மதவெறிக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான்!
மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேதுக்கால்வாய், மீண்டும் தொடங்கப்பட வேண்டும்!
திருவள்ளூர், பிப்.16, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் 15-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மேனாள் மாவட்ட தலைவர் மோகனவேல், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் டில்லி பாபு, மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர்பேட்டை புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்கவுரை ஆற்றிட நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!
ஆசிரியர் தனது உரையின் தொடக்கத்தில், தனக்கு முன்னதாக பேசிய தி.மு.க. மேனாள் நகர்மன்றத் தலைவர் பாண்டியன், திருவள்ளூர் மாவட்டத்தின் நகர் மன்ற தலைவராக இருந்ததையும், தற்போது அந்த வாய்ப்பு அவரது இணையருக்கு கிடைத்திருக்கிறது. இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி! இது திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று பேசியிருந்ததை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, ”இது செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டத்தில்தான் 1929 இல், முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அதில்தான், ’எல்லா துறைகளிலும் பெண்கள் தலைமை தாங்க வேண்டும்’ என்று தந்தை பெரியார் தீர்மானம் போட்டார். இதோ, இங்கே ஒரு நகர் மன்றத் தலைவராக ஒரு பெண் வந்திருக்கிறார். அதுதான் திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!” என்று அழுத்தமாக குறிப்பிட்டதும் கூட்டத்தினர் உணர்வு வயப்பட்டு கைதட்டினர்.
அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு?
தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு முன்னா லேயே தந்தை பெரியார் இங்கே பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டு, தோழர் சந்திரன், விமல்ராஜ், தந்தை பெரியாருக்கு உதவியாளராக இருந்த திருவள்ளூர் சீனிவாசன் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் அவர், நேற்று முன்தினம் (பிப் 14) செய்திகளில் ஒன்றை நினைவூட்டிப் பேசினார். அதாவது, காதலர் தினத்தின் தாக்கத்தை குறைப்பதாக எண்ணிக் கொண்டு ”பசு அரவணைப்பு தினம்” என்று கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை ஒன்றிய அரசின் ’மிருகங்கள் பராமரிப்பு வாரியம்’ வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அது அரசமைப்புச் சட்ட விரோதம் என்பதையும் தாண்டி, காதலர்களுக்கிடையே மூன்றாம் நபருக்கு என்ன வேலை? என்று கேட்டுவிட்டு, நமது தமிழ்ப்பண்பாட்டில் காதல் திருமணம் உண்டு. ஆரியம் நுழைந்த பின்னர் குழந்தைத் திருமணம் வந்தது. ”பெரியார்” திரைப்படத்தில் இது ஒரு காட்சியாகவே காட்டியிருப்பார்கள். பெண்கள் இன்று நகர்மன்றத் தலைவராக, சட்டமன்றத் தலைவராக, வழக்குரைஞராக, நீதிபதிகளாக வந்திருக்கிறார்களே! என்று அடுக்கிக் கொண்டே போனார். தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் 14 பெண் நீதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இதைத்தானே 'திராவிட மாடல்' என்று சொல்கிறோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். காதலர் தினத்தில், பசு அரவணைப்பு தினமா? அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு? எல்லா மிருகங்களும் ஒன்று தானே? கேட்டால் பசு மாடு பால் கொடுக்கிறதாம். எருமை மாடு அதைவிட அதிகம் பால் கொடுக்கவில்லையா? என்று சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து காவித் தத்துவத்தை துளைத் தெடுத்தார். இறுதியாக, ”பசுவை கட்டிப்புடிக் கணும்னு போனவன் இப்போது மருத்துவ மனையில் இருக்கிறான்” என்று ஒரு பஞ்ச் வைத்தார். வெடிச்சிரிப்புடன் கைதட்டலும் சேர்ந்து கொண்டது.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு!
