அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 15, 2023

அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான்

பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நாடகம் ஒன்றை இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தினர்.  முழுக்க முழுக்க அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களை  இழிவுபடுத்தி நடத்தப்பட்ட நாடகத்தை நடத்திய மாணவர்கள், அதற்கு வசனம் எழுதிக்கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் என 9பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 பெங்களூருவில் ஜெயின் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கலை நிகழ்ச்சி ஒன்றின்போது அதில் கலந்து கொண்ட மாணவர்கள், அம்பேத்கரை பி.ஆர். அம்பேத்கர் அல்ல பீர் அம்பேத்கர் என்றும், தலித் என்று சொல்லாதீர்கள் தா-லித் (படிப்பறிவில்லாத முட்டாள்) என்று கூறுங்கள் என்றும்,  சட்டையைக்கூட அயர்ன் செய்யாமல் வருகின்றார்கள். என்றால் அவர்கள் இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் (அதாவது இட ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் எல்லாம் அழுக்கானவர்கள்) என்றும் நாடகத்தில் வசனமாக எழுதி நடித்துக்காட்டினர். 

அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இது பெரும் அவமானமாக இருந்தது. இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்தக் காட்சிப் பதிவைப் பார்த்த பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அம்பேத்கரை இழிவுபடுத்திய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மீது  சமூகநீதி அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதேபோல் பெங்களூரு சித்தாப்புரா காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நாடகம் சமூகவலைதளத்தில் பரவிய உடனே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை மட்டும் இடை நீக்கம் செய்து அவர்களை சில நாள்கள் மட்டும் வீட்டிற்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டது நிர்வாகம். 

ஆனால் கருநாடக காங்கிரஸ் கட்சியினர் பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்தினர் மீது துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  உயர்கல்விக் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணிடம் கோரிக்கை வைத்த பிறகு விசாரணையை காவல்துறை கையிலெடுத்தது.   .அம்பேத்கரை இழிவு படுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேசிய மாணவர் அமைப்பினர் மற்றும் கருநாடக சமூக நீதி அமைப்பினர் ஜெயின் பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

சங்பரிவார்களின் புத்தி இந்த 2023லும் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நாடகம் ஒன்றே ஒன்று போதாதா? இந்த இலட்சணத்தில் - தேர் தலை மனதிற் கொண்டு அம்பேத்கர் புகழ் பாடுவதுதான் வேடிக்கை!

"உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப் பாட்டினாலும், அணிமணிகளை அணிவித் தாலும் பஞ்சமர்களுக்குப் பிறவியின் அடிப்படையில் வந்த அழுக் கைப் போக்கவே முடியாது" என்று சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார்.  ('ஜிலீமீ பிவீஸீபீu மிபீமீணீறீ')

பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் மவுண்ட் பேட்டனை அனுமதித்தவர்கள், அவருடன் சென்ற அண்ணல் அம் பேத்கரை அனுமதிக்க மறுத்தனர். குடியரசுத் தலைவராக இருந்த மாண்பமை ராம்நாத் கோவிந்த்தையும், குடும்பத் தினரையும் பூரி ஜெகந்நாதன் கோயிலிலும்,  அஜ்மீர் பிர்மா கோயிலிலும் தடுத்து நிறுத்தவில்லையா? இதுதான் இவர்களின் அர்த்தமுள்ள ஹிந்து மதம்!

No comments:

Post a Comment