனால், அந்த தலைவரின் தத்துவத்தை உள்வாங்கித்தான் யார் ஆட் சிக்கு வந்தாலும் செயல்பட வேண்டும்! ஆகவே இந்திய துணைக்கண்டத்திற்கே பெரியாரின் கொள்கைதான் வழிகாட்டு கிறது!

    - தஞ்சை இரா. பெரியார் செல்வன்

     அருப்புக்கோட்டை, 23-2-2023


No comments:

Post a Comment