1899 இல் சென்னையில் பஞ்சமர்களின் நிலை என்ன என்பதை, 124 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையின் நகலை கையில் வைத்து படித்துக் காட்டி, "இன் றைக்கு பஞ்சமர்களுக்கு இடமில்லை சொல்லிப் பாரு, சொல்றவன் சிறையில் இருப்பான்” என்று சீற்றத்துடன் சொன்னதும் அதே சீற்றம் மக்களின் கைதட்டலிலும் எதிரொலித்தது. ஓயவில்லை அவரது சீற்றம். “இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆயாச்சே! என்ன வானம் இடிஞ்சு போச்சா?” என்று ஒரு போடு போட்டார். ஓயாத கைதட்டல்தான்! "கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறதே? இதுவரை 10 பிரதமரைப் பார்த்தாயிற்றே? இதோ திராவிட மாடல் ஆட்சியின் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% கொடுத்துட்டாரே! இது அமைதிப் புரட்சி அல்லவா? அறிவுப்புரட்சி அல்லவா?" என்று முடிக்கும் முன்னே கைதட்டல் தொடங்கிவிட்டது. "பா.ஜ.க. கொள்கை பெண்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது என்று புதிய கல்விக் கொள்கை பற்றி தொடர்ந்து பேசினார். பா.ஜ.க. என்பது எல்லா கட்சிகளையும் போல தனித்து முடிவெடுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். சின் கொள்கையைத்தான் செயல்படுத் துகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்டது? இந்தியாவில் மூன்று முறை மதவெறிக்காக தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். இதை மறுக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் பற்றி விளக்கிப் பேசினார். "சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தி.மு.க. மேனாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் வளர்மதி, ஆசிரியர் நாவுக்கரசு, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி, வி.சி.க. மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், வி.சி.க. அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன், சி.பி.எம்.நகர செயலாளர் உதய நிலா,சி.பி.அய்.மாவட்ட செயலாளர் கஜேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைத் தளபதி சுந்தர், நகர கழக அமைப்பாளர் யுவராஜ், தி.மு.க.9 ஆவது வார்டு செயலாளர் அயூப்அலி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பொருளாளர் பாஸ்கரன், ப.க. பொறுப்பாளர் எழில் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
அரக்கோணத்தில் தமிழர் தலைவர்!
திருவள்ளூர் தோழர்களின் அன்பு மழையிலிருந்து விடுபட்டு, தமிழர் தலைவர் அரக் கோணம் புறப்பட்டார். வழியில் அவருடைய பால்ய நண்பர் சரோஜா ஏகாம்பரம் இல்லம் சென்று சில மணித்துளிகள் இருந்துவிட்டு மறு படியும் புறப்பட்டார். அரக்கோணத்தில் ஆசிரி யருக்கு எழுச்சிகரமான தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்றுக்கொண்டு மேடை யேறினார். அரக்கோணம் அம்பேத்கர் வளைவு முன்பு நடைபெற்ற 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் எல்லப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட அமைப்பாளர் ஜீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார், நகர் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் தீனதயாளன், மாவட்ட துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பிரச்சார அணி செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஆளுநரின் சட்ட விரோதப் போக்கு
தமிழர் தலைவர் உரையாற்றுகையில், அவருக்கு பக்கத்தில் இருந்த பெண் நகர்மன்றத் தலைவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதிலிருந்து உரையைத் தொடங்கினார். அதாவது, "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் கங்கையில் மூழ்கடித்து கொலை செய்தனர்; வங்காளத்தில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்றனர்; வெள்ளைக்காரன் வந்துதானே இதையெல்லாம் தடை செய்தான். குழந்தைத் திருமணம் இருந்ததே. தமிழ்நாட் டிலும் உண்டே. இன்றும் சிதம்பரத்தில் தீட்சி தர்கள் மட்டும் நடத்துகின்றரே" என்று குறிப் பிட்டுவிட்டு, இந்த நிலைமை மாறியிருக்கிறதா? இல்லையா? என்றார். தொடர்ந்து, "பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசுக் கல்லூரிக்கு பெண் படிக்கச் சென்றால் மாதம் 1000 ரூபாய் கொடுக் கப்படுகிறதே! வேறு மாநிலத்தில் இது இருக் கிறதா?" என்று கேள்வி கேட்டார். மக்கள் இல்லை என்பதையே கைதட்டல் மூலம் பதி லாகத் தந்தனர். "இந்த ஆட்சியைத்தானே கலைக்கலாம் என்று பார்க்கிறார்கள். யார் மூலமாக? ஆளுநர் மூலமாக" என்று பதிலுடன் பெண் விடுதலையிலிருந்து மாநில உரிமைகள் பக்கமாக பேச்சைத் திருப்பினார். அப்படியே ஆன்லைன் ரம்மி, அதன் மூலம் நாளும் தற் கொலைகள் நடப்பதை வேதனை யுடன் எடுத் துரைத்து, ஆளுநரின் அரசியல் சட்ட விரோதப் போக்கைச் சொல்லி, இதையெல்லாம் மக்க ளுக்கு விளக்கத்தான் இந்தப் பயணம் என்றார்.
