பேராசான் தந்தை பெரியார் அவர்களால், பெருந்தலைவர் காமராசர் அவர்களால், அறிஞர் அண்ணா அவர்களால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட சமூக நீதித் தடங்கள், அந்நாளில் நீதிக்கட்சியால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான கட்டமைப்பு, இன்றைக்கு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் நடைபெறுகிற இந்த ஆட்சியின் பாதுகாப்பு மூலமாக சமூகநீதிக் கொள்கை, சமூகநீதித் திட் டங்கள், செயல்பாடுகள் தமிழ்நாட்டைப் பொறுத்தளவிலே பேணிப் பாதுகாக்கப்பட்ட ஒரு நிலையில், நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்க்க, மனம் துணியாமல் சமூக நீதிக்கு எதிராக பேசுவதற்கோ அல்லது சட்ட முறைமைகளைக் கொண்டு வருவதற்கோ அஞ்சுகிற ஒன்றிய அரசு, வேறு வேறு பெயர்களில் இந்த சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதற்காக, சமூக நீதியால் இந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகளை, வளங்களை, பயன்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ’நீட்’ என்ற பெயராலே ஒரு பூட்டைப் போடுகிறார்கள். நீட் என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைக்கக்கூடிய ஒன்று.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயராலே ஹிந்தியைத் திணிக்கவும், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், நமக்கான சமூக நீதியை அழிக்க வேண்டும் என்கிற மனப்பான்மையோடும் ஒன்றிய அரசு செயல்படக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வருகிற 2024 ஆம் ஆண்டைய இந்திய துணைக்கண்டத் தேர்தல், இந்த நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக; பழங்குடி மக்களுக்கு எதிராக பார்ப்பன ஆதிக்கத்தை யும், பணக்காரர்களின் ஏகபோகத்தையும் பாதுகாக்கிற அரசாக ஒன்றிய அரசு இருக்கிற காரணத்தால், மோடி தலைமையிலான அந்த அரசை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டி, அதற்காக முன்னறிவிப்பு செய்வதைப் போலவும், அதற்காக மக்களை தயார்படுத்தத்தான் திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 90 வயதிலும் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். 90 வயதிலே முடங்கிப் போனவர்களைத் தான் உளவியல் ரீதியாக நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், 90 வயதிலும் ஒரு நாளைக்கு இரண்டு ஊர்கள் என்று பொதுக் கூட்டங்கள் வாயிலாக மக்களை சந்தித்து, சமூக நீதிக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற சவால்களை விளக்கி, இந்த சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்கொண்டு போராடக்கூடிய ஆற்றலை துணிச்சலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
- முனைவர் துரை. சந்திரசேகரன்
பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்
தஞ்சை அம்மாபேட்டை, 21-2-2023
No comments:
Post a Comment