சேது கால்வாய் திட்டத்தை முடக்கிய மூன்று பார்ப்பனர்கள்
தொடர்ந்து ஒன்றிய அரசின் யோக்கி யதையை தோலுரித்தார். அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது. 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால், ஜூம்லா என்று சொல்வது, ஒரு பக்கம் சேது சமுத்திரத் திட்டத்தில் வாய்தா வாங்கிக் கொண்டே, இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று நாடாளுமன்றத் திலேயே சொல்வது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகச் சொல்லி விட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்தது என்று பட்டியலிட்டார். அதற்கு மாறாக 'திராவிட மாடல்' ஆட்சி பற்றியும் கோடிட்டுக் காட்டினார். ஒரு மனிதனுக்கு கல்வியும் சுகாதாரமும்தான் முக்கியம் என்று கூறிவிட்டு, தமிழ்நாடு அரசின் வீடு தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார். சேது கால்வாய் திட்டம் பற்றி பேச வந்தவர், “இருக்கின்ற பாபர் மசூதியை இல்லை என்று சொல்லி இடித்தனர். இல்லாத ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்கின்றனர்” என்ற மதவாதிகளின் புரட்டை புதுக்கவிதை ஒன்றை நினைவுபடுத்தி, அவர்கள் எவ்வளவு ஆபத் தானவர்கள் என்பதை புரிய வைத்தார். சேது சமுத்திரத்திட்டம் முடக்கப்பட்ட தற்கு மூன்று பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து, மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சோ ராமசாமி, சுப்பிரமணிசாமி ஆகியோர் அந்த பார்ப்பனர்கள் என்பதையும் அம்பலப்படுத் தினார். ஏன் அப்படிச் செய்தனர்? என்றொரு கேள்வி கேட்டு, இந்தத் திட்டம் நிறைவேறிவிட்டால், கலைஞருக்கு புகழ் வந்துவிடும். தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து விடுவர் என்ற அற்ப அரசியல்தான் என்று பதிலளித்தார். அதற்காக உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர் என்று கூறிவிட்டு, "உங்களுக்கு தெரியும் உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை. ஆகவே மீண்டும் சேது சமுத்திரத்திட்டம் வரவேண்டும். அது வெகு மக்களின் கருத்தாக மலர வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அடுத்த நாள் பயணத்திட்டத்துடன் நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பினார் தமிழர் தலைவர்!
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர தி.மு.க.துணை செயலாளர் அன்பு லாரன்ஸ், வி.சி.க.ஒன்றிய செயலாளர் சந்தர், வி.சி.க. நகர செயலாளர் அப்பல்ராஜ், ம.தி.மு.க. பொறுப் பாளர்கள் ஆறுமுகம், ஞானப்பிரகாசம், ம.த. கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், சி.பி.அய்.எம். பொறுப்பாளர்கள் சீனிவாசன், துரைராஜ், வெங்கடேசன்,எஸ்.சி.எஸ்.டி.யூனியன் நிர்வாகிகள் எஸ்.வந்தராவ்,கலைநேசன், தலித் மக்கள் முன்னணி நிர்வாகி மோகன், ம.ம.க. நிர்வாகி முகம்மது அலி, வி.சி.க. நிர் வாகிகள் பெருமாள், பாக்கியராஜ், நரேஷ், கதிர்வேல், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர கழக செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார். கழகத் தலைவர் மேற் கